featued_image

முதல் தசாப்த நினைவுகூரல் | ஜெரா

auhtor

on
2019-05-24


By :
Jera Thampi


21 Views

தமிழ் சமூகத்தில் இறந்தவரை நினைவுகூரல் என்பது ஒரு பண்பாடு. இந்தப் பண்பாடு சங்ககாலத்திற்கு முந்தைய பெருங்கற்கால பண்பாட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. தம் சமூகத்திலிருந்து இறந்தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு. அவர்கள் இறந்தபின்னும் இன்னொரு உலகத்தில் வாழ்கிறார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர்தம் உடலை ஈமத்தாழிகளில் வைத்து, அதற்குள் பொன் பொருள் முதலானவற்றை இட்டுப் புதைத்துப்பாதுகாக்கும் மரபைத் தமிழர் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம், வன்னி, பொன்பரிப்பு எனப் பல இடங்களிலும் இதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இந்தப் பண்பாடு காலமாற்றம் பெற்று, இன்று பல்வேறு விதமாகவும் இறந்தவர்களை கடவுளுக்கு நிகராக வைத்து வணங்கும் முறை தமிழ் சமூகத்தில் இயங்குநிலையில் இருப்பதை அவதானிக்க முடியும். இவ்வாறாக இறந்தவர்களைப் புனிதர்களாகக் கருதும், அதனைப்போற்றி வணங்கும் உயரிய பண்பாட்டுப் பழக்கத்தைத் தமிழ் சமூகம் தனக்குள்வைத்திருக்கிறது.

இலங்கையில் இடம்பெற்ற முப்பதாண்டுகால ஆயுதப்போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவை அனைத்தும் அவலச் சாவு என்ற வகையறாவுக்குள் வைத்துப் பார்க்கப்படுபவை. இந்த ஆத்மாக்கள் அலைந்து திரிபவை என்ற நம்பிக்கை கூட சிலர் மத்தியில் உண்டு. 2009 மே 18 வரை இடம்பெற்ற போரென்பது அவலங்களுக்கும், குரூரங்களுக்கும் மேலால் நிகழ்ந்ததுதான். அதுவும் இறுதிப்போர் நாட்களான குறித்த மூன்றுமாத காலங்களுக்குள்ளும் இறந்தவர்களின் எண்ணிக்கையை யாருமே கணக்கிடவில்லை. மகனாக, மகளாக, தங்கையாக, தமக்கையாக, தாயாக, தந்தையாக எல்லாம் கடந்து குடும்பமாக மாண்டுபோனார்கள். அவர்தம் உடல்கள் எந்தப் புனிதமுமற்று பசித்தலைந்த நாய்களுக்கும், காகங்களுக்கும், வல்லுறுகளுக்கும் பசிதீர்க்கவே பயன்பட்டன. தசைப் பிண்டங்களாக சிதறிவிட்ட மனித உடல்களைக் கூட்டாக ஒரு பெட்டியில் அள்ளி பெரியதொரு குழியில் கொட்டி மூடிவிடும் நிலமைகளும் ஏற்பட்டிருந்தன.

எனவே தமிழ் சமூகம் மரபாக பின்பற்றிவந்த இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் முறைகள் இங்கு சாத்தியப்பட்டிருக்கவில்லை. போர் அமைதிக்குத் திரும்பிய பின்னர் அதனைச் செய்யத்துணிந்தனர். கூட்டாகப் பலரும் முள்ளிவாய்க்கால் என்கிற துயர்நிலத்தில் கொல்லப்பட்டமையால் அவ்விடத்தில் இறந்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துவதே பொறுத்தமானதாக இருந்தது.

இவ்வாறு முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் இறந்தவர்களை நினைவுகூரல் கடந்த பத்தாண்டுகளுக்குள் பெரும் சவால்மிக்கதாகவே இருந்துவந்திருக்கின்றது. முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் நினைவுகூரல் செய்வதே பயங்கரவாதமாகப் பார்க்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூரலுக்கு தடையில்லை என அரசு அறிவித்திருந்தாலும், நீதிமன்றத்தினூடாகவும், பொலிஸாரின் ஊடாகவும் கட்டுப்படுத்தி வந்தது.  ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு விக்கினம் நிகழ்ந்திருக்கிறது. தடை இருந்திருக்கின்றது. அச்சமும், கதறியழக்கூட சுதந்திரமற்ற நிலையிலுமே துணிந்தவர்கள் மட்டும் கூடி அனுஷ்டிக்கும் நிகழ்வாக இது இடம்பெற்று வந்துள்ளது.

