featued_image

நீதிக்கு அப்பாலான குற்றவாளிகள் | ஜெரா

auhtor

on
2020-04-27


By :
Jera Thampi


448 Views

 

உலகம் முழுவதும் கொரோன வைரஸ் அச்சுறுத்தல் மக்களையும், அரசுகளையும் கிலிகொள்ளச்செய்திருக்கிறது. நாளதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் செத்தொழிகின்றனர். இதுவரை வல்லரசுகளாக வலம்வந்த நாடுகளே செய்வதறியாது குழம்பிநின்கின்றன. இதேநிலைமைதான் இலங்கைக்கும். தென்னாசியாவில் அதிகளவாக கொரோனொ பாதிப்பினை எதிர்கொண்டிருக்கும் நாடாக (சனத்தொகையுடன் ஒப்பிடுகையில்) இலங்கை மாறிவருகின்றது. இவ்வாறு சர்வதேச அளவிலும், உள்நாட்டளவிலும் மக்கள் இறந்துகொண்டிருக்க இலங்கை அரசு தன் பௌத்த மேலான்மைவாத சிந்தனையை இறுகப் பிடித்தபடி நுட்பமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது. காலம்தோறும் இலங்கையில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்கமுறையை மேற்கொள்ளும் கருவியாக பௌத்தப் பெரும்பான்மைவாதம் பாவிக்கப்பட்டுள்ளது. ஐந்துவருடங்களுக்கு ஒருமுறை அரசேறும் அரசுகள் காலத்துக்கு ஏற்ப இந்தப் போக்கில் சில மாற்றங்களை செய்திருக்கின்றன. ஆனால் அடிப்படை மகாவம்சம் போதித்துள்ள பௌத்த பெரும்பான்மையை நிரூபிக்கும் மேலான்மைவாதத்தை முதன்மைப்படுத்துவதாக இருந்திருக்கின்றது. 2020 இல் அமோக சிங்கள வாக்குகளால் ஆட்சியைப் பிடித்த ராஜபக்ச குடும்பத்தினர் கூட பௌத்த பெரும்பான்மை மக்களின் நலன்களிலிருந்து துளியளவும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்பதை மீளமீள வலியுறுத்தியே வந்தனர். இந்தக் கொள்கைக்கான அறுவடையைத்தான் அவர்கள் பெற்றுமிருக்கின்றனர். எனவே இனிவரும் காலங்களில் அதனை மேலும் மெருகேற்ற வேண்டிய அரசியல் பணி அவர்கள் முன்னுள்ளது.

எனவேதான் நாட்டு மக்கள் என்னவித அபாயத்தில் இருந்தாலும் தமது பெரும்பான்மைவாத செயல்களில் ராஜபக்சக்கள் துணிந்துநின்று காரியமாற்றுகின்றனர். அதற்காக நாட்டின் ஜனாதிபதி கடந்த வாரம் செய்திருக்கும் காரியம்தான், யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் வைத்து எட்டுத் தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலைசெய்த கொலைக் குற்றவாளியான இராணுவத்தினன் சுனில் ரத்நாயக்கவை பொதுமன்னிப்பின் கீழ் விடுவித்திருப்பது.

மிருசுவில் படுகொலை

2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் சூனியப் பகுதியாக நாகர்கோவில் எழுதுமட்டுவால் மிருசுவில் பகுதிகள் இருந்தன. எனவே இக்கிராம மக்களும், இக்கிராமங்களுக்கு அடுத்துள்ள கிராம மக்களும் இடம்பெயர்ந்து யாழ்.குடாநாட்டின் பிற பகுதிகளில் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவ்வாறு மிருசுவில் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களில் ஒரு தொகுதியினர் பருத்தித்துறை நாவலர்மடம் பகுதியில் தங்கியிருந்தனர். அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்கு இராணுவத்தின் அனுமதி பெற்றும் – பெறாமலும் சென்று வருவதை வழமையாகக் கொண்டிருந்தனர். வீட்டுப் பொருட்களை எடுத்துவருவதற்காகவும், தேங்காய் மற்றும் உற்பத்திப்பொருட்களை எடுத்துவருவதற்காகவும் இவ்வாறு சென்று வந்தனர்.

