featued_image

நான் ஒரு மட்டக்களப்பு பிரதேசவாதி | தராகி

auhtor

on
2020-04-29


By :
Oorukaai


668 Views

 

 

“வீரமும் களத்தே போட்டு வெறுங் கையோடு இலங்கை புக்கான்” இது கம்பனின் அழிக்கமுடியா கவிதை வரிகளில் ஒன்று.

கருணாவினுடைய செயல்களை எண்ணும்போது கம்பனின் இவ்வரிகள் என் எண்ணத்தில் தோன்றும்.

நான் மட்டக்களப்பில் வாழைச்சேனையிலிருந்து நீலாவணை வரையும், கொக்கட்டிச்சோலை கரடியனாறு எனவும் ஒரு கிழமையாக பல இடங்களிலும் சுற்றித் திரிந்தேன். அப்போது என்னை ஆங்காங்கு இனம் கண்டுகொண்ட அன்பர்கள், ஆர்வலர்கள், உறவினர்கள் எனப்பலரும் “உங்களுக்கென்ன பைத்தியமா? கருணா குழுவினர் நீங்கள் இங்கு வந்திருப்பதை அறிந்தால் உங்களை கொன்றுவிடுவார்கள்” – என்று என்னிடம் கூறினர்.

மட்டக்களப்பு நான் பிறந்து வளர்ந்த மண். எந்த வெளிநாடு சென்றாலும் மட்டக்களப்பின் வாவியோரம் மாலை நேரத்தில் வீசும் தென்றல் உலகத்தின் எந்த நவீன சொர்க்கங்களிலுமே கிடைக்கப்போவதில்லை. மீண்டும் மீண்டும் அங்குதான் நான் செல்வேன். என்னை யாரும் தடுக்கமுடியாது. உலகம் முழுதும் சுழலும் என் பயணங்களின் முடிவு மட்டக்களப்பில்தான்.

சிறிலங்கா வான்படையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆலடிச்சோலையில் நான் புதைக்கப்பட வேண்டும் என்பதுதான் என் அவா. என்னுடைய ஆவலை அரசியல் இலாபத்துக்காகவும் சுயநலநோக்கத்திற்காகவும் சிறிலங்கா படைகளுடன் சேர்ந்து தடைசெய்ய முற்படும் எந்த ஒரு அற்ப பதரும் தடுத்துவிடமுடியாது. என்னிடம் மட்டக்களப்பில் இருந்து உடனடியாகப் புறப்படும்படியும் இல்லையெனில் என்னை சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயல்படும் கருணா குழுவினர் கொன்றுவிடுவார்கள் எனவும் கூறிய அனைவரும் ஒரே அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அல்லர். அவர்களுள் படையினருடன் வேலை செய்யும் முன்னாள் இயக்க உறுப்பினர்களும் அடக்கம்.

மட்டக்களப்பில் புலிகளுக்கு எதிரான பல இயக்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. அவர்கள் எவருமே (ராசிக் உட்பட) மட்டக்களப்பிலிருந்து பெரும்பாலான பத்திரிகையாளர்களை விரட்டியடிக்கும் அளவுக்கு அராஜகம் புரிந்தவர்கள் அல்லர். ஆனால் இன்று பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்கள் கூட அபிப்பிராய பேதமின்றி “கருணா என்றால் பத்திரிகையாளர்களை கொன்றழிக்கும் அல்லது மிரட்டியடிக்கும் பேர்வழி” என கூறுகின்றனர்.

வடக்கிலே சிறிலங்கா படைகளை விரட்டியடித்த புலிகளின் கட்டளைத் தளபதியாக வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் ஏன் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்ட கருணா, கேவலம் இன்று நிராயுதபாணிகளான தம் எழுத்தைத் தவிர எந்தவித பாதுகாப்புக் கவசமும் இல்லாத நடேசன் போன்ற எழுத்தாளர்களை கொலைசெய்கின்ற ஒரு நபராகவும், துரைரட்ணம், சண். தவராசா, வேதநாயகம் ஆகிய மட்டக்களப்பு எழுத்தாளர்களை கொலை செய்ய திட்டமிடும் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையின் இன்னுமொரு கையாளாகவும் மட்டக்களப்பு மக்களால் கருதப்படுகின்ற நிலைக்கு இறங்கியிருப்பது வேதனையளிக்கிறது.

வீரம் விளைந்த நிலமென்று கருணாவால் புகழாரம் சூட்டப்பட்ட மட்டக்களப்பு மண் சிறிலங்கா இராணுவத்திற்கு இன்னுமொரு கைக்கூலியை கொடுத்துவிட்டோம் என வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.