இம்முறையும் அதே நிலைமைதான். போர் நிறைவுற்று பத்தாண்டுகள் கடந்திருக்கின்றன. எனவே இந்த ஒரு தசாப்தத்தை பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அணிதிரட்டி, பேரவல நினைவுநாளை உணர்வுபூர்வமாக நிகழ்த்தவே தமிழர்கள் திட்டமிட்டிருந்தனர். கடந்த வருடங்களில் நிகழ்ந்த அரசியல் குழப்பங்கள் போலல்லாமல், இம்முறை நினைவேந்தலுக்கான பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்கி அவர்களின் தலைமையில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து செய்வதற்காகவே உரையாடல்கள் ஆரம்பித்திருந்தன.

ஆனால் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் நாட்டு நிலைமைகளைத் தலைகீழாக்கியது. மீண்டும் பயங்கவரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலத் தடைச்சட்டமும் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. குறித்த சட்டங்கள் நாட்டின் ஏனைய பாகங்களைவிட வடக்கில் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனம் பரவலாகவே முன்வைக்கப்படுகிறது. அதற்கு உதாரணமாக, இறுதிப்போர்க்கால பேரவல பதாகைகளையும், விடுதலைப் புலிகளின் தலைவரினது படத்தையும் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான பல்கலைக்கழக மாணவர்களின் சம்பவத்தை அனைவரும் எடுத்துப்பேசினர்.

குறித்த கைது சம்பவங்கள் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு தினத்தின் மீதான எழுச்சியைக் குறைப்பதற்கான பொறியாகவே தமிழர்கள் பார்த்தனர். கடந்த வருடம் இடம்பெற்ற பேரவல நினைவு நிகழ்வை யாழ். பல்கலைக்கழக மாணவர்களே முன்னின்று நடாத்தியிருந்தனர். இம்முறையும் நினைவுகூரலுக்கான பொதுகட்டமைப்பு உருவாக்கத்திலும், மக்களை அணிதிரட்டுவதிலும் அவர்களின் பங்களிப்பு பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் கைதானது நினைவை அனுஷ்டிக்கத்தயாரான மக்களிடையே அச்சவுணர்வை ஏற்படுத்தியது.  அத்துடன் வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு எனப் பலரும் கருதி முள்ளிவாய்க்காலுக்கு நினைவுகூரலுக்காக செல்லும் திட்டத்திலிருந்தே பின்வாங்கிவிட்டனர்.

ஆனாலும் நினைவுகூரல் இடம்பெற்றது. முல்லைத்தீவைச் சேர்ந்த நினைவுகூரலுக்கான பொதுக்கட்டமைப்பு என்கிற அமைப்பின் சார்பில் ஏற்பாடுகள் இடம்பெற்றன. மே 18 ஆம் திகதிக்கு மூன்று தினங்களுக்கு முன்பதாக, நினைவேந்தல் குறித்த நிகழ்வொழுங்குகளை குறித்த அமைப்பு வெளியிட்டது. அதற்கு ஏற்றாற்போல இராணுவத்தின் சார்பிலும், இறந்தவர்களை நினைவுகூர தடையில்லை என்ற அறிவிப்பு வந்தது. ஆனாலும் நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள வருபவர்கள், பயணிக்கும் வாகனங்கள் தீவிரமாக சோதனைக்குட்படுத்தப்பட்டன. முள்ளிவாய்க்காலுக்கு வருமொருவர் குறைந்தபட்சம் 6 இடங்களிலாவது இராணுவ சோதனையை எதிர்கொண்டார். இவ்வளவையும் தாண்டி மே.18 2019 அன்று பேரவல நினைவுகூரல் நிகழ்வுகள், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றன.