இவ்வாறு சென்றவர்கள் தம் காணி பகுதியில் இருந்து துர்நாற்றம் வருவதை அவதானித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களின் துடிப்புள்ள குடும்பஸ்தர் ஒருவர் தொடர்ந்து தேடுதல் நடத்தியபோது, அப்பகுதியில் அரைகுறையாக மூடப்பட்டிருந்த குழியொன்றுக்கு அருகில் ஒரு சோடி காலணிகள் காண்டார். அவருக்கு சந்தேகம் வலுப்பெறவே மூடப்பட்டிருந்த குழியை இரகசியமாகத் தோண்டினர். குழியினுள்ளே இளம்பெண்ணொருவரின் சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அதனைக் கண்டவுடன் பயந்துபோனவர் அருகில் இருந்த இராணுவ முகாமில் முறையிட்டார். இராணுவமும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இறந்த ஒருவரின் சடலமே அதுவென்றும் தாம் அதைப் புதைத்துவிட்டதாகவும் கூறி, முறைப்பாட்டாளரின் விபரங்களை எடுத்துக்கொண்டு அனுப்பிவிட்டது.

இராணுவத்தின் மீது சந்தேகம் கொண்ட அவர், தன் தற்காலிக வசிப்பிடத்திற்குத் திரும்பி, அயலிலுள்ளவர்களுக்கு சம்பவத்தைக் கூறினார். அதனைத் தொடர்ந்து கொல்லப்பட்ட பெண்ணின் உடலத்தை அடையாளம் காணும் பொருட்டு 19.12.2000 அன்று சிலர் மிருசுவிலுக்குச் சென்றனர்.

ரகசியமாக இவர்களைக் கண்காணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினர் மக்களை கைதுசெய்தபோது தேங்காய்களைப் பறித்துக்கொண்டும், உரித்துக்கொண்டும், கொய்யாப்பழங்களை பறித்துக்கொண்டும் இருந்தனர். அவர்களைக் கைதுசெய்த இராணுவம் உடுத்திருந்த ஆடைகளை அவிழ்த்து கண்களையும், கைகளையும் கட்டி மோசமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஒவ்வொருவராகத் தூக்கி முட்கம்பி வேலியொன்றுக்கு அப்பால் தூக்கிவீசியுள்ளனர். அவ்வாறு தூக்கிவீசப்படும்போது மகேஸ்வரன் என்பவரது கண்கட்டு விலகிவிட்டது. தம்மை இராணுவம் படுகொலை செய்யப்போவதை ஊகித்துக்கொண்ட அவர் அங்கிருந்து ஓட்டமெடுத்தார். அவரைத் தவிர இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டுவிட்டனர்.

தப்பியோடியவர் மந்திகை வைத்தியசாலைக்கு அடிகாயங்களுக்கு சிகிச்சை பெற சென்றபோது, சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதன்பின்னர் இடம்பெற்ற பொலிஸ் விசாரணைகளில் தான் எண்மரையும் படுகொலைசெய்த இராணுவத்தினரை அடையாளம் காட்டுவேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து அவரின் சாட்சியமளிப்பின் வழியிலேயே சுனில் ரத்னாயக்க உள்ளிட்ட ஐந்து இராணுவத்தினர்  படுகொலையாளர்களாக அடையாளம்காணப்பட்டனர். முதற்கட்ட விசாரணைகளில் தாம் வன்னியிலிருந்து புதிதாக வந்த இராணுவ அணியென்றும், விடுதலைப் புலிகள் வந்துவிட்டனர் எனக்கருதியே எண்மரையும் சுட்டுக்கொன்றதாகவும், மேலதிகாரிக்குக் கேட்டுவிடும் என்பதனாலேயே தப்பியோடியவரை சுடவில்லை எனவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறு குற்றங்களை ஒப்புக்கொண்ட இராணுவத்தினர் மீதான விசாரணை 2015 ஆண்டு ஆனி மாதம் 25 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது. இறுதி தீர்ப்பளிப்பை வழங்கிய கொழும்பு மேல்நீதிமன்றம், குற்றஞ்சாட்டபட்டுள்ள ஐந்து இராணுவத்தினரில் நால்வருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், சுனில் ரத்னாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாகவும் தெரிவித்து, அவருக்கு மரணதண்டனையை வழங்குவதாகக் குறிப்பிட்டது.

சர்வதேச வரவேற்புக்கள்

கிட்டத்தட்ட 15 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பினால் அப்போதிருந்த மைத்திரி – ரணில்  கூட்டரசாங்கத்தின் மீதான நன்மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்தது. அப்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்ட, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கான உள்ளகப் பொறிமுறைக்கு இவ்வழக்கு தீர்ப்பு சிறந்த எடுததக்காட்டாக முன்வைக்கபட்டது. இதுகுறித்து கருத்துவெளியிட்ட அரச தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிட்டர் ஜெனரல் சரத் ஜயமனன்ன, இந்தத் தீர்ப்பின் மூலம் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டுக்குள் பலமான நீதிக் கட்டமைப்பொன்று இருக்கின்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.   இதனை சர்வதேச சமூகமும் வரவேற்றிருந்தது. இலங்கையின் நீதித்துறை மீது நம்பிக்கை பிறந்துள்ளதாகத் தெரிவித்தது.

