featued_image

சிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா

auhtor

on
2018-07-25


By :
Oorukaai


711 Views

(படம் உதவி : colombotelegraph இணையம்) – உலகளவில் சித்திரவதை செய்வதில் 7 ஆவது தடவையாகவும் முதலிடத்தைத் தக்கவைத்திருக்கிறது இலங்கை. இந்த செய்தி சமூக வலைதளங்களில் ஆரவாரமாகப் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் சமநேரத்தில், தெற்கில் பௌத்த துறவி ஒருவர் பொலிஸ் அதிகாரியொருவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருந்தார்.

இந்தச் சம்பவம் உலகிற்கு எதைச் சொல்கிறது எனில், “இலங்கையாகிய நான் எவரின் கருத்தையும், அவதானிப்பையும், கட்டுப்பாடுகளையும், மனித நேய விழுமியங்களையும் கணக்கிலெடுக்கமாட்டேன். உன்னால் முடிந்ததை செய்துகொள்“ என்பதையே. அதாவது கோட்டபாயயிசத் தோரணையில் சர்வதேச அரங்கின் முன் தன்னை விடாப்பிடியாக வலியுறுத்தி அமர்கின்றது இந்தத் திருநாடு.

இந்த மனநிலை இந்த நாட்டுக்கு எப்படி வந்தது?

மகாவம்சத்திலிருந்துதான்.  இலங்கையின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் படித்தவர்களே மிக இலகுவாக இந்தப் பதிலை வழங்கிவிடுவீர்கள். இலங்கையின் வரலாற்றையும், அதன்வழியே பௌத்த சிங்கள பெருந்தேசியவாத எண்ணத்தையும் உருவாக்கியிருக்கும் மகாவம்சம், இலங்கையில் வாழும் சிங்களவர் தவிர்ந்த பிற இனங்கள் மனிதர்களே அல்ல எனப் போதிக்கிறது. அவர்களைக் கொல்வது பாவச்செயல் அல்ல என்றும், அது இம்மைக்கும் மறுமைக்கும் புண்ணியம் சேர்க்கும் செயல் எனவும் கற்பிக்கிறது.

மன்னன் :- “மரியாதைக்குரியவர்களே! பல லட்சக்கணக்கான மக்கள் உயிர்கள் இழக்க காரணமாயிருந்த எனக்கு எவ்வாறு ஆறுதல் கிடைக்கும்?”

பிக்குக்கள் :- “நீ சுவர்க்கம் செல்ல இந்த ஒரு செயல் தடையாக இருக்காது. உன்னால் ஒன்றரை மனிதரே உயிரிழந்தனர். பௌத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும்,தீயவர்களுமான ‘மற்றவர்கள்’ மிருகங்களைபோல கருதப்படவேண்டும்”–    மகாவம்சம் 25ம் அத்தியாயம், 19 வரி-

எனவே அந்தப் போதனைகளின்படி வளர்ந்த ஒருவரிடம் அல்லது ஓரினத்திடம், சித்திரவதைகள் செய்யக்கூடாது, அதெல்லாம் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் எனப் போதிப்பது எப்படி? அப்படியான போதனைகள்தான் அவரிடத்தில் எடுபடுமா?

மனித குலத்திற்குப் பொருத்தமான இந்தப் போதனைகள் எடுபடாததன் விளைவுதானே, 1956 ஆம் ஆண்டு கலவரம், 1977 ஆம் ஆண்டு கலவரம், 1983 ஆம் ஆண்டு இனச் சுத்திகரிப்பு, 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை. எனவே மகாவம்ச போதிப்பில் மாற்றம் நிகழாதவரை சிங்கள அடிப்படைவாதத்தில், சர்வதேச ரீதியாக எடுக்கப்படும் எந்தத் தீர்மானங்களும், தடைகளும், தரப்படுத்தல்களும் விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை. 7 ஆவது தடவையென்ன 700 ஆவது தடவையும், இலங்கை திருநாடு சித்திரவதையில் முதலிடம் பிடிப்பது பெரும்பான்மையினருக்கு ஒரு பொருட்டேயல்ல.

எனவே இந்தப் பொதுப்புத்தியை விளங்கிக்கொண்டு, இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான சித்திரவதைகள் யாருக்கெதிராக, ஏனெல்லாம் புரியப்பட்டன எனப் பார்த்துவிடுவோம்.

  1. கலவரங்களின்போதும், கலவரத் தூண்டல்களின்போதும்.

