featued_image

விரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு

auhtor

on
2018-04-23


By :
Oorukaai


770 Views

அவனை நான் தூக்கும்போது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான்.

ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்கு அவன் ஒரு அழையா விருந்தாளி. எப்ப வருவான்.. எப்ப போவான் என்று யாருக்கும் தெரியாது. இன்று அவன் இல்லாவிட்டாலும், அன்று அவனை நான் தூக்கியபோது விரல் சூப்பியபடியே இறந்து கிடந்தான்.

ம்…!

சில ஆண்டுகளுக்கு முன்னர் சங்கரைப்பற்றி எழுதியிருந்தேன்.

இப்போது அதனை மீளவும் பதிவிடுகின்றேன். நாம் கடந்த வலி மறக்கக்கூடியதல்லவே. எனவே மீளமீள நினைத்துக்கொள்வோம். வைராக்கியமாகட்டும்.  

நாங்கள் இரட்டைவாய்க்காலில் வசிக்கும்போது அந்தத் துயரச்சம்பவம் நடந்தது. இரட்டைவாய்கால் பகுதியில்தான் ஈழநாதம் இயங்கிக்கொண்டிருந்தது. ஏப்ரல் மாதம் நடுப்பகுதி இருக்கும் என்று நினைக்கிறேன். அன்று காலை வீட்டிலிருந்து ஈழநாதத்திற்கு சென்று கொண்டிருந்தேன். வீட்டிலிருந்து 300 மீற்றர் கடந்திருப்பேன்,  எனக்குப் பின்னால் எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. அந்நாட்களில் இதுமாதிரியான எறிகணை வீச்சுக்கள் பழக்கப்பட்டவை. எனவே நானும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. பல எறிகணைகள் என்றால் வீழுந்து படுக்கலாம். ஒரு எறிகணை தானே என்று கடந்துவிட்டேன்.

அலுவலகத்திற்கு சென்று சில பணிகளை முடித்தபின்னர்,  பணிமனையில் இருந்து நானும் செல்வராசா அண்ணையும் எறிகணை வீழ்ந்த பகுதிக்கு சென்றோம். அந்த எறிகணை எங்களின் வீட்டுக்கு மிக அருகில் வீழ்ந்து வெடித்திருந்தது. நாங்கள் அவ்விடத்திற்கு செல்லவே சங்கரின் அம்மா கதறி அழுதுகொண்டு இருந்தார்ஐயோ சுரேன்.. விரல் சூப்பிக்கொண்டே செத்துப் போனான். என்ர கடவுளே உள்ளே பாருங்கோ..

சங்கர்

நாலாபக்கமும் தரப்பாளால் மூடிக்கட்டப்பட்டிருந்த கூடாரத்திற்குள் சங்கர் கவிழ்ந்து படுத்திருந்தான். உறங்குவதைப்போல இருந்தான். இறந்து கிடப்பதை நம்ப முடியவில்லை. அருகில்போய், அவனைத் தூக்கினேன்.  அவன் எறிகணை வீழ முதல் தன் வாய்க்குள் வைத்து சூப்பிக்கொண்டிருந்த விரல் கீழே விழுந்தது. கவலை மேலிட அவன் பற்றிய பல நினைவுகள் என்னுள் கிளர்ந்தது. அவனுக்கு சிறுவயதிலிருந்தே விரல் சூப்பும் பழக்கம் இருந்தது. அவன் அதை நிறுத்தவில்லை. அந்தப் பழக்கத்தை அவன் கைவிடவேண்டும் என்பதற்காக நான் பல தடைவகள் அவனது வாயில் சுண்டியிருக்கிறன். அப்படியிருந்தும் அவன் அப்பழக்கத்தைக் கைவிடவில்லை. விரல் சூப்பும் பழக்கத்தினால் அவனின் தம்பி கூட கோபம் வந்தால், சூப்பி எனப் பட்டப்பெயர் சொல்லி அழைப்பான்.