இப்போது ஐந்துவருட இடைவெளியில் ராஜபக்சக்கள் நீதித்துறை தம் அரசியலுக்குப் பயன்படுத்த கையிலெடுத்துவிட்டனர். தமது அரசியலுக்கு நலன்தரும் நீதித்துறைசார் அனைத்து விடயங்களையும் காரியமாற்றத்தொடங்கிவிட்டனர். அதனையும் சர்வதேச சமூகம் கண்டித்தலோடும், கவலைதெரிவிப்பதோடும் கடந்துபோகிறது.

”இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் மிகவும் அரிதாகவே வெளிப்படுத்தப்படும் இடத்தில் சுனில் ரத்னாயக்காவை விடுவிப்பதற்கான அரசின் தன்னிச்சையான முடிவு மிகவும் கவலைதரும் செய்தியைத் தருகின்றது. கொடூரமான குற்றங்களைச் செய்த இராணுவ குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றாலும் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்பதே இதன்பொருள்” என்கிறது அன்னெஸ்டி.

இலங்கையின் நீதித்துறையின் சுயரூபம்

அம்னெஸ்டியின் குறிப்புத்தான் இலங்கையின் நீதித்துறை குறித்து மிகப்பொருத்தமான நிலைப்பாடாகும். இதற்கு மிகையான ஆதாரங்கள் இருக்கின்றன. கிருசாந்தி படுகொலையில் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் கையுமெய்யுமாகப் பிடிப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும் அவர்கள் மெல்லமெல்லமாகப் பல்வேறு காரணங்களின் கீழ் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். குமாரபுரம் படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரை மக்கள் பிடித்து நீதித்துறையிடம் கையளித்தபோதும் இதே நீதிமன்ற பொறிமுறைகளின் ஊடாக விடுவிக்கப்பட்டார்கள். அதேபோல திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தினரும் விடுவிக்கப்பட்டார்கள். இந்தச் சம்பவங்கள் அனைத்தும், இலங்கையின் நீதித்துறையால் சிறுபான்மையினத் தமிழர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் இராணுவத்தைத் தண்டிக்க முடியாது என்பதைத்தான். அப்படியே நீதித்துறை மரண தண்டனை விதித்தாலும் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தை தேசிய வீரர்களாக்கி சிங்கள பெரும்பான்மைவாத சாயம்பூசி அவர்களை அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருக்கிறார்கள். இன்னொரு விதத்தில் ஜனாபதிக்கு இருக்கும் அதிகாரத்தைப் போல அவரின் இராணுவமும் சட்டம், நீதி என்பனவற்றுக்கு அப்பாலான சக்தி என்கிற அர்த்த்தைத்தையும் இச்சம்பவம் எடுத்துரைக்கிறது. ஏனெனில் மேற்குறிக்கப்பட்ட படுகொலை சம்பவங்கள் அனைத்திலுமிருந்தும் இராணுவத்தினர் நீதித்துறையால் விடுவிக்கப்பட்டமையானது இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இது தொடர்பில் யாழ். பல்கலையின் ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி மகேந்திரன் திருவரங்கன் அவர்களிடம் ”மாற்றம்’’ இணையத்தளம் கருத்துக்கேட்டிருந்தது. அதற்குப் பதிலளித்த அவர்,

’’இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இராணுவம் பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்தது என்பது வெவ்வேறு உள்ளூர் மற்றும் சர்வேதேச மனித உரிமை சார் அமைப்புக்களின் அறிக்கைகளின் ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தப் போர்க் குற்றங்கள், படுகொலைகள் பற்றி நாட்டில் இருக்கும் நீதிக் கட்டமைப்பின் ஊடாகத் தமிழ் மக்கள் நீதியினைப் பெற்றமை விரல் விட்டு எண்ணக் கூடிய தடவைகளே. நான் அறிந்த வரைக்கும் மிருசுவில் படுகொலை வழக்கிலும், கிருஷாந்தி குமாரசாமி வழக்கிலும் மாத்திரமே தமிழர்களுக்கு எதிராகக் கடுமையான‌ குற்றம் இழைத்த படைவீரர்களுக்கு இலங்கையின் நீதிக் கட்டமைப்பினால் தண்டனை வழங்கப்பட்டது. இன்று நாட்டின் ஜனாதிபதி, சுனில் ரத்னாயக்கவிற்கு வழங்கிய தண்டனையினை சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பு ஒன்றின் மூலமாக நீக்கியமை ஏற்கனவே நாட்டில் இருக்கும் நீதித்துறையின் மீதும் நிருவாகத் துறையின் மீதும் நம்பிக்கை இழந்து போயிருக்கும் தமிழ் மக்களுக்கு மேலும் நம்பிக்கையீனத்தினை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன்.

