featued_image

ஆளுமையில் எளிமை, சிறீ மிஸ்.. | முகில்நிலா

auhtor

on
2020-01-07


By :
Oorukaai


202 Views

சிறீ மிஸ்..

நூலகம் சார் நண்பர்களிற்கு, தொல்பொருட்கள் சார்ந்து பயணிப்போருக்கு, இலக்கியம் பேசுவோருக்கு, சமூக முன்னேற்றத்திற்கு உழைப்போரிற்கு ஒரு மைல்கல். இந்தச் சமுதாயம் பெண்கள் பற்றி கட்டியிருந்த பழைய கட்டுக்களை அவிழ்த்தெறிந்த ஒரு யதார்த்தப் பெண்ணியத்தின் அடையாளம். காலங்கள் கடந்தாலும் நின்று வாழ வேண்டிய ஒரு தொல்லியவேதம். சின்னவர் பெரியவர் என்ற பாகுபாடு கடந்து அன்பு செய்து அரவணைக்கும் அன்னை. எனக்கு அவர்; பற்றிய விம்பம் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வெவ்வேறாய் தோன்றி அவரின் ஆளுமையாலும் எளிமையாலும் பிரம்மிக்கவைத்தது.

அப்போது நான் யாழ் பல்கலையில் உள்வாரி கற்கைநெறியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த நேரம். வெளிவாரிப்பட்டப்படிப்பான தகவல் தொழல்நுட்ப மானி (BIT) படிப்பின் இறுதியாண்டிலும் இருந்து கொண்டிருந்தேன். அந்தப் படிப்பின் இறுதியில் ஏதாவதொரு நிறுவனத்திற்கான தொழில்நுட்ப செயற்றிட்டம் ஒன்றை செய்து கொடுக்கவேண்டியிருந்தது. பல்கலைக்கழக விடுதியில் தங்கிப்படிக்கின்ற ஒரு வன்னி மாணவிக்கு இருக்கின்ற அத்தனை பிரச்சினைகளும் எனக்குமிருந்தது. வெளியில் பெரிதாக யாரையும் தெரியாது. அப்படி தெரிந்தவர்கள் கூட ஒரு நிறுவனத்தின் பொறுப்புமிக்க பதவியிலிருப்பவர்களாக இல்லை. என்ன செய்யலாம் என நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, சரி பல்கலைக்கழக நூலகத்திற்கான செயற்றிட்டம் ஒன்றை செய்யலாம் என்ற எண்ணம் தோன்றவும் நூலகத்திற்குச் சென்றேன். வரவேற்பிடத்தில் விபரம் சொல்லி அனுமதி பெற்று சிறி மிஸ்ஸை அணுகினேன்.

ஏற்கனவே அவரை பல்கலையில் சில இடங்களில் கண்டிருக்கிறேன். அப்படிக் கண்;ட போதெல்லாம் கடுகடுப்பான பேர்வழிகளில் ஒன்றாகத்தான் மனம் அவரை பதிவுசெய்திருந்தது. அதனால் மிகப்பயத்துடனே அவரைக்காணச் சென்றேன். அதேபோல அவரும் நான் சொன்ன விவரங்கள் முழுதையூம் கேட்டுவிட்டு தாம் ஏற்கனவே ஒரு பிரபல்யமான நிறுவனத்திடமிருந்து தமக்கான பிரத்தியேகமான இயங்குதளம் ஒன்றை பெற்றுவிட்டோம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். நான் இனி என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பி நூலக வாசலைக்கடக்கும் போது, மறுபடி திரும்ப அழைத்து மேலும் பல விடயங்களைப் பற்றி கேட்டறிந்த பின்னர், ‘நாம் ஏற்கனவே ஒரு சிஸ்ரம் வைச்சிருக்கிறம். ஆனால் நீர் விரும்பினால் நூலகசெயற்றிட்டத்தையே செய்யும். எண்டாலும் உமக்கு நிரம்ப நேரம் செலவாகும். அவ்வளவு கஸ்ரப்பட்டு நீர் செய்யும் போது அதற்கான காசை தந்து என்னால அத வாங்கேலாம இருக்கும். அதுதான் வேண்டாமெண்டு சொன்னனான். ஆனா உமக்கு வேற யாருட்டயும் செய்யேலாட்டி திரும்ப வாரும் நான் சைன் வைச்சுத்தாறன்’ என்று சொல்லியனுப்பினார். என்னை முன் எப்போதும் பிரத்தியேகமாக அறிந்திராத அவரின் அந்தக் கரிசனை, எனக்குள்ளே வரையப்பட்டிருந்;த அவர் பற்றிய விம்பத்தை அழித்துவிட்ட முதன் முதலாக மறுபடி புதியதொரு விம்பத்தை தானாகவே வரைந்துகொண்டது.

