featued_image

ராஜபக்சக்களின் மீள்வருகையும் தமிழ்த்தேசியமும் | எழில்

auhtor

on
2020-01-02


By :
Ezhil


197 Views

ஸ்ரீலங்காவின் சனாதிபதியாக கோட்டாபாய ராஐபக்ச அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெளிசாயவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். கொழும்புக்கு வெளியே பதவிப் பிரமாணம் செய்த 3ஆவது சனாதிபதியாகவும், ருவன்வெளிசாயவில் பதவிப் பிரமாணம் செய்த முதலாவது சனாதிபதியாகவும், கோட்டாபாய, சிங்கள-பௌத்தமனநிலை (Sinhala-Buddhist mindset) கொண்ட வாக்காளர்களின்  அறுதிப் பெரும்பான்மை பெற்று சனாதிபதியானார். சிங்கள-பௌத்த மனநிலை கொண்டவர்களின் வாக்குகளினால் மட்டும் வெற்றிபெற்று சனாதிபதியாக முடியும் என்ற அரசியல் கலாச்சாரம், ஒற்றையாட்சி மனநிலை (unitary mindset) சார்ந்தது. கடந்த சனாதிபதி தேர்தல் துருவமயப்படுத்தப்பட்ட வாக்காளர்களை மட்டும் சுட்டவில்லை, ஸ்ரீலங்கா சிங்கள-பௌத்தநாடு, இது சிங்கள-பௌத்த மனநிலை உடையவர்களுக்குத் தான் சொந்தம் என்பதைக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

ருவன்வெளிசாயவும் எண்ணிக்கை ஐனநாயகமும்
ஏன் ருவன்வெளிசாயவில் பதவியேற்றார்? நவீன சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் அநாகரிகதர்மபாலவோடு (1864–1933) ஆரம்பித்ததாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். பௌத்தமத விசுவாசியான அநாகரிகதர்மபால என்ன செய்தார் என்றால், கி.பி 2ம்நூற்றாண்டில் துட்டகைமுனுவுக்கும் எல்லாள மன்னனுக்கும் நடந்தபோரை ஓர் இனவாத, மதவாதப் போராகக் கட்டமைத்து, அந்தப் போரிலே துட்டகைமுனுவால் கொல்லப்பட்ட பௌத்தம் அல்லாத மக்களின் கொலையை நியாயப்படுத்தி, கொல்லப்பட்டவர்கள் பௌத்தத்தை விசுவாசிக்காத அல்லது ஏற்றுக்கொள்ளாத தீயவாழ்க்கையை வாழ்ந்தவர்கள், மிருகங்களைப் போன்றவர்கள், (Keyes 2016) அவர்களைக் கொன்றது பிழையல்ல என்ற புனைவை உருவாக்கி சிங்கள-பௌத்த மனநிலை இல்லாதவருக்கு எதிரான போரை நியாயப்படுத்தினார். அது இன்று வரைக்கும் அதே அளவையைப் பயன்படுத்தி நியாயப்படுத்தப்பட்டுவந்துள்ளது. ருவன்வெலிசாயா துட்டகைமுனுவால் கட்டப்பட்ட பௌத் ததாதுகோபுரம். சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் அடித்தளம். இங்குதான் ஸ்ரீலங்காவின் 7ஆவது சனாதிபதி பதவியேற்றார். துட்டகைமுனுவின் மீள்அவதாரமாக சிங்கள-பௌத்த மனநிலைகொண்டவர்கள் மத்தியில் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் கூட்டுஉளவியலில் தொடர்ந்தும் தன்னை முதலிடுகின்றார்.

கடந்த சனாதிபதி தேர்தலில் வென்றது சனநாயகம் அல்ல. மாறாக ‘Ethnic Numerocracy’, பெரும்பான்மை இனக் குழுமத்தைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை. இதனால் தான் பேராசிரியர் வில்சன் ஸ்ரீலங்காவை ethnic – numerocratic democracy என்று குறிப்பிடுகின்றார். இந்த தேர்தலில் சனநாயகம் தோற்றுப்போனது. எண்ணிக்கை வெற்றிபெற்றது. சனநாயக விழுமியங்களுக்கான சாவுமணி ஸ்ரீலங்காவில் ஏற்கனவே அடிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இந்த தேர்தல் இதுவரைக்கும் தமிழ்க் கூட்டமைப்பு கூறிவந்த சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஒருவர் ஐனாதிபதியாவதற்கு அவசியம் என்ற சொல்லாடலை பிரச்சினைக்குட்படுத்துகின்றது.