1983 ஆம் ஆண்டு கலவரத்தின்போது சிக்குண்டு, சிங்களக் காடையர்களிடம் அகப்பட்ட தமிழ் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு, உயிருடன் இருந்த சிசு வெளியே எடுக்கப்பட்டு, கொதிக்கும் எண்ணெய்த்தாச்சியில் போட்டபட்ட குரூரத்தையும் கடந்திருக்கிறோம். இவை மட்டுமே அந்தக் கலவரங்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் அல்ல என்பதை படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு நினைவு வரலாம்.

  1. கைதுகள், சிறையிலடைத்தலின்போது

எனது இரண்டு கண்களும் தமிழீழத்தைக் காணவேண்டும் என ஆசைப்பட்டதற்காகவே போராளி குட்டிமணியின் கண்கள் உயிருடன் தோண்டப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். படித்திருக்கிறோம். அதற்குப் பிறகு அரசியல் கைதியாக இருந்து, தம் விடுதலைக்காக சிறைக்குள்ளிருந்தே குரலெழுப்பிய நிமலரூபன், டில்ருக்சன் போன்றோர் அடித்தே கொல்லப்பட்டதை செய்திகளில் படித்திருக்கிறோம் அல்லவா. பிந்துனுவெவ, வெலிக்கடை, பூசா என சிறைக்கூடங்கள் சித்திரவதைக்கூடங்களாகி, படுகொலைக்கூடங்களான வரலாற்றையும் வைத்திருக்கிறோம் அல்லவா?

“…என்னை முதலில் ஒரு சித்திரவதைக்கூடத்து 5 பேர் இழுத்துப்போனார்கள். அந்த அறையில் கம்பிகள், குழாய்கள், குறடு எனப் பல பொருட்கள் இருந்தன. என்னைத் தலைகீழாக கட்டித்தொங்கவிட்டு, பெற்றோலால் நிரப்பப்பட்ட பொலித்தின் பையை என் தலைக்குள் செலுத்தினர். நான் மூச்சுத்திணறி மயங்கினேன்.

என் மலவாசல் வழியாக இரும்புக் கம்பியை, முட் கம்பியை செலுத்தினார்கள்.

மலவாசல், வாய் முதலானவற்றில் புணர்ந்தார்கள்…” இந்த வசனங்கள் இலங்கையின் சித்திரவதைகள் குறித்து வெளியான ஆவணப்படங்களில் தோன்றிய சாட்சியங்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலங்களில் இருந்து பெறப்பட்டவை. இவற்றைக் கேட்கும்போது, என்னமாதிரியான குரூர மனநிலை கொண்ட மனிதர்கள் வாழும் நாட்டில் வாழ்கிறோம் என்ற வெறுப்புணர்வு நமக்கே வருகிறதல்லவா? அதைத்தான் மகாவம்ச மனநிலையும் பிற இனங்கள் மத்தியில் உருவாக்க முயல்கிறது. அதாவது பெரும்பான்மையினத்தைக் கண்டாலே, இலங்கையில் வாழும் சிறுபான்மையினத்தவர் அலறி ஓடவேண்டும் என்ற மனநிலையை உருவாக்க முயல்கிறது. சிறுபான்மையினரை எப்போதும் ஒரு பயப்பீதியில் உறைந்திருக்க வைக்கிறது.

  1. கடத்தல்களின்போது

கடந்த காலங்களில் வெள்ளைவான் கடத்தல்களின் சொர்க்காபுரியாகவே இலங்கை இருந்து வந்ததை நம்மில் பலர் மறந்திருக்கமாட்டோம். நடுநிசியில் அம்புலன்ஸ் வண்டி அவசரமாக உயிர்காவச் சென்றாலே குலைநடுங்கும் இரவுகளைக் கொண்டிருந்த இனமொன்றின் எச்சங்கள் நாம். எனவே அந்தப் பீதிக்குள்ளாக்கும் சித்திரவதைகளை அவ்வளவு இலகுவில் மறந்திருக்கமாட்டோம்.

மட்டக்களப்பின் எல்லைக் கிராமம் ஒன்றில் வசிக்கும் மூதாட்டி ஒருவரை சந்தித்தபோது இப்படி விவரித்தார்.