மட்டக்களப்பு மண்ணின் விடுதலைக்காக என கருணா எதைச் செய்திருந்தாலும் அதை இரண்டாம் பேச்சிற்கு இடமின்றி முன்னின்று ஆதரித்திருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான மண்ணின் மைந்தர்களில் என்னையும் கணக்கில் எடுக்கலாம்.

ஏனெனில் மட்டக்களப்பு மண்ணின் விடிவுபற்றி கருணாவிற்கு திடீரென ஞானோதயம் தோன்றுவதற்கு சரியாக 22 வருடங்களுக்கு முன்னர் கிழக்கிற்கென தனி இயக்கம் தொடங்கியவர்களில் நானும் ஒருவன். என்னுடைய வீட்டிலிருந்த துப்பாக்கிதான் மட்டக்களப்பு கச்சேரியில் 200க்கு மேற்பட்ட ஆயுதங்களை அபகரித்துச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரே ஒரு ஆயுதம் (எங்களுடைய செயல்பாடுகளை அறிந்து மிரண்ட என் தாயார் அத்துப்பாக்கியின் தோட்டப்பெட்டிகளை மறைத்ததும் பின்னர் எமக்கெல்லாம் அன்புடன் உணவளித்ததும் மறக்கமுடியாத வேறுகதை)

நாங்கள் இவ்வாறு மட்டக்களப்புக்கென இயக்கம் தொடங்கிய காலத்தில் ஏதும் அறியா பாலகனாக பா. சின்னத்துரையுடன் புறப்பட்டுச் சென்று புலிகளோடு இணைந்து இந்தியா சென்ற கருணா திடீரென மட்டக்களப்பு பிரதேசவாதம் என்ற பூச்சாண்டியை கிளப்புவது எனக்கு விநோதமாக இருக்கின்றது.

மட்டக்களப்புக்காகப் போராடவேண்டும்; அந்த மண்ணிற்காக பல வேலைகளைச் செய்யவேண்டும்; சிங்களப் பேரினவாதத்திலிருந்து அதன் எல்லைகளைக் காக்கவேண்டும் என்ற இலட்சியவெறியோடு எங்களுடைய இயக்கம் அன்று இயங்கியது. இதற்கென எங்களுக்குத் தேவையான பல முக்கிய வரைபடங்களை தந்துதவியவர் எனது அன்பு நண்பர் ஞானரதன். பிடிபட்டால் தனக்குத் தொழில் இல்லை. ஒய்வூதியம் இல்லை என்பதை நன்றாக தெரிந்தும்கூட பயமின்றி உதவிசெய்த அந்த அன்பனை நான் என்றும் மறக்கமுடியாது.

எமது மட்டக்களப்பு இயக்கத்தின் உயிர்நாடியாக இருந்தவன் சுரேஷ் என்றும் பின்னர் பயஸ் என்றும் அறியப்பட்ட எனது அன்பு நண்பன். என்னுடைய வீட்டில் பலநாள் பதுங்கி வாழ்ந்தவன். இன்று கனடாவில் வாழ்கின்ற “கல்லடியான்” தங்கவடிவேலைக் கேட்டால் சுரேஷைப்பற்றி இன்னும் பல கதை சொல்வான். எங்களுடைய மட்டக்களப்பு இயக்கத்தின் உயிர்மூச்சாக இருந்த சுரேஷ் ஒரு யாழ்ப்பாணத்தான் போராளி இயக்கம் என்றாலே நடுத்தர வர்க்கங்கள் பயந்து ஒதுங்கிய காலத்தில் தன்னுடைய தொழிலையும் குடும்பத்தையும் சிந்தியாது எமக்குதவிசெய்த ஞானரதன் ஒரு யாழ்ப்பாணத்தான். சுரேஷ் பின்னர் புலிகளில் இணைந்து இந்தியா சென்று பயிற்சிபெற்று மீண்டும் மட்டக்களப்புக்கு வந்து 1985ஆம் ஆண்டு மாவீரனாகிப் போனான். மட்டக்களப்புக்கென்று நாங்கள் இயக்கம் தொடங்கியபோது எங்களிடம் தன்னம்பிக்கையையும் மண்வெறியையும் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. மட்டக்களப்பில் நெடுஞ்சாலைத் திணைக்களத்தில் இருந்த வெடிக்கவைக்கும் கருவியை (Exploder) எடுக்கச்சென்றபோது எங்களிடம் ஒரு பாண் வெட்டும் கத்தியையும் ஒரு சிறுகட்டுக் கயிறையும் தவிர எதுவுமே இருக்கவில்லை. எங்களிடம் இருந்தது மாவீரனாகிப்போன சுரேஷ் தந்த தன்னம்பிக்கை மட்டும்தான். ஆனால், மட்டக்களப்