ஒரு பெரும்பான்மை இனம் எண்ணிக்கையை மையமாக வைத்து சிறுபான்மை இனங்கள் தொடர்பில் விரும்பியவாறு முடிவுகளை எடுக்கலாம் என்கின்ற ஓர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குகின்றது. இது சனநாயகமுறைமையின் இருண்ட பக்கமும் கூட. மைக்கல் மான் (Michael Mann) குறிப்பிடுகின்ற, சனநாயகமுறைமை தனக்குள் எப்போதும் எண்ணிக்கையில் அதிகமானோர் எண்ணிக்கையில் குறைந்தவர்களை ஏதேச்சதிகார ஆட்சிக்குட்படுத்தும் சாதகத் தன்மையைகொண்டிருக்கின்றது என்பது உண்மையாகின்றது. இந்த சாதகத் தன்மை எண்ணிக்கையில் குறைந்த குழுமங்களின், இனங்களின் இன அழிவிற்குவழிகோலும்.

பிரச்சினைக்குட்படுத்தப்படும் தமிழர் இருப்புரிமைக் கோரிக்கைகள்
சனாதிபதியான பின் தனது முதலாவது நேர்காணலில் குறிப்பிடுகின்றார், தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களை ஏமாற்றிவருகின்றார்கள் என்று. தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களைக் காலங்காலமாக ஏமாற்றி வருகின்றார்கள் என்பது உண்மைதான். அதில் எள்ளவும் ஐயமில்லை. அவர் சொல்லவந்தது தமிழர் உரிமைக் கோரிக்கைகள் தொடர்பானது, சிறுபான்மை இன மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான வெளி குறிப்பாக அரசியல் உரிமைக் கோரிக்கைகள் சார்ந்து முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. இனியும் நாங்கள் எம் மக்கள் தொடர்பான அரசியல் உரிமைக் கோரிக்கைகள் பற்றி இந்த அரசுடனும் பேசுவோம் என்று பூச்சாண்டிகாட்டுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடமே இல்லாமல் போனது. முன்னைய அரசாங்கம் கூறிய சனநாயக வெளி, தமிழ்தேசியம், தாயகம்,  சுயநிர்ணயம் உரிமைசார்ந்து மிக இறுக்கமாக மூடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை காலத்திற்குகாலம் வெவ்வேறு வடிவங்களை எடுத்துவந்துள்ளது. தற்போதுள்ள வடிவம் பேரினவாத அடக்குமுறையின் ஆகப் பிந்தைய வடிவம்.

இந்த தேர்தல் தமிழர்களுக்கு பல்வேறு செய்திகளை சொல்லுகின்றது. அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இத்தேர்தலும் ஸ்ரீலங்கா ஐனாதிபதியின் நேர்காணலும் மிகத் தெளிவாக ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி தன்மையை பலப்படுத்துகின்ற  அரசியல் நிகழ்ச்சித் திட்டம். அந்த நிகழ்ச்சித்திட்டம் சிறுபான்மை மக்களின், குறிப்பாக தமிழ் மக்களின் கூட்டுஅரசியல் உரிமைக் கோரிக்கைகளை உதாசீனம் செய்கின்றது. ஸ்ரீலங்காவில் நடக்கின்ற எல்லா தேர்தல்களுமே தமிழர்களுக்கானவை அல்ல, அவை எல்லாமே ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி தன்மையையும், சிங்கள-பௌத்த மனநிலையையும் தக்கவைக்கின்ற, பலப்படுத்துகின்ற தேர்தல்கள் தான். ஆகவே தேர்தல்கள் பற்றி தமிழர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டிய தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் ‘வதந்திகளை நம்பவேண்டாம்’. மேற்குறிப்பிட்ட இரண்டும் தமிழர்களின் கூட்டு இருப்புரிமைக் கோரிக்கையை உதாசீனம் செய்வது மட்டுமன்றி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை கேள்விக்குட்படுத்தி தேவையற்றதொன்றாக மலினப்படுத்துகின்றது, இதன் மூலம் தமிழர்களின் கூட்டு இருப்புரிமைக் கோரிக்கையை சட்டபூர்வமற்றதாக்கி அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக எழுந்த தமிழ்த் தேசியத்தை அரசியல் நீக்கம் செய்து போராட்டங்கள், தியாகங்கள், அர்ப்ணிப்புக்கள் எல்லாம் வீண் என்ற மாயையை உருவாக்குகின்றது. தேசம், தாயகம், சுயநிர்ணயம் ஆகியவற்றுக்கான வெளியை மூடி தமிழர்களுக்கெதிரான அடக்குமுறை ஸ்ரீலங்காவில் இல்லை என்பதான தோற்றத்தை உருவாக்க முனைகின்றது.

அதே நேர்காணலில் ‘காட்டுக்குள்ளே சண்டைபிடித்துக் கொண்டிருந்தார்கள் ‘அவர்களுக்கு கல்வி அறிவு தேவை என்ற கூற்று கிளர்ச்சிக்கு எதிராக (counter insurgency manual) அரசுகள் எவ்வாறு போரியல் வியூகத்தை தொடுப்பது என்ற அமெரிக்க கையேட்டின் புரிதலோடு விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. வன்முறையை பிரயோகிக்காது எவ்வாறு கிளர்ச்சியை அடக்குவது என்பதில், கிளரச்சியாளர்களின் அல்லது விடுதலையாளர்களின் மக்கள் அங்கீகாரத்தை சட்டபூர்வமற்றதாக்குவது (Delegitimisation) என்பது மிக முக்கியமான போரியல் வியூகம். மக்கள் விடுதலைக்காக போராடுபவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி அவர்களுடைய கோரிக்கையை சட்டபூர்வமற்றதாக்கி அவர்களுடைய பிரதிநிதித்துவப்படுத்தலை பிரச்சனைக்குட்படுத்தி அதேநேரத்தில் அடக்குமுறை அரசின் சட்டபூர்வத் தன்மையை உறுதிப்படுத்தி, பலப்படுத்தி மக்கள் ஆதரவுத் தளத்தை அரசை நோக்கி நகர்த்துவது மிகமுக்கியமான செயற்பாடு என்று இக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ராஐபக்ஷக்கள் பின்-முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் ஓரளவிற்கு வெற்றிகரமாகச் செய்யமுயன்றார்கள் அதன் நீட்சியாகவே இதையும் ஆராயவேண்டியுள்ளது. பின்-முள்ளிவாய்க்கால் காலத்துக்குப் பின்னரான ‘ஸ்ரீலங்கன்’ அடையாளம் முன்னிலைப்படுத்தப் படுகின்றது. ‘ஸ்ரீலங்கன்’ அடையாளம் சிங்கள-பௌத்த, ஒற்றையாட்சி மனநிலை சார்ந்தது. மீண்டும் ஸ்ரீலங்கா அரசை சிங்கள-பௌத்த நாடாக முன்னிலைப்படுத்துகின்றது. இத்தீவில் வாழுகின்ற எண்ணிக்கையில் குறைந்த இனக்குழுமங்களின் முதன்மை அடையாளத்தை அழித்து பேரினவாத அடையாளத்தை வலிந்துதிணிக்கின்றது இவ் அரசு.

ராஐபக்ஷக்களின் மீள்வருகை சிங்கள-பௌத்த கூட்டு மனநிலைக்கு தன்நம்பிக்கையை கொடுக்கின்றது. சிங்கள குடிமையின் கூட்டு உளவியல் உசுப்பேற்றப்படும்போது எண்ணிக்கையில் குறைவான இனக்குழுமங்களின் இருப்புரிமை கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இந்த சிங்கள குடிமையின் கூட்டுஉளவியலின் தன்நம்பிக்கை அணிதிரட்டலாக மாறும்போது இனங்களின் அழிப்பிற்கான பாதைகள் கட்டமைக்கப்படுகின்றன. துட்டகைமுனு எல்லாளன் வரலாற்று கதையின் மீள்வாசிப்பும், வரலாற்றுப் புனைவும், பௌத்தர் அல்லாதவர்களைக் கொன்ற அநாகரிக்க தர்மபாலாவின் நியாயப்படுத்தலும் கோத்தபாயவின் ருவன்வெளிசாய பதவிப் பிரமாணமும் சிங்கள பௌத்த கூட்டுமனநிலையின் எழுச்சியும் தமிழர்கள் மீதான ஆயுதமற்ற போரின் நீட்சியை கட்டியம் கூறுகின்றன. வன்முறையற்ற போரியல் வியூகங்களுக்குள்ளிருந்து தாயகத் தமிழர்களை வழிநடத்தக் கூடிய மாற்றுத்தன்மை நிச்சயமாக தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்குள்ளிருந்து வரமுடியாது, வரவும் கூடாது.

தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது அதை முன்னின்று வழிநடத்தியவர் கோத்தபாய, ஐ.நா அறிக்கைகளின் கூற்றுப்படியும் ஏனைய மனிதஉரிமை அமைப்புக்களின் கூற்றுப்படியும் ஆகக்குறைந்து போர்க்குற்றம் நடந்தேறியிருக்கின்றது. போரின் இறுதித் தருணங்களில் நடந்த குற்றங்கள் விசாரிக்கப்பட்டால் இது நிருபணமாகும் என்பதை ஏறக்குறைய எல்லாருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். அதை வழிநடத்தியவர் கோத்தபாய, அவரே ஒப்புக்கொண்டு இருக்கின்றார். போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் மனவடுக்களை உருவாக்கப்போகின்றது. (Retraumatising) குற்றம் செய்த ஒருவரை மீண்டும்மீண்டும் கண்ணெதிரே காண்பது என்பது மீளமனவடுக்களை உருவாக்குவதாகும். அதற்கு அப்பால் குற்றவாளியிடம் நீதிகேட்டு போராடுவது என்பது அபத்தமானது. இவ்வாறானதொரு சூழ்நிலைக்குள் தான் தமிழ் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. இது ஒரு பொறி. இந்தப் பொறியை தமிழர்கள் எவ்வாறு கையாளப் போகின்றார்கள்?.

ராஜபக்கசக்களும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையும்
நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் தோல்வி பற்றி ஏற்கனவே வேறுதளத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இங்கு மீண்டும் ஆராய்வது தேவையற்றது என நினைக்கின்றேன். 2015 தேர்தலுக்குப் பின்னர், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றங்கள் தொடர்பில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்கூடு நீதி கிடைக்கும் என்ற சர்வதேச பொறியை உருவாக்கி கடந்த அரசாங்கம் அதை முன்னெடுக்கும் என்ற மாயையை சர்வதேச சமூகமும் சிங்கள சமூக ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் முன்னிறுத்தினர். அதே சமூகம் நிலைமாறுகால நீதி பொறிமுறையைப் உபயோகித்து தமிழ்க் குடிமையை தமிழ் தேசிய அரசியல் நீக்கம் செய்ய முயற்சித்தார்கள். சர்வதேச விசாரணை, சமஸ்டி, சுயநிர்ணய உரிமை, வடக்கு–கிழக்கு இணைப்பு போன்ற கோரிக்கைகள் ராஐபக்ஷவின் மீள் வருகையை உறுதிபடுத்தும் எனக் கூறி தமிழ் மக்களின் அரசியல் உரிமைகோரிக்கைகளின் செறிவை குறைக்க முயன்றார்கள். தமிழர்களுக்கு அரசியல் சாணக்கியம் தெரியாது என்றுகூறி வடக்குகிழக்கை நோக்கிப் படைஎடுத்தார்கள். இதற்காக கோடிக்கணக்கில் பணம் விரையம் செய்யப்பட்டது. வடக்கு–கிழக்கு நோக்கிப் படைஎடுத்த தெற்கு நல்லிணக்க ஆர்வலர்களும், சர்வதேச சமூகமும் தெற்கு நோக்கியோ அல்லது சிங்கள-பௌத்த குடிமையின் மீது சிங்கள-பௌத்த தேசியநீக்க வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கத் தவறியிருந்தார்கள். அவர்களுக்கு தமிழ் தேசியமும் தேசியவாதிகளும் பிரச்சனையாக இருந்தார்களேயொழிய சிங்கள-பௌத்த தேசியவாதமும் தேசியவாதிகளும் பிரச்சனையாக தென்படவில்லை என எண்ணத்தோன்றுகின்றது. பொறுப்புக் கூறலை மிகவேகமாக முன்னேடுக்காமல் தமிழர்களுக்கு வெறும் பூச்சாண்டிகாட்டும் ஒரு பொறிமுறையாக உபயோகித்ததோடு தங்களுடைய சொகுசு இருப்பை கடந்த அரசுக்குள் தக்கவைத்துக் கொண்டார்கள், ‘நீ என்னுடைய முதுகைசொறி நான் உன்னுடைய முதுகைசொறிகிறேன்’ என்று கடந்த அரசையும் தக்கவைத்துக் கொண்டு தங்களையும் தக்கவைத்துக்கொண்டார்கள். ராஐபக்ஷக்களின் மீள்வருகைக்கு அவர்களது வகிபாகம் குறிப்பிடத்தக்கது.

சிவராமின் நவீனகாலனித்துவம் பற்றிய கருத்து மீள்வாசிப்புச் செய்யவேண்டியது அவசியமாகின்றது.

‘மேற்கில் இருந்து பல்வேறு அரசசார்பற்ற மற்றும் ஆய்வு நிறுவனங்கள் இங்கு வருகைதந்து செயல்பட்டுவருகின்றன. ஜனநாயகம், மனிதஉரிமைகள், நல்லாட்சி, சிவில் சமூகத்தைப் பலப்படுத்தல் போன்றவற்றைப் பற்றி எம்மிடையே காணப்படும் படித்தவர்கள், சமூக ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆகியோரிடையே கருத்தரங்குகளை இவை நடத்திவருகின்றன. இவற்றினுடைய கருத்துக்களையும், அமெரிக்கா போன்ற மேலைத்தேயநாடுகளின் கூற்றுக்களையும் ஒருசேரப் பார்க்கும்போது உன்னத மனிதவிழுமியங்களை எம்மிடையே வளர்த்தெடுப்பதையே மேற்படி நாடுகளும் மேலைத்தேய அரசசார்பற்ற நிறுவனங்களும் ஆய்வுமையங்களும் தமது தலையாய நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றன என்ற எண்ணம் எம்மிடையே பலருக்கு தோன்றலாம்.

வெளிநாடுகளில் வாழ்கின்ற ஆங்கிலம் பேசும் சில ‘படித்த’ மனிதர்களும் இக்கருத்தை வேதமந்திரம் போல் ஓதுகின்றனர். எமது இளைஞர்களுக்கு எதுவுமே தெரியாது என்பது போலவும் வெள்ளைக்காரரிடம் நாம் படிக்கவேண்டிய உன்னத மனிதவிழுமியங்கள் பல உள்ளன எனவும் அவர்கள் ஓதுவார்கள். இது வெள்ளைக்காரருக்கு கைகட்டிச் சேவகம்செய்த காலனித்துவ அடிமைப்போக்கின் தொடர்ச்சியே.

தமிழர் தாயகத்தில் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துதல் என்ற போர்வையில் வெளித்தலையீடுகள் ஏற்படக்கூடிய ஆபத்து எம்மைச் சூழ்ந்துவருகிறது. இதற்கு முன்னேற்பாடாக சில உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக நுட்பமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஜனநாயகம், மனிதஉரிமைகள் போன்றவை, எம்மிடையே சாத்தியமில்லை என்பது போலவும் இவை எமக்கு மேற்கில் இருந்து ஊட்டப்படவேண்டியவை என்பதான ஒரு உளப்பாங்கையும் எம் மத்தியில் நுட்பமாக உருவாக்கும் நோக்கில் இந்த வேலைகள் படிப்படியாக தமிழர் தாயகத்தில் விரிவாக்கமடைந்துவருகின்றன.

ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகத்தையும் நோக்கங்களையும் மறைப்பதற்கென பல புத்திஜீவிகள் தம்மை அறியாமலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். உலகமயமாதல் நவதாராளவாதம் போன்ற கருத்தியல்கள் ஏகாதிபத்தியத்தின் கோரப்பற்களுக்கு முலாம்பூசுகின்றன. இந்தியாவின் உண்மை நோக்கங்களை சரியாக உணர்ந்து கொள்ளாமல் ‘பாரதமாதா வாழ்க’ அன்னை இந்திராவே வருக என அரசியல் பேதைகளாக அன்று தமிழர் கோஷமிட்டதன் விளைவு என்னாயிற்று என்பதை நீங்கள் அறிவீர்கள். நீண்டகாலமாக இந்தியா பற்றி எமது புத்திஜீவிகளிடையே நிலவிவந்த ‘புனிதமான’ கருத்துக்களின் காரணமாகவே அந்நாட்டின் நோக்கங்கள் எம்மைப் பொறுத்தவரையில் எவ்வாறிருந்தன என்பதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போயிற்று. அதாவது எமது போராட்டத்தைச் சுற்றி இந்தியாவின் கரங்கள் இறுகிவந்தவேளையில் அதைச் சரியாகவும் அறிவுபூர்வமாகவும் தகுந்த ஆதாரங்களோடும் புரிந்துகொண்டு மாற்றுஅரசியல் நடவடிக்கையை எடுப்பதற்குத் தேவையான ஓர் அறிவியல் எம்மிடையே அன்று இருக்கவில்லை. இந்தியாவின் இன்னொருமுகம் பற்றிய அறிவூட்டல் எமது மக்களிடையே காலாகாலத்துக்கு செய்யப்பட்டிருந்தால் நாம் சந்தித்த பேரழிவுகளை சற்றேனும் குறைத்திருக்கலாம் என நான் எண்ணுகின்றேன்.

இன்று எமது உரிமைப் போராட்டத்தைச் சுற்றி ஏகாதிபத்தியத்தின் அழுத்தங்கள் சூழ்ந்துவருகின்றன. பத்துபதினைந்து வருடங்களுக்கு முன்னர் காணப்படாத எத்தனையோ மேலைத்தேய நிறுவனங்கள் எம்மிடையே தோன்றி கிளைபரப்பிவருகின்றன. இவற்றினுடைய ஒட்டுமொத்த செயற்பாடுகள் கவனமாக ஆராய்வோமேயானால் ஓர் உண்மை புலப்படும். இவை அனைத்தும் ஏகாதிபத்தியத்தின் உண்மை நோக்கங்களை பூசிமெழுகி எம்மிடையே, எமது மக்களிடையே அமெரிக்கா பற்றியும் அதன் கூட்டுநாடுகள் பற்றியும் ஒரு நல்லெண்ண மாயையை ஏற்படுத்திவருகின்றன என்பதே அது.
அமெரிக்கா படைத்துறை ஊடுருவலுக்கு ஏதுவான முறையில் சமூகங்களை நெகிழ்வுபடுத்தி அமெரிக்க சர்வதேச உதவி நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பதைநாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும்.

எமது மக்களிடையே மேற்குலகைப் பற்றி நிலவிவரும் பல மாயைகள் தகர்த்தெறியப்படவேண்டும். உலக ஏகாதிபத்தியத்தின் கோரமுகத்தை மறைத்திருக்கும் முகமூடி கிழித்தெறியப்பட்டு உண்மைகளை எமது மக்கள் கண்டிட ஆவனசெய்யப்பட வேண்டும். இல்லையெனில் நாம் இந்தியா விடயத்தில் விட்ட தவறை மீண்டும் அமெரிக்கா விடயத்தில் விட நிரம்ப வாய்ப்புண்டு.
அமெரிக்காவிலும் அதன் நேசநாடுகளிலும் காணப்படும் ஜனநாயகம். நல்லாட்சி, பொருளாதார முன்னேற்றம் போன்ற எமது புத்திஜீவிகளால் போற்றப்படுகின்ற பலவிடயங்கள் கொள்ளையும், கொலையும் இன்றிச் சாத்தியமில்லை என்பதை நாம் உணரவேண்டும். அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் உண்மைச் சொந்தக்காரர்கள் ஆகிய செவ்விந்தியர்களிடம் இருந்து கொள்ளையின் மூலமாகவும், ஏமாற்றினுடாகவும் வெள்ளையர்களால் பறிக்கப்பட்ட வளங்களிலும் நிலங்களிலும் தான் இன்று நீங்கள் வியந்து நோக்கிடும் நாகரிகங்கள் உயர்ந்துநிற்கின்றன என்பது யாவரும் அறிந்த பழையகதை’.

பொறுப்புக்கூறல் பொறிமுறையினூடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக ராஜபக்ஷக்களின் மீள்வருகை நடந்தேறியிருக்காது. இதற்கு தமிழ் அரசியல் கட்சிகளும் உடந்தையாக இருந்திருக்கின்றார்கள். ஆகவே ராஜபக்ஷக்களை மீளகொண்டுவந்ததில் தமிழ் அரசியல் கட்சிகளின் வகிபங்கு மிகமுக்கியமானது. தமிழ் தேசியநீக்கம் செய்வதற்காக முதலிடப்பட்ட முயற்சிகள் குற்றவாளிகளைத் தண்டிப்பதில் முதலிடப்பட்டிருந்தால் மீள் வருகை தடுக்கப்பட்டிருக்கும். தெற்கு ஆர்வலர்களும், நல்லிணக்கவாதிகளும் தன்னார்வ நிறுவனங்களும் நவதாராளவாத முதலாளித்துவத்தின் கைபொம்மையானது கவலைக்குரியது. நவதாராளவாத முதலாளித்துவ அரசியல் எப்போதும் அரசைக் காப்பாற்றியேதீரும், தனது வர்த்தக நலன்களை அடைவதற்காக. ‘கப்பலை ஆட்ட வேண்டாம்’ (Don’t rock the boat) என்ற அரசியல் இங்கு நீர்த்துப்போனது. ஆக ஒட்டுமொத்தில் பொறுப்புக்கூறல் பற்றிய வெளி முற்றாக அடைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறப்பட்டுள்ளது போல் ஐ.நா சபையும், சர்வதேச சமூகமும் ராஜபக்ஷக்களின் மீள்வருகைக்கு காரணம். ஐ.நா சபையும், சர்வதேச சமூகமும் குற்றவாளிகளைத் தண்டித்து மீள்வருகையைத் தடுத்திருக்கமுடியும். அவர்களால் அதுசெய்ய முடியாமற்போனதற்கு காரணம் அக்குற்றங்களுக்கு அவர்களும் உடந்தையாக, பார்வையாளர்களாக இருந்தார்கள். குற்றவாளிகளை தண்டிக்கும் ஒரு வெளியாக இவ்வரலாற்றுத் தருணத்தில் கிடைக்கக்கூடிய பொறி சர்வதேச விசாரணை மட்டுமே. இதையே தமிழர்கள் 2009இல் இருந்து கூறி வருகின்றார்கள். இந்த வெளி அமெரிக்கா, மேற்குலக அச்சுசாராத ஏனைய வட்டங்களால் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கான முயற்சிகளை இந்த அரசியல் வெளியைப் பயன்படுத்தி முன்னகர்த்தவேண்டும்.

இவ் வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் அமெரிக்க மேற்குலக சக்திகளுக்கு கோத்தபாய வேண்டியவர். மைத்திரி அரசின் ஐந்து வருடகாலம் தமிழ் மக்களின் அரசியல் நாடித்துடிப்பை அறிவதற்கான காலமாக பயன்படுத்தப்பட்டிருப்பின் தமிழ் மக்களால் கைவிடப்படாத கோரிக்கைகளாக இருக்கும், வடக்கு-கிழக்கு இணைப்பு (தேசம்), தாயகம், சுயநிர்ணயம், அமெரிக்காவினாலும், மேற்குலகத்தினாலும் முன்னெடுக்கப்படுகின்ற தமிழ் கடலை ஆதிக்கம் செலுத்துகின்ற முயற்சிகளுக்கும் அவற்றின் ஏனைய நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் இடையூறாக அமைகின்றன. புவிசார் அரசியலில் தமிழர் கடலின் கேந்திர முக்கியத்துவம் மிக அவசியமானதாக அமைகின்றது. ஆகவே தமிழர்களின் தேசம், தாயகம், சுயநிர்ணய கோரிக்கைகளை நசுக்குகின்ற ஒருவராக கோத்தபாய தென்பட்டார். அதேநேரத்தில் கோத்தபாய அமெரிக்க மேற்குலக நாடுகளின் நலன்களுக்கு இடையூறாக இருக்கப்போவதில்லை என நம்பப்பட்டார். அதேவேளை அமெரிக்க மேற்குலகநாடுகள் கோத்தபாய மீது போர்க்குற்ற விசாரணைத் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி தங்களது நலன்களை முன்னகர்த்துவதற்கு இலகுவாக அமையும்.

தமிழர்களுக்கு தேவையான தலைமைத்துவம் தமிழ் அரசியல் கட்சிகளின் வெளிக்கு அப்பாலானது

கிட்டத்தட்ட 1956ம் ஆண்டை நினைவூட்டுகின்ற தருணங்களாக நிகழ்காலம் அமைந்துள்ளது. ‘மீட்பர்கள்’ –மக்களை விடுதலைநோக்கி வழி நடத்துகின்ற தலைவர்கள்- வெளியே இருந்துவருவதில்லை. மாறாக மக்களுக்குள் இருந்து உருவாகின்றார்கள் அல்லது உருவாக்கப்படுகின்றார்கள். 2009 க்குப் பின்னர் கட்டமைக்கப்பட்ட ஐ.நா, மேற்குலக-மையவிடுதலை அணுகுமுறை தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு பொறி. எவ்வாறு பேச்சுவார்த்தைகளும் டோக்கியோ சந்திப்பும் கடந்தகாலங்களில் தமிழர்களுக்கு பொறிகளாக அமைந்தனவோ. அதுபோல் தாயகத்தில் உள்ள விடுதலை–மையப்புள்ளியை தாயகத்திற்கு வெளியே நகர்த்தி தாயகத்திற்கு வெளியே இருந்து தமிழர்களுக்கு விடுதலையை கொண்டுவருவது என்பது ஒருமாயை. தற்போது தமிழர்களுக்குள்ள தெரிவு தமிழ் தேசமீள்கட்டுமானம், குறிப்பாக அடித்தள சமூககட்டுமானங்களுக்கூடாக தமிழர் தேசத்தை தேசிய இயக்கமாக வன்முறையற்ற அணுகுமுறைகளோடு முன்னெடுக்கவேண்டியது வரலாற்றுக் கட்டாயம். இவ்வாறானதே சிய இயக்க கட்டமைப்பு தற்போதுள்ள தேர்தல்-மைய அரசியலுக்கூடாக நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அறுதியாகவே இல்லை எனக் கூறலாம். தற்போதுள்ள அரசியல் கட்சிகள் தமிழர் தேசத்தை, தேர்தல்-மைய அரசியலுக்கு அப்பால் பார்க்கின்ற தீர்க்கதரிசனப் பார்வை இல்லாத நிலைப்பாடு தெட்டதெளிவாக தோன்றுகின்றது.

ஆகவே தமிழ் தேசத்தை இயக்கமாக ஒருங்கிணைக்கின்ற தலமைத்துவம் தமிழ் அரசியல் கட்சிகளுக்குளிருந்து வரமுடியாது. ஏனனில் தமிழ் அரசியல் கட்சிகள் அரச-மைய சிந்தனை கொண்டவை. தமிழர்களுகக்கான தலமைத்துவம் அரச-மைய சிந்தனையற்ற வெளியில் இருந்து உருவாகவேண்டும். அதுதான் ஒட்டுமொத்த தமிழர்களையும் தமிழ் தேசிய இயக்கமாக ஒன்றிணைக்கின்ற நம்பகத் தன்மையையும் அறத்தையும் கொண்டிருக்கும். ஆகவே இந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து தமிழ் அரசியல் கட்சிகளின் வெளிக்கு அப்பால் ஒரு தலமைத்துவத்தை கூட்டமைக்க வேண்டிய கடப்பாட்டுக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியம் அக முரண்பாடுகளை தீர்க்கவில்லை என்ற விமர்சனம் பின்-முள்ளிவாய்க்கால் பரப்பில் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. குறிப்பாக பிராந்திய மத, சாதி, வர்க்க, ஆணாதிக்க, பெண்விடுதலைசார் அகமுரண்பாடுகளை தீர்க்கவில்லை. அதனால் தான் தமிழ் தேசியம் நெருக்கடிக்குள் பயணிக்கின்றதா என்ற கேள்வி நம்மிடையே எழுந்தது. தமிழ் தேசியத்தின் முற்போக்கான கட்டமைப்புக்கு தமிழ் தேசியம் மீதான விமர்சனம் அவசியமானது. ஆனால் தமிழ்த் தேசியத்தின் அக முரண்பாடுகளை பலவீனமாகக் கருதி சிங்கள-பௌத்த தேசியவாதம் தமிழ் தேசியத்தின் சரிவுக்கோ தமிழ் பேசும் தாயக மக்களை கூறுபோடவோ அனுமதிக்க இயலாது. இவ் அகமுரண்பாடுதளைக் களைந்து – தீர்த்து சரியான அரசியல் பாதையில் அணித்திரட்ட கூடிய கருத்தியலாக தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்கப்படவேண்டிய தருணங்கள் கதவண்டைவந்துவிட்டன.

தமிழ் தேசத்தின் அக முரண்பாடுகளை எதிர்கொண்டு தீர்ப்பதற்கும் அதேவேளையில் இனவழிப்பு அடக்குமுறையையும் எதிர்ப்பதற்கும் இனஅழிப்பை தடுப்பதற்கும் ஏற்கனவே நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் நீதிவேண்டுவதற்கும் சிவராம் குறிப்பிடுகின்ற ‘மக்களின் கூட்டு உளவலு’ அடித்தளமானது. அக முரண்பாடுகளை தடுப்பதற்கும் அடக்குமுறையை எதிர்ப்பதற்குமான அரசியல் ஒருமைப்பாடும் தேசிய இயக்கமாதலும் இந்த கூட்டுஉளவலுவில் இருந்தே பெறப்படவேண்டும். ஆகவே இந்த கூட்டு உளவலு தமிழ் தேசிய கருத்தியலோடு கூட்டமைக்கப்பட வேண்டும். எல்லோரையும் உள்வாங்கிய அக முரண்பாடுகளைத் தீர்த்த அடக்குமுறையை எதிர்க்கின்ற தேசக் கட்டுமானத்தில் ஈடுபடுகின்ற முற்போக்கான தமிழ் தேசியக் கருத்தியல் அரசியல் நிகழ்ச்சி திட்டத்தை செய்யக்கூடிய வலுவும் வளமும் தற்போது உள்ள தமிழ் அரசியல் கட்சிகளிடம் இல்லை என்பது கவலைக்கிடமானது. இதைக்கட்டியெழுப்ப கூடிய மாற்றுதலைமைத்துவம் தமிழ் அரசியல் கட்சிகளின் வெளிக்கு அப்பால் தோன்றினால்தான் தமிழ் மக்களை தமிழ் தேசிய கருத்தியலினூடு ஒருங்கிணைக்கின்ற செயற்திட்டம் வெற்றிபெற முடியும். இந்த வரலாற்று கடமையைத மிழர் தேசம் நிறைவேற்றும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. அதற்காக தொடர்ந்து உழைப்போம்.

வண.அருட்தந்தை எழில்

நன்றி: தினக்குரல்

 

Our Facebook Page

Archives