 அவனின்  அப்பா என்னுடன் நல்லுறவுடன் பழகிவந்தார்.  ஈழநாதம் பணிமனைக்கு அருகில் தான் அவர்களின் வீடு இருந்தது. அவர்களின் வீட்டுக் காணியில் விளையும் பலாப்பழம், மாம்பழம், கொய்யாப்பழம் எங்களுக்குத் தருவார்கள். சங்கர் ஓடோடி வந்து தருவான். அவன் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு வந்ததும், ஆடை கூட மாற்றாமலே எங்களின் அலுவலகத்திற்கு வந்துவிடுவான். ஏனெனில் அவனுக்கு கிரிக்கெற் மிகப் பிடித்திருந்தது.

கிரிக்கெற் விளையாடி களைத்ததும், ஈழநாதம் உள்ளிட்ட பத்திரிகைகளில் வரும் படங்களை வெட்டிச் சேகரிப்பதுதான் அவனின் பொழுதுபோக்காக இருந்தது. ஈழநாதம் அலுவலகத்துக்கு யார் வந்தாலும் வாசலில் உள்ள காவலாளியிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் அவன் வந்தால் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

இவ்வாறாக அவனும் ஈழநாதத்தோடு ஒன்றித்து போனான். இப்படியாக எம்மோடு ஒருவராய் இணைந்திருந்த அவனது உடல் அன்றைக்கு அசைவற்று கிடந்தது. கவலை மேலும் அதிகமாகியது.

சங்கருக்கு இரண்டு அக்காமாரும், ஒரு தம்பியும் இருந்தனர். சங்கரும் தம்பியும் விதம்விதமான குழப்படிக்கந்தன்கள். என்னதான் குழப்படி செய்தாலும் அவர்களின் தந்தை பாசத்தோடு அழைத்து வருவார்.
சகோதரர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி செல்லச் சண்டையும் வரும். அப்படி சண்டை நடந்த ஒருநாளில், அப்பா இறந்தால் யார் கொள்ளிவைப்பது என்ற வாக்குவாதம் இடம்பெற்றது. சங்கர் சொன்னான்,எட நான்தான் மூத்தவன். நான் தானே கொள்ளி வைக்கவேணும்அதற்கு இளையவன்,நீ என்ன சொல்லுறாய் எனக்கும் அவர் அப்பா தானே. நான் தான் கொள்ளிவைக்க வேணும்என வாக்குவாதப்பட்டு, இறுதியில் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். வாசலில் சிறிய கிடங்கு ஒன்றை தோண்டி, அதை யாருக்கும் தெரியாதளவுக்கு மறைத்துவிட்டு,  தந்தை வரும் வரைக்கும் கதவுக்கு பின்னால் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். தந்தை வந்து, அந்தக் கிடங்கில் தடுக்கி விழுவார் என்றே நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் உந்துருளியில் செல்லும் போதேஇவங்கள் ஏதோ செய்து வச்சிருக்கிறாங்கள்“ என்று நினைத்துக்கொண்டு கிடங்கிற்கு அருகால் அவர் செல்லவும் மறைந்திருந்த சங்கரும், சகோதரனும்எட தப்பிட்டார்ராஎன்று குரல் கொடுத்தார்களாம்.  இந்தச் சம்பவத்தை அவர்களின் தந்தையே வந்து எங்களிடம் சொல்லி சிரிப்பார்.

இப்படியாக குதூகலமான பிள்ளைகளில் ஒருவரை அந்தக் குடும்பம் இழந்து தவித்தது. அந்தக் குடும்பத்திற்கு அது பேரிழப்பு. எங்களுக்கும்தான்.  ஆனால் என்ன செய்ய முடியும். வீழ்கின்ற ஒவ்வொரு எறிகணையும் பல உயிர்களை குடித்துக்கொண்டுதான் இருந்தது.

எறிகணைத் தாக்குதல் இடம்பெறும் பொழுது சங்கரின் அம்மாவும் கடைசித்தம்பியும் முகம் கழுவுவதற்காக சென்று விட்டார்கள். சங்கர் நித்திரையாயிருந்தான். நித்திரையுடனேயே இறந்துவிட்டான். அவனுக்கு அந்நாட்களில் இறந்த மற்றவர்களைப் போல சாவின் வேதனை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. தலை ஒரு பக்கமும், கை மறுபக்கமும் என சிதைந்துவிட்டது. சங்கரின் தந்தை அன்று காலைதான் நிவாரணம் எடுப்பதற்கு சென்றிருந்தார். அவர்கள் அந்த இடத்திற்கு முதல் நாள்தான் வந்திருந்தார்கள். பதுங்குகுழி அமைக்கும் அளவிற்குக் கூட நேரமிருக்கவில்லை. பதுங்குகுழி அமைப்பதற்கான பொருட்கள் பொக்கணையில் இருக்கின்றதெனவும் அதனையும் எடுத்துக்கொண்டு, நிவாரணத்தையும் எடுத்துவரவே அவர் சென்றுவிட்டதாக சங்கரின் அம்மா எனக்கு சொல்லியிருந்தார்.