உலகத்திலே ஒரு நாடுகடந்த தொற்று நோய் பரவி வரும் சூழலிலே, உலகின் பெரும்பாலான பகுதிகள் நெருக்கடிக்குள் மூழ்கியிருக்கும் ஒரு சூழலிலே, நள்ளிரவிலே ஊர் உறங்கிய பின் இடம்பெறும் ஒரு திருட்டுச் சம்பவம் போல, இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை மிகவும் மோசமான ஜனநாயக விரோதச் செயல். எனவே, நான் கருதுகிறேன். இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறைகளை நோக்கி மேலும் மேலும் செல்வதனையே தூண்டும். நாட்டின் ஜனாதிபதியின் இந்த முடிவினை, இலங்கை அரசும், ஜனாதிபதியின் அரசியற் கட்சியும், ஜனாதிபதியும் முன்னிறுத்தும் சிங்கள பௌத்தத் தேசியவாதத்தின் ஒரு வெளிப்பாடாகவும் நான் பார்க்கிறேன். இராணுவத்தினை சிங்கள பௌத்த தேசத்தின் பாதுகாவலர்களாகக் காண்பிக்கும் அரசியலின் ஒரு பகுதியே இந்த மன்னிப்பு. இதன் மூலம் சிங்கள பௌத்த மக்களின் மத்தியில் தனக்கு இருக்கும் பிரசித்தியினை மேலும் அதிகரிப்பதற்கு ஜனாதிபதி இந்த மன்னிப்பினை வழங்கியிருக்கிறார் என்றே கருத வேண்டி இருக்கிறது.

சிங்கள பௌத்த அரசியலின் ஒரு பகுதி, தமிழ் மக்கள் மீது வன்முறையினைப் பிரயோகித்த‌ இலங்கை இராணுவத்தினைச் சட்டத்தின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட அல்லது மேற்பட்ட ஓர் அமைப்பாக முன்னிறுத்துவதே. நாளை சிங்கள மக்களில் வறியவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் பிரச்சினைகள் தொடர்பிலே அவர்கள் ஏதாவது போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் மேற்கொள்ளும் போது தமிழ் மக்களைப் படுகொலை செய்த அதே இராணுவத்தினை இலங்கை அரசு போராடும் சிங்கள மக்களின் மீதும் கூட ஏவலாம். 1989 கிளர்ச்சிக் காலத்திலும், ரத்துபஸ்வலப் போராட்டங்களிலேயும் அரசின் வன்முறை சிங்கள மக்களின் நலிவுற்ற பிரிவினரின் மீது இராணுவத்தின் உதவியுடன் ஏவப்பட்டது. எனவே, இந்த மன்னிப்புக் குறித்து சிங்கள மக்கள் மௌனம் காப்பதுவோ அல்லது அதனைத் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுவதோ கூட, இராணுவ மயமாக்கத்தினையும், அரச வன்முறையினையும் சாதாரணப்படுத்தும் செயல்முறைகளாக‌ மாறி ஒரு நாள் அவர்களுக்கே கூட அது ஆபத்தாக அமையலாம். இந்த மன்னிப்புக் குறித்து நீதியினை வலியுறுத்தும் நாட்டின் எல்லா மக்களும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பது மிகவும் அவசியம்’’. என்றார்.

தேவை சர்வதேச விசாரணை

எனவே இனிவரும் காலங்களிலும் இங்கு நடக்கும் இராணுவத்தினரது குற்றச்செயல்களை, மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தமுடியாது. குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடனான நீதிப்பொறிமுறையொன்று இல்லாதவிடத்து குற்றங்கள் ஓயப்போவில்லை. நீதிமன்ற தண்டனைகள் குறித்து அச்சம் ஏற்படப்போவதில்லை. சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபடுவர்களே தேசிய வீரர்கள் என்ற மனநிலையையே இந்த நீதித்துறையும் இலங்கை சிங்கள பெரும்பான்மைவாத அரசியலும் வழங்குகின்றது. நிலைமை அப்படியிருக்கும்போது அவர்களை எப்படி தண்டிக்கமுடியும். பாதிக்கப்பட்ட தமிழர்கள் அவர்களிடமிருந்து எப்படி நீதியை எதிர்பாரக்க முடியும். எனவே இப்போதும்கூட சர்வதேச விசாரணை ஒன்றுக்கான தேவையே வலுவாகின்றது.

Our Facebook Page

Archives