featued_image

செழுமையான சூடடிப்பு |ஜெரா

auhtor

on
2019-02-06


By :
Jera Thampi


89 Views

இன்றைய நிலையில், தமிழ் பண்பாட்டு சூழலில் மரபார்ந்த தொழில்முறைகள் வழங்கொழிந்துவிட்டன. மருவிவிட்டன. மாற்றங்கண்டு விட்டன. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களில் அனேகம்பேர் வேளாண்மையில் ஈடுபடுபவர்கள். அதனை வெள்ளாண்மை என்றே அழைப்பது மரபு. அத்தகைய வெள்ளாண்மை இப்போது அறுவடையாகும் காலத்தை அதாவது அரிவவெட்டும் காலத்தை எட்டியிருக்கிறது.

பச்சைப் பசேல் என்றிருந்த வயல்கள் மஞ்சள்வெளிகளாகக் காட்சியளுக்கும் காலம். ஆங்காங்கே நெல்வெட்டும் மெசின்கள் வயல்களுக்குள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. வயல் உரிமையாளரும், சில கூலியாட்களும் மெசினுக்கு உதவியாக, அதன்பின்னால் ஓடிக்கொண்டிருகின்றனர்.

உடுவில் வயல்வெளி. அது முருகையாக சிவானந்தம் ஐயாவின் வயல்பகுதி. மூன்று பெண்களும், ஒரு ஆணும் குனிந்த தலை நிமிராமல் அரிவாளால் நெற்கதிர்களை அறுத்துக்கொண்டிருக்கினர். ஒரு கைப்பிடியளவு நெல்கதிர் அறுக்கப்பட்டு கைக்குள் சேர்ந்தபின்னரே அவருக்கு நிமிர்வதற்கு அவகாசம் கிடைக்கிறது. நாரிநிமிர்த்தி கதிர்பிடியை தனக்குப் பின்னால்வெளியாகும் வயற்தரையில் நேர்த்தியாகப் பரவிவிட்டவாறே குனிந்தகுனியில் முன்னகர்கிறார்.

இந்தச் சம்பவம், அந்த வயல்வெளிக்கு குறுக்கறுக்கும் தார்வீதியால் பயணிப்பவர்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கிறது. 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் விவரம் பெற்ற தலைமுறையினருக்கு இவ்விதத்திலும் நெல்லறுக்கலாம் என்கிற அறிதல் அப்போதுதான் ஏற்படுகிறது. சிலர் தம் குழந்தைகளோடு வீதியில் நின்று விடுப்புப் பார்த்து, இம்முறையில் நெல்லறுத்தலை விளங்கப்படுத்தியும், தம் கடந்தகாலத்தை நினைவுபடுத்தியும் செல்கின்றனர்.

“எல்லாரும் மெசின்ல வெட்ட நீங்கள் மட்டும் ஏனய்யா கையால வெட்டுறியள்?

வயலின் ஒரு பகுதியில் விரிக்கப்பட்ட படங்கின்மேல் சூடுவைக்கப்பட்டிருக்கும் நெற்கதிரிகளின் மேல் மிகவேகமாகவும், நிதானமாகவும் தன் TAFE 45 ஊழவு இயந்திரத்தால் வட்டமடித்துக் கொண்டிருக்கும் சிவானந்தம் ஐயா அதனை நிறுத்திவிட்டுஇ இறங்கிவந்து அமர்கிறார். அவருக்கு வயது 65. வேலையின் துடிப்பில் 25ஐ மிஞ்சிவிடுகிறார்.

“தண்ணி குடியப்பு” என்றவாறே தன் உமல்பையிலிருந்த சோடாப்போத்தலில் நிரப்பியிருந்த தண்ணீரை நீட்டுகிறார். தலையில் கட்டியிருக்கும் வெண்தலைப்பாகையை அவிழ்த்து முகத்தைத்துடைத்தவாறு, “ நானும் மற்ற வயலுகள் மெசின்லான் வெட்டின்னான். இந்த வயலுகள் நெல் படுத்திற்று. அதனாலதான் ஆக்கள கொண்டு வெட்டுறன். ஆக்கள கொண்டு வெட்டினால் இப்பிடித்தானே சூடடிக்கவேணும். என்ன இப்பிடி அடிக்கேக்க எங்கட பழைய வாழ்க்கையெல்லாம் நினைவூக்கு வந்துபோகும்” என்கிறார். அவரின் பொக்கைவாய் சிரிப்பில் அவ்வளவு அழகு தெரிகிறது.