பின்னர் மறுபடி வேறொரு சந்தர்ப்பத்தில், நண்பர்களின் கூட்டுமுயற்சியாக கவிதைத் தொகுதியொன்றை வெளியிடுவதற்கு தீர்மானித்தபொழுது அந்த நிகழ்வை எங்கே வைத்து நடாத்துவது என்ற கேள்வி எழுந்தது. ஒப்பீட்டளவில் இன்றையை விட சற்று அதிகமான கெடுபிடி நிறைந்த காலப்பகுதியாக அது இருந்ததால் ஒரு நல்ல இடமாகத் தெரிவுசெய்யவேண்டியிருந்தது. இறுதியாக நண்பரொருவரின் கருத்தின்படி சிறீ மிஸ் வீடு நிகழ்விற்கான இடமாக தயார்செய்யப்பட்டது. அப்போதும் அவருக்கு என்னை நேரடியாக தெரிந்திருக்கவோ, பரிச்சயப்பட்டிருக்கவோ வாய்ப்பெதுவுமே இருந்திருக்கவில்லை. ஆயினும் நண்பர்களின் வேண்டுகோளினை ஏற்றதோடு மட்டுமல்லாமல் எல்லா ஆயத்தங்களையும் அவரே செய்திருந்தார். சுமூகம் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் அவருக்கிருந்த பற்றுறுதியும் அக்கறையும் வாய்ச்சொல்லிற்கு அப்பாற்பட்டது.

அந்த மாலைப் பொழுது மிக அழகாக இருந்தது. வயது வேறுபாடின்றி இலக்கியம் பற்றி நிறைய விவாதித்தோம். தனிப்பட்ட முறையில் அவர் சேகரித்து வைத்திருந்த எண்ணற்ற தொல்லியல் பொருட்கள் பற்றியயும், அவற்றின் விளக்கங்களையும் மிக தௌிவாகப் பெறமுடிந்தது. கடைசியில் நிகழ்வு முடிந்ததும் அந்த தொல்லியல் பொருட்களை மிகவும் பத்திரமாக திருப்பி எடுத்துவைத்துவிட்டு வீடு நோக்கி நடக்கத்தொடங்கினோம். அப்போது அவரிடமிருந்து எனக்கொரு வேலை வந்தது.

கவிதைத் தொகுதியில் ஒரு இடத்தில் எருக்கலை பற்றிய குறிப்பொன்று இருந்தது. அதனை கவனித்த அவர் எருக்கலை பற்றி மிக நீண்ட தௌிவான ஆய்வொன்றை செய்துகொண்டு வரும்படி சொல்லியிருந்தார். அதன் எல்லாக்குணங்கள் சார்ந்தும் மருத்துவம், இலக்கியம், வாழ்வியல் மற்றும் வரலாறு சார்ந்து எருக்கலையின் நிலையை முழுமையாக ஆராயச்சொல்லி அறிவுறுத்தியிருந்தார். அறிவை வளர்ப்பதில் அவருக்கிருந்த உண்மையான அக்கறை எல்லைகளிற்கப்பாற்பட்டது.

தமிழ் சமூகத்திற்கு மனதார செயற்பட்ட அவரின் உழைப்பு வெளிகளைகடந்தது. காலத்தை கடந்தது. கேள்விகளை கடந்தது. அப்பழுக்கற்ற அதிஉன்னத நோக்கமுடையது. அத்தகைய ஒரு இரும்பு பெண்மணியின் இயக்கம் நின்றுபோனது வருந்தத்தக்கதானதாயினும் அவரிற்கான அஞ்சலி என்பது வார்த்தைகளில் கொட்டுவது மட்டுமல்ல, வலைத்தளங்களை நிரப்புவது மட்டுமல்ல, அவரின் வாழ்வியல் உண்மையின் நூறில் ஒரு பங்கையேனும் எம் தோளில் சுமக்க உறுதியெடுப்பதே.

முகில்நிலா

 

குறிப்பு:

இணுவில் கிராமத்தில் அருளானந்தம், ஜெயலட்சுமி தம்பதிகளின் மூத்த மகளாக 1961 ஏப்ரல் 8ஆம் திகதியன்று பிறந்தவர் ஸ்ரீகாந்தலட்சுமி. இப்போது இணுவில் மத்திய கல்லூரியாக இருக்கும் இணுவில் சைவ மகாஜனா வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி பெற்றவர். இடைநிலைக் கல்வி கற்ற சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் முதுநிலை மாணவ முதல்வியாக இருந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையின் சிறப்பு இளமாணிப் பட்டதாரி. நூலக தகவல் அறிவியல் துறையில் இளமாணிப் பட்டத்தினை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். பெங்களூரின் ஆவணமாக்க ஆய்வு, பயிற்சி நடுவத்தில் ஆவணமாக்கம், தகவல் அறிவியலில் முதுமாணிக்குச் சமமான பட்டம் பெற்றவர்.

ஸ்ரீகாந்தலட்சுமி 2019 டிசம்பர் 28ஆம் திகதி தனது 58ஆவது வயதில் காலமான போது தொழில் சார்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதம நூலகராக இருந்தார். தன்னார்வமாக நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் நிறுவுன-ராகவும் அறிதூண்டல் மையத்தின் இயக்குனராகவும் நூலக நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நூலக, தகவல் அறிவியலுக்கான தேசிய நிறுவனத்தின் முகாமைத்துவக்குழு உறுப்பினராகவும் இருந்தார். முன்னதாக இலங்கை நூலகச் சங்கத்தின் முதலாவது தமிழ்த் தலைவராகவும் இலங்கைத் தேசிய நூலகத்தின் முகாமைத்துவக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். நூலகத் தகவல் அறிவியற் துறை சார்ந்து கலைக்களஞ்சியம், கலைச்சொற்றொகுதி, சொற்பொருளாய்வுக் களஞ்சியம் உள்ளிட்ட 13 நூல்களையும் எழுதி வெளியிட்டிருந்தார்.

நன்றி: கோபியின் குறிப்பேடு (Thillainathan Kopinath, நூலகம் நிறுவனம்)

 

Our Facebook Page

Archives