குறித்த நாளில் காலை 10.30 மணிக்கு இறந்தோருக்கான அகவணக்கத்துடன் இடம்பெற்ற நிகழ்வில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். தாம் இழந்த உறவுகளை நினைத்து கதறியழுதனர். ; தன் தாயையும், தன் ஒற்றைக் கையையும் இழந்த சிறுமி வலிததும்பிய கண்களோடு பொதுத்தீபத்தை ஏற்றினாள். அனல்கொதிக்கும் வெயில் கால் உருக நின்று தீப்பந்தங்களை ஏற்றி அஞ்சலித்தனர். போரில்  கூட்டாக அஞ்சலிக்கும்போது கிடைக்கும் ஆரத்தழுவல்களைப் பெற்று ஆறுதலடைந்தனர். நிகழ்வின் பிரகடனத்தை சமயப்பெரியார்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசித்தனர். அந்தப் பிரகடனத்தில் அரசுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் சமூகம் சார்பில் சொல்லப்படவேண்டிய செய்தியிருந்தது.

நிகழ்வு திடீரென ஏற்பாடாகியிருப்பினும், ஒழுங்குகள் சிறப்பானதாக இருந்தன. ஒவ்வொரு தீப்பந்தத்தின் கீழம் வைக்கப்பட்டிருந்த தென்னை, தேக்கு மரக்கன்றுகள் இறந்தோர் நினைவாக வீடுகளில் நடுகை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்தன. இறந்தவரின் பெயரில் புதிய விதையொன்றை மீள நடுதல் என்கிற நிலைப்பாட்டில் இந்த மரக்கன்றுகள் வழங்கப்பட்டிருக்கலாம். அனைத்து மரக்கன்றுகளையும் மக்கள் தம் கையோடு எடுத்துச்சென்றமை குறித்த நினைவு நிகழ்வின் அடையாளமாகவே அன்றையநாளில் இருந்தது. சோதனைச் சாவடிகளில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வுக்கு சென்றுவருபவர்களை அடையாளம் காண்பதற்கும் இலகுவாக இருந்தது.

நினைவு நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்பட்ட உணவும் கலந்துகொண்ட அனைவருக்குமே பகிரப்பட்டது. இறுதிப்போர் நாட்களில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. வாரக்கணக்கில் கிடைக்கின்ற நீரை மட்டுமே அருந்தி உயிர்வாழ்ந்தவர்களும் இருக்கின்றனர். இவ்வாறான வேளையில் கிடைக்கின்ற சொற்ப அரிசியில் நீரையும், உப்பையும் சேர்த்து கஞ்சி சமைத்து வழங்கும் முறையொன்று முள்ளிவாய்க்காலில் பின்பற்றப்பட்டது. அதனை மக்கள் வரிசையில் நின்று வாங்கிப் பருகி பசிபோக்கினர். இவ்வாறு கஞ்சிக்காக வரிசையில் நின்றபோது எறிகணைத்தாக்குதல்களில் சிக்கி பலர் இறந்துபோன சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. அந்தக் கஞ்சியை மறக்ககூடாது என்பதற்காக இம்முறை முள்ளிவாய்க்கால் கஞ்சி வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு, நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு அது ஒருவித அவல உணர்வை ஏற்படுத்தியது.

கொதிக்கும் வெயிலில் வியர்வையும், கண்ணீரும் பெருக்கெடுக்க, சுடு மணலில் காலணியற்ற கால்களை புதைத்து – இதைவிட வெம்மையான பொழுதொன்றில் இனப்படுகொலையான லட்சக்கணக்கான தமிழர்களை நினைவுகூருதல் மிகவும் கனதியானது. உயிர்ப்பானது. வலிமிகுந்தது. கொன்றொழித்த சிப்பாயையும் குற்றவுணர்வால் மனங்கொதிக்க வைப்பது. அங்கு வழங்கப்பட்ட மரங்களும், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இந்த நூற்றாண்டு கண்ட மிகப்பெரும் மர்னுட அவலத்தை – இனப்படுகொலையை சந்ததி கடத்துபவை.

Our Facebook Page

Archives