நான் 13 வயசில இருந்து வெள்ளாண்மை செய்யிறன். முதல் மாட்டிலதான் சூடடிக்கிறது. ஊர் சொந்தங்கள், பந்தங்கள், பக்கத்து வயல்காரர் எல்லாம் சேர்ந்து அரிவிவெட்டுவம். அரிவிவெட்டமுதல் பொங்கல்செய்து படைச்சித்தான் தொடங்குவம். திருவிழா மாதிரி இருக்கும் அந்தநாள். பிறகு ஒரு கிழம காயவிட்டு, ஓலைப்பாய வண்டிலில் கட்டிக்கொண்டுவந்து விரிச்சிப்போட்டு, அதில் நெற்கதிரப்போட்டு நாலைஞ்சு மாடுகள பிணைச்சி விட்டு வட்டமாக திரத்துவம். மாடு சாணகம் போட்டால் அதைப் பிடிச்சி, வைக்கோலட எரிச்சித்தான் திருநீறு செய்யிறது. சூடடிப்பு முடிய, கஸ்ரப்பட்ட சனங்களுக்கு ஒவ்வொரு சுளகு தானங்குடுப்பம். இப்ப தானம் வாங்கவே சனம் இல்ல. எல்லாரும் வசதியாகிற்றினம்.

இப்ப ஏன் எல்லாரும் மெசினுக்கு மாறிட்டியள்? எனும் கேள்வியும் வந்தது.

ஆக்கள் இல்ல. எல்லாரும் வெளிநாட்டுக்போயிற்றினம். கூலியாள் பிடிக்கிறது குறைவு. இந்த வேலை கஸ்ரம் என்று வராதுகள். இப்ப இவ்வள கஸரப்பட்டு விளைவிச்சும் பயனில்ல. ஆட்டக்காரி போனவருசம் 3000 ரூபாய்க்கு எடுத்தாங்கள். இப்ப 1350ருபாயாம். ஆனால் அரிசியின்ர விலை 80க்கு குறையிதில்ல. இன்னும் குறையுமெண்டிறாங்கள். இப்பிடிப்போனால் வெள்ளாண்மையில் ஒரு லாபமுமில்லை. முறையான அரசாங்கம் நெல்லுக்கு ஒரு விலைநிர்ணயத்தப்போடவேணும். இல்லாட்டி என்னோட வெள்ளாண்மையூம் சரி” என்ற அங்கலாய்ப்பான பேச்சுடன் உழவு இயந்திரத்தை தொடங்கிக்கொண்டு சூடடிப்பைத்தொடங்கினார்.

அரிவிவெட்டிவிட்டு உழவு இயந்திரத்தின் பெட்டியின் நிழலிருந்து உணவருந்திக்கொண்டிருக்கும் ரோகினி அக்காவிடம் பேச்சைக்கொடுக்க, “ இப்பயெல்லாம் இந்த வேலைக்கு ஆக்கள் பிடிக்கிறது கஸ்ரம். வெயில், குனிஞ்சி நிற்கவேணும், சம்பளம் குறைவு என்றுபோட்டு மேசன் வேலைக்குப் போயின. இங்க ஒரு பரப்பு வெட்டினால் 1000 ரூபா தருவினம். புல்லு கூட என்றால் வெட்டுற அளவு குறையும். நேற்றெல்லாம் 645 ரூபாதான் சம்பளம். போனவருசம் மெசினில் வெட்டினதால வயல்முழுதும் புல்லுபரவிற்று. வெட்டுறது சிரமம். நாங்கள் ஒருநாளைக்கு 10 பரப்பு வெட்டுவம். இதேநேரம் வேற கூலி வேலைக்குப் போனால் பொம்பிளையளுக்கு 700 ரூபா குடுக்கினம்.. முதலெல்லாம் அரிவுவெட்டென்றால் எங்களத்தான் நம்பியிருந்திச்சினம். இப்ப மெசினத்தானே நம்புகினம்” என்றார்.

சூடடிப்பின்போது வன்னி பெருநிலத்திலும் சில நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றன. நெல் அரிவு வெட்டுக் காலத்தின்போது வெட்டில் ஈடுபடுபவர்களுக்கு அப்பம், பிட்டு முதலான உணவுகள் வழங்கப்பட்டன. மதிய வேளைகளில் சாடிகளில் நிரப்பப்பட்ட பனங்கள்ளும் வழங்கப்பட்டதோடு, இசை, பாடல், கதைகளுடன் மிகவும் கலகலப்பான முறையில் அரிவிவெட்டு இடம்பெற்றது. அரிவி வெட்டு நிறைவுற்றதும், சூடுவைத்தல் என்பதனை மேற்கொள்வர்.

வெட்டப்பட்ட நெல்லானது பதமான அளவில் வெயில் காய்ந்ததும் மழை, பனி முதலான நீர்த்தாக்கங்களில் இருந்தும், எலி, கிளி முதலானவைகளிலிருந்தும் பாதுகாப்பு பெறும் நோக்குடன், வட்டமான முறையில், நேர்த்தியாக அடுக்கப்படும். இதனையே சூடுவைத்தல் என்பர். இவ்வாறு சூடுவைப்பதில் மிகவும் சாதுரியமாக செயற்படும் ஆணுக்கும், அரிவு வெட்டின்போது, நிமிராமல் ஒரே மூச்சாக வெட்டிமுடித்துத் தன் வேலைத் திறமையைக் காட்டும் ஆணுக்கும் அந்த வயல் உரிமையாளனான விவசாயி தன் மகளை மணமுடித்துக் கொடுக்கும் சமூக வழக்காறும் வன்னியின் புதுக்குடியிருப்பு கிராமத்தில் இருந்துள்ளது. சூடுவைக்கப்படும் நெல்மணிகள் வைகாசி மாதம் வரை கிடப்பில் போடப்படும். இயற்கையாகத் தூற்றிக் கொள்ளும் வசதிக்காக வைகாசி மாதக் காற்றைக் கவனித்தே சூடடிப்பில் ஈடுபட்டனர்.