உடனே நானும் செல்வராசா அண்ணையும் சங்கரின் உடலை தூக்கி கொண்டுபோய், எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் வைத்தோம். இதற்கிடையில் எனது நண்பர்களும் வந்துவிட்டார்கள். உடனே சங்கரது உடலை சுத்தம் செய்து, வழமையாக அவன் அணியும் ஜுன்சும் சேர்ட்டும் அணிவித்தோம். அதற்குப் பின்னர் சங்கரின் தந்தையைத் தேடிச்சென்றேன். அவனின்  அம்மா சொன்ன இடத்தில் அவர் இருக்கவில்லை. அவர்களின் உறவினர்களுக்கும் நான் எதுவும் சொல்லவில்லை. “பக்கத்தில இருக்கிற சங்கக்கடைக்கு போயிற்றார். அங்கபோனால் பார்க்கலாம்“ என்று அவர்கள் சொன்னார்கள். ஒரு மாதிரியாக சங்கரின் அப்பாவைத் தேடிப்பிடித்து,  அண்ணை வீட்டில ‘செல் விழுந்து சங்கர் செத்திற்றான். மற்ற ஆக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லைஎன்று சொன்னேன்.

உடனே தந்தையை ஏற்றிக்கொண்டு சங்கரின் உடல் வைத்திருந்த வீட்டிற்கு போனோம்.
எல்லோருமே உடனடியாக உடலத்தை அடக்கம் செய்வதைப் பற்றித்தான் கதைத்துக்கொண்டிருக்கின்றனர். சங்கரின் அப்பா என் முகத்தைப் பார்த்தார். எனக்கு விளங்கிவிட்டது. சங்கரை அடக்கம் செய்யவதற்கான அனைத்து வேலைகளையும் விரைவாகச் செய்தோம். நானும் சுகந்தன் அண்ணையும், அன்ரனியும், தர்சனும் அருகில் உள்ள சுடலைக்கு சென்றோம். அங்கே அடக்கம் செய்வதற்கு கிடங்கினை வெட்டினோம். எமது சமய முறைப்படி இறந்தவரின் உடலை எரிப்பது தான் வழமை. ஆனால் அந்த நேரத்தில் சமைப்பதற்கு விறகு கூட எடுக்கமுடியாது. எப்படி எரிப்பது? அதனாலேயே எல்லாரும் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதை புதுவழக்கமாக ஏற்றிருந்தனர்.
நாங்கள் கிடங்கு வெட்டும்போது,  மூன்று அடியில் தண்ணி ஊற ஆரம்பித்துவிட்டது. தண்ணீரை அள்ளி வெளியே ஊற்றிக்கொண்டே இன்னொரு அடி வெட்டினோம். பின்னர் சங்கரை அந்தக் கிடங்கிலேயே புதைத்தோம். சங்கரை அடக்கம் செய்வதற்கு என்னோடு அருகில் நின்று உதவிய நண்பர்களான சுகந்தன், அன்ரனி, தர்சன் ஆகியோர் போரின் இறுதி நாட்களில் இறந்துவிட்டார்கள். அவனின்  அக்காவும் கிபிர் தாக்குதலில் இறந்ததாக எனது நண்பர்கள் சொன்னார்கள். நாட்கள் நகர நகர இருப்பதற்கே இடமின்றி, இறந்தவர்களைப் புதைக்கவும் இடமின்றி, இறந்த இடத்திலேயே கைவிட்டு செல்லவேண்டிய சூழலும், கைவிடப்பட்ட பதுங்குகுழிகளுக்குள் தூக்கிப்போடவேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது.

சுரேன் கார்த்திகேசு

Our Facebook Page

Archives

Leave a Reply