”எங்கட குடும்பத்தில அஞ்சு ஆம்பிளகள். என்ர இவர் (கணவர்) அப்பா, 14 வயது, 12 வயது, 9 வயது மகன். இவ்வள பேரும் அன்றைக்கு இரவு சாப்பிட்டுப்போட்டு இருந்தனாங்க. இரவு 7 மணியிருக்கும். எங்கட படலைக்கிட்ட வெள்ள வாகனம் ஒண்டு வந்து நிண்டது. இவர் எழும்பி எட்டிப்பார்த்தார். அப்பிடியே கழுத்தைப் பிடிச்சி  இழுத்துக்கொண்டுபோய் வாகனத்துக்குள்ள வீசினாங்கள். அதுக்குப் பிறகு அப்பா விடச்சொல்லப்போனார். அவரையும் வாகனத்துக்குள்ள தள்ளினாங்கள். பெரிய சத்தமா அழுதார் அப்பா. அதைப் பார்த்து பயந்து என்ர 3 ஆம்பிளப் பிள்ளையளும் அழுதாங்கள். வீட்டுக்குள்ள வந்து 3 பேரையும் தறதற எண்டு இழுத்துக்கொண்டு போனாங்கள். கடைசியின்ர கைய, கால பிடிச்சி இழுத்துப் பறிபட்டன். அவங்கள் ஒரேதா இழுத்து வாகனத்துக்குள்ள போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். என்ர வீட்டில இருந்து அஞ்சு ஆம்பிளைகளும் அந்த வாகனத்துக்குள்ள கிடந்து கதறியழுறாங்கள். வாகனம் போயிற்றுது. அவங்கள் அழுத சத்தம் இப்பவும், இரவுக்கு என்ர கேற்றடியில கேட்கும்.  கடத்திப்போனவங்கள் போனவங்கள்தான். ஒரு முடிவும் இல்ல“ – எனத் தன் கதையைச் சொன்ன தாயை அந்த ஊரே விசர் மனிசி என்றுதான் முகவரியிடுகிறது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்களில் காணாமல்போனவர்களுக்கு இடம்பெற்ற சித்திரவதைகள் பற்றி எந்தத் தகலும் இல்லை,  திருகோணமலை கடற்படை முகாமில் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி சித்திரவதைக்கூடங்களைத் தவிர.  ஆனால் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு  செய்யப்பட்ட சித்திரவதைகள் மிக ஏராளம். 500 ஆவது நாளையும் கடந்து கடத்தப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் எனக் கோரி  இரவு பகலாக தெருக்கிடக்கும் அந்தத் தாய்களுக்கு நடப்பதும் சித்திரவதைதான். அவர்களை உயிரோடு மெல்லமெல்ல கொன்று ரசிக்கும் மனநிலையை இந்த அரசும் ஏற்படுத்தித்தந்திருக்கிறது.

  1. போரின்போது சரணடைந்தவர்களுக்கு

போரின்போது நிராயுதபாணிகளாக சரணடைபவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும் என்பதும், அவர்களின் உயிர் பாதுகாக்கப்படவேண்டும் என்பது போரியல் நியமம். இலங்கையில் இடம்பெற்ற 30 வருடப் போரில் இந்த நியமம் எங்கேயும் பின்பற்றப்பட்டதற்கு ஆதாரமில்லை. போரென்றால் கொல்லுதல்மட்டும்தான் எனப் போதனை பெற்றிருக்கும் இலங்கை இராணுவத்தினர் நூலளவும் அதிலிருந்து விலகியதில்லை. 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது அதன் உச்சகட்ட பொறிமுறைகளை இராணுவம் வெளிப்படுத்தியிருந்தது. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்வர்கள் மீது இரசாயன குண்டுத்தாக்குதலே நடத்தப்பட்டிருக்கிறது என சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டிருக்கின்றன. பெண்கள், சிறுவர்கள் என அனைவருமே நிர்வாணப்படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். காயப்பட்ட போராளியொருவரை துடிக்கத்துடிக்க கழுத்தை அறுத்துக் கொல்லும் வீரர்களையும் வீடியோ படங்களில் பார்க்கக்கிடைத்தது.

இவ்வளவு சித்திரவதைகளையும் செய்துவிட்டு, அண்மையில் கிளிநொச்சியில் புலியொன்றை அடித்துக்கொன்ற தமிழர்களை, காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள், மிருகத்தனமிக்கவர்கள் என்றெல்லாம் பெரும்பான்மையினர் பெருங்கூச்சலிட்டனர். அவர்களின் கூச்சல்களின் கொஞ்சம் கூட வெட்கமிருக்கவில்லை. கூச்சமிருக்கவில்லை. அதுவே மகாவம்சம் போதித்திருக்கும் போதனை. அகிம்சையையும், கொல்லாமையையும் பின்பற்றச்சொல்லும் பௌத்தம் கற்பித்திருக்கும் அறிவு.

நன்றி – எதிரொலி

Our Facebook Page

Archives

Leave a Reply