ஆரம்ப நாட்களில் விவசாயிகள் கைகளினாலேயே பெரிய தடிகளைக் கொண்டு சூடடித்தனர். பின்னர் காட்டு மாடுகளைக் கொண்டு சூடடித்தனர். சூடடிப்பு முறையும் வயல்வெளியின் தட்டையான நிலப்பரப்பிலேயே மேற்கொள்ளப்பட்டது. வயலின் சூடடிப்பு இடம்பெறப்போகும் பகுதியை சில நாட்களுக்கு முன்னரே செதுக்கி, சாணத்தால் மெழுகி தூய்மைப்படுத்துவர். பின்னர் அந்த வெட்டையில் நடுகட்டை நட்டு நெற்கதிர்களை இட்டு, ஒன்றுக்கு மேற்பட்ட சோடி காட்டுமாடுகளை வட்டமாக சுழறவிடுவர். மாடுகள் நெற்கதிர்களை மிதிக்கும் போது அந்தக் கதிர்கள் மெழுகப் பட்ட நிலத்தைவிட்டு விலகும். அவ்வாறு விலகும் நெற்கதிர்களை வேலைகாரன் தடிகொண்டு கூட்டி சூடடிப்புக் களத்துக்குள் தள்ளிவிடுவர். (வேலைகாரன் தடி என்றால், 4 அடி உயரமான, அடிப்பகுதி அரையடி முக்கோண வளைவான மெல்லிய தடியாகும். காட்டில் இயற்கையாகவே வளைந்திருந்கின்ற அவ்வாறான தடிகளைத் தேடி வெட்டி, சீவி, காயவைத்துப் பயன்படுத்துவர்) மாடுகளில் கால் மிதிப்பினால் நெல் உதிர்ந்து நிலத்தில் கொட்டும். மறுநாள் முக்காலி கட்டி அதில் குல்லத்தினால் தூற்றி பொலிக்கொடியினால் (வைக்கோல்) பட்டறை வரிந்து ஒவ்வொருநாளும் சூடு மிதித்த நெல்லை சேகரிப்பர்.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட நெல் குத்தகைகாரர்களுக்கும், (இருப்பின்) வயிலில் வேலை செய்தவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படும். விதவைகள், அநாதரவானவர்களுக்கு சுளகுக் கணக்கிலும், கடகப் பெட்டிக் கணக்கிலும் சூடடிப்புக் களத்தில் வைத்தே நெல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் எஞ்சிய நெல் ஊரில் இருக்கின்ற பலரதும் மாட்டு வண்டில்களில் ஏற்றி வரிசையாக வீட்டுக்குக் கொண்டுவரப்படும். அவ்வாறு கொண்டுவரப்பட்ட நெல், வீட்டுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் கொம்பறை எனப்படும் நெல்தானிய சேமிப்புக் கலத்தில் இட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். 10 தொடக்கம் 12 அடி உயரத்திற்கு வட்டவடிவானதாகக் கழுத்தற்ற பானை போன்ற அமைப்புடையதாய் கம்புகள் வைத்துக் கட்டப்படும் ஓர் அமைப்பாகும். இதற்குள் நெல்லைப் போட்டு வட்டவடிவான குடிலால் மூடி நெல்லைப் பாதுகாப்பார். இவற்றினுள் 500 மரக்கால் அளவு நெல் சேமிக்கப்படும்.

சூடடித்து முடிந்ததும் வயலில் மிஞ்சும் வைக்கோலை பொலிக்கொடி என்றே அழைத்தனர். அந்தப் பொலிக்கொடி உடனடியாகவே வயலில் மிக அழகான முறையில் கற்றையாக (கத்தை) பிடிக்கப்படும். அதனை வட்டமாக வயல்வெளியெங்கும் அடுக்கிவைப்பர். ஒவ்வொரு வயலிலும் மஞ்சள் மலைகள் போல பொலிக்கோடி கும்பல்கள் காணப்படும். அதனைப் போர் என அழைப்பர். அவ்வாறு அடுக்கப்பட்ட பொலிக்கொடி வீடு மேய்ச்சலுக்குப் பயன்பட்டது. அத்துடன் வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு உணவாகவூம் போடப்பட்டது.

இவை தமிழர்கள் பின்பற்றிய தொழில்முறையின் மரபுகள். ஆனால் கடந்த 10 வருடங்களுக்குள் இந்த நடைமுறைகளில் அனேகமானவை முற்றாகவே சிதைந்துவிட்டன. ஆயினும் நினைவுபடுத்திப்பார்க்க இனிமையானவையாக இருக்கின்றன.

Our Facebook Page

Archives

Leave a Reply