featued_image

பாழும்மரபை உடைத்தெறிதல் | துஸ் விக்ரமநாயக்கே

auhtor

on
2020-04-13


By :
Oorukaai


385 Views

 

ஒரு சமூகத்தின் உயிர்நாடியானது, அது தனது குழந்தைகளை எப்படி நடத்துகின்றது என்பதிலேயே தங்கியுள்ளது – நெல்சன் மண்டேலா.

இலங்கை வரலாற்றில் சிறுவர் படுகொலை தொடர்பான பதிவுகளில், முதல் சம்பவம் 1814 ஆம் ஆண்டு பதிவாகியிருந்தது. அது தொடர்பான பதிவொன்றில் ”குறுகிய காலத்தில் ஒரு கொடுஞ்சம்பவம் நடந்தேறியிருக்கின்றது. பொதுமக்களிற்கான நல்லதொரு ஆட்சியில் அதற்கு சற்றும் ஒவ்வாத, காட்டுமிராண்டித்தனமான, தனி மனித ஒழுக்கத்திற்கும் சமூக நெறிமுறைக்கும் புறம்பான, மனச்சாட்சிக்கும் மனித உணர்வுகளிற்கும் கொஞ்சம் கூட மதிப்பளிக்காத தன்மையை இந்தச் சம்பவம் காட்டுகிறது. மேலும் இது மனித அழிவு கடைசிக்கட்டத்தை நெருங்கியுள்ள அபாயத்தையும் சுட்டுகிறது. எகலபொல மற்றும் அவரது மனைவி பிள்ளைகளின் விதியை முடிவுக்குக்கொண்டுவந்த ஒரு துர்ப்பாக்கியகரமான சம்பவமானது பொது ஆட்சி தொடர்பில் மேற்சொன்ன கூற்றுக்களை மேலும் மேலும் நிரூபிப்பதாகவே உள்ளது. மேலும், அந்தச் சம்பலத்தில் நான்கு சிறுவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். தாயின் வசமிருந்த பச்சைப்பாலகன் அவள் மார்பிலிருந்து பறித்தெடுக்கப்பட்டு கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டதோடு மற்றைய குழந்தைகளை தாயின் கைகொண்டே மோட்டார் ஒன்றின் கம்பியில் மோதிக் கொலைசெய்யப்பட்டார்கள். அந்தப் பெண்ணையும் மேலும் மூன்று பெண்களையும் அவர்களின் கை கால்களை இறுக்கமாக பிணைத்து அவர்களது கழுத்தில் பாரியதொரு எடைகூடிய பாறாங்கல்லையும் கட்டி, ஆற்றில் தூக்கி வீசப்பட்டு ஓடும் நீரில் இழுத்துச்செல்லப்பட்டனர்.” கண்டி இராசதானி பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டதன் பின்னர் கண்டி தலைமை அதிகாரிக்கு, கண்டி ஆளுநர் சேர் றொபேட் பிறவுண்றிக் எழுதிய உத்தியோகபூர்வ அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.

மனித பரிணாமம்
இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு அடிப்படை உண்மை என்னவென்றால், இங்கு வாழ்கின்ற எல்லா விதமான உயிரிகளுமே தமது வழித்தோன்றல்களான இளையவர்களை, பிள்ளைகளை எந்த துன்பங்களும் நெருங்காமல் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொடுக்கவே முயற்சிக்கின்றன. அப்படியிருக்கையில், மற்றைய உயிரிகளிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுவது எது..? சாள்ஸ் டாவினின் கூற்றுப்படி மனிதர்களும் மிருகங்களும் ஒத்த இயல்புடையவையே. எனினும், மனிதர்களைப் பொறுத்தவரையில் பரிணாம வளர்ச்சியின் பலனாக அவர்கள் விலங்குகளைவிட சற்று மேம்பட்டவர்களாகவும் புத்திசாலித்தனமும் பகுத்தறிவுமுடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்றே நம்பப்படுகிறது. மனிதர்கள் கொண்டிருக்கின்ற நுண்ணறிவும் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்ட தன்மையும் கோமோசேப்பியாக்களின் சிறப்பாகவும் நம்பப்படுகின்றது ஆனால், டாவின் அவர்கள் இலங்கைத் திருநாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைகாரர்கள் எப்படி விடுவிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி அறிந்திருந்தால் அவர் கண்டிப்பாக தனது பரிணாமக் கொள்கையின் முடிவை மாற்றியிருப்பார்.

வரலாற்றுக்காலம் தொட்டு தம்பபன்னி, செரண்டிப், சிலோன்,இந்து சமுத்திரத்தின் முத்து என பரவாலக அறியப்பட்டு இந்தக் குட்டித்தீவானது 72 ஆணடு கால சுதந்திர ஆட்சியின் பின்னரே இப்போதிருக்கின்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு ”ஆசியாவின் ஆச்சரியம்” என்ற நிலையை அடைந்திருக்கின்றது. இந் நிலையில், உண்மையிலேயே மிகப்பலமான அரசியல் செல்வாக்குள்ள ஒரு நபர், ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டசபை உறுப்பினராகவோ இல்லாத, ஆனால் அதேநேரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றவர் மிக வெட்கக்கேடான காட்டுமிராண்டித்தனமான படுகொலையிலீடுபட்டு மரணதண்டனை பெற்றிருக்கும் கொலைகாரர்களை வெகு இலகுவாக தண்டனையிலிருந்து விடுவித்துவிடுவது போன்ற மிகவும் புதிரான இலகுவில் புரிந்துகொள்ளமுடியாதன போன்ற அதிகாரங்களை கையிலெடுக்கிறார்.

2019 கார்த்திகை.
யூட் ஜெயமகா என்கின்ற மிகவும் வசதிபடைத்த பின்புலத்தைக்கொண்ட இராணுவத்தினன் ஒருவருக்கு 12 வருட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த 2005 ஆம் ஆண்டு, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணொருவரை அவர் தங்கியிருந்த குடியிருப்புப்பகுதிக்கு வெளியே கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக அந்தத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர் தனக்களிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தபோதும் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதோடு அதற்குப் பதிலாக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு அது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. கொலை செய்யப்பபட்டவரின் சகோதரி இது தொடர்பில் நீதிமன்றத்தில் கூறும்போது ”குற்றம் செய்த இந்த நபர் அது தொடர்பாக சிறிது கூட வருத்தம் காட்டவில்லை. அதனால் இவரை வைத்து பூட்டிவிட்டு சாவியை தூரமாக எறிந்துவிடுங்கள்” என்று தெரிவித்திருந்தார். அந்தச் சொற்களால் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில், பதவி முடிந்து வெளியேறும் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் யாருமே சற்றும் எதிர்பார்க்காதபடி இந்த ”றோயல் பார்க் கொலைகாரன்” யூட் ஜயமகாவிற்கு பொதுமன்னிப்பளித்து விடுவித்தார். ரிக்டர் அளவுகோலில் 7.0 அளவு பூகம்பம் நிகழ்ந்தது போல் இந்த மொத்த இலங்கைத்திருநாடுமே அதிர்ந்து போயிருந்தது.

1991 இலிருந்து 2000 வரை.
1991 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான மாநாட்டில் (UNCRC) இலங்கை அரசு கைச்சாத்திட்டு அதற்கு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து, சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை காட்டிய ஒரேயொரு அதிபராக, நாட்டின் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களால் 1996 ஆம் ஆண்டில், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

அதன் மிக முக்கியமாக செயற்பாடுகளில் ஒன்றாக, 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA ) ஒன்றினை உருவாக்கி, அது ஜனாதிபதி செயலகத்தின் கீழ் வருமாறு பதிவுசெய்யப்பட்டது. எனினும், கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ அவர்களால் NCPA ஆனது , பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட தனி அமைச்சகத்தின் கீழ் மாற்றப்பட்டது. அதன் பிறகு, சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக எழத்தொடங்கின.

சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் அவர்களது உரிமைகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இலங்கைப் பொலிஸ், நீதித்துறை மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் போன்றன முன்னெடுக்கும் செயற்பாடுகள் பெரும்பாலும் பொறுப்பற்ற விதத்தில் காணப்படுவதோடு வெறுப்பையும் அதிருப்தியையுமே தோற்றுவிக்கின்றன. அதேநேரம், குற்றங்கள் தொடர்பான நீதிவிசாரணைகள் நீண்டகாலத்திற்கு இழுத்தடிப்புச்செய்யப்படுவது போன்றன மனதிற்கு வேதனையையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

2017 ஆம் ஆண்டின் இறுதிக்காலக் கணக்கெடுப்புக்களின் படி, கடந்த 10 ஆண்டுகளில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான 17000 முறைப்பாடுகள் சட்டத்தரணிகள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 2018 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது ஆகக் குறைந்தது 20,000 ஆக உயர்ந்திருக்கும் என நம்பப்படுகின்றது. இத்தகைய சம்பவங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு நியாயம் கிடைக்கும் என்பதில் எந்தவித நம்பிக்கையுமற்றவர்களாக, தாம் சந்தித்த துன்பத்தின் நினைவுகளிலிருந்து எளிதில் விடுபட்டு விட முடியாதவர்களாக தொடர்ந்தும் நரக வேதனையிலேயே வாழ்கின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தை மாதத்தில் UNCSC ஆல் வெளியிடப்பட்ட ; ஐந்தாம் மற்றும் ஆறாம்கட்ட கூட்டறிக்கையில், இலங்கை அரசானது சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் அசமந்த போக்கினை காட்டுவது தொடர்பில் மிகுந்த கவலைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தொடர்ந்து குறுகிய காலத்திலேயே NCPA க்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறத் தொடங்கியமையானது சிறுவர் உரிமைகளை நிலைநாட்டுவதில் நாடு; ஆபத்தான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. 2010 ஆம் ஆண்டில் 3892 ஆக பதிவுசெய்யப்பட்டிருந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் 8558 ஆக உயர்வடையும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

இலங்கைத்தீவானது 1992 ஆம் ஆண்டிலிருந்து 6 பாராளுமன்றத் தேர்தல்களை சந்தித்திருக்கின்றது. ஆறு தடவைகள் நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆயினும், சிறுவர்களின் உரிமைகள் மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் இதுவரையில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியளவிற்கு எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

2020 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் இரு வாரங்களிலேயே (15 நாட்களிற்குள்), நாட்டின் பல்வேறு பொலிஸ் பிராந்தியங்களிலிருந்து 142 பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்களும், 42 பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்களும், 54 சிறுவர் துஸ்பிரயோக வழக்குகளும் பதிவாகியிருப்பதாக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்க பிரதம கொரடா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். நல்லது, மிக நல்லது. இதில் ஆச்சரியப்படவும் எதுவுமில்லை. இந்த வெங்காய அரசாங்கமானது தொடர்ந்தும் இதே வேகத்திலேயே செயற்படுமென்பதிலும் ஆச்சரியமெதுவுமில்லை.

பங்குனி 2020.
இராணுவ சேர்ஜன்ட் சுனில் ரத்னாயக்கே, அவர் மீது சுமத்தப்பட்ட 15 குற்றங்களில் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டு, கடந்த 2015 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றின் மூலம் விசாரணை செய்யப்பட்டார், அந்த விசாரணையில், அவர் நான்கு சிறுவர்கள் உட்பட (அவர்களில் ஒன்று வெறும் 5 வயது மட்டுமேயான குழந்தை) எட்டு நிராயுதபாணி பொதுமக்களை ஈவிரக்கமின்றி படுகொலைசெய்தாரென்பது (அவர்களின் சடலங்கள் வெற்று கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தன) சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சுனில் ரத்னாயக்கே மேல்முறையீடு செய்திருந்தபோதும் அவரது விண்ணப்பம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் கொண்ட குழுவொன்றின் மூலம் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், கடந்த பங்குனி மாதம் 28 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட “மிருசுவில் கொலைகாரன்” சுனில் ரத்னாயக்கேவினது விடுதலையானது, கோவிட் 19 ஐ விட மிக பாரதூரமான ஒரு அழிவாக, நாடு 8.9 ரிக்டர் அளவான பூகம்பத்தை சந்தித்தது போன்றதான ஒரு அதிர்வை, நம்பிக்கையீனத்தை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

ஜனாதிபதி கோத்தபாஜ ராஜபக்ஸவினது இந்த முடிவுக்கு “அம்னெஸ்ரி இன்ரநெசனல்” உடனடியாகவே தனது கண்டனங்களை தெரிவித்திருந்தது. குறிப்பிட்ட திடீர் விடுதலை தொடர்பாக நீதிமன்ற விசாரணை அறிக்கை, சட்டமா அதிபரிடம் பெறப்பட்ட ஆலோசனை அறிக்கை மற்றும் நீதி அமைச்சரின் பரிந்துரை உள்ளிட்ட சகல ஆவணங்களையும் உடனடியாக பொதுப்பார்வைக்கு வெளிப்படுத்துமாறு TISL ஜனாதிபதி செயலகத்தை கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பரபரப்பாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கிறது. கொடூரமான, மிருகத்தனமான மனநிலை கொண்ட ஒரு கொலையாளி எந்த விதமான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையுமற்று சமூகத்தில் இணைக்கப்பட்ட இச் செயற்பாடானது அதிகாரத்தின் உச்சியிலிருக்கின்ற ஒரு மனிதர், எந்தவிதமான புலன்களுமே வேலை செய்யாத ஒரு முடமாக இருப்பது போன்ற தோற்றத்தையே தருகின்றது.
ஆனால், இந்த நாட்டில் தெரிவாகும் ஒவ்வொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், நாட்டின் நீதித்துறையையும், அதிலிருக்கின்ற கற்றறிந்த பெரியவர்களையும் கேலி செய்வது போன்ற விடயங்களை ஏன் தொடர்ந்தும் ஒரு சாதாரண நடவடிக்கை போலவே செய்து வருகிறார்கள்..?

ஆயுள் முழுதும் சிறையிலேயே வாடும் ஒரு ஆயுள் தண்டனைக் கைதியை போலல்லாமல், ஒரு மரண தண்டடனைக் கைதிக்கு அவனது மறுவாழ்விற்கான சீர்திருத்தச் செயற்பாடுகள் என்று எதுவுமே வழங்கப்படமாட்டாது. அப்படியிருக்கையில், அத்தகைய கொலைகாரர்களை இவ்வாறு தான்தோன்றித்தனமாக விடுதலை செய்வதானது எமது குழந்தைகள் மறுபடியும் ஆபத்தில் சிக்குவதற்கே வழிவகை செய்யும்.

காட்டாட்சித்தனமான சட்டங்கள் நடைமுறையிலிருக்குமேயானால் எமது உள்ளுணர்வும் ஒரு விலங்கைப் போல எமது குழந்தைகள் எப்படியாவது பாதுகாத்துவிடவேண்டும் என்பது தொடர்பாகவே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கும். அந்தவகையில், இலங்கை அரசின் இத்தகைய செயற்பாடுகளிற்கெதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திலும் (UNHC)  அரசியல் மற்றும் பொது உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்பு (ICCPR) முதன் முறையாக ஒரு எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதானது நாட்டிலுள்ள 5 மில்லியன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு சிறு நம்பிக்கையை கொடுக்கும்.

ஆகவே, இந்த ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை திருத்தி ”டாவின்” கோட்பாட்டை பெருமைப்படுத்துங்கள்.

டொக்ரர் துஸ் விக்ரமநாயக்கே,
தலைவர்.
சிறுவர் கொடுமைகளிற்கெதிரான அறக்கட்டளை.

நன்றி :colombotelegraph

மொழிமாற்றம் : முகில்நிலா

Our Facebook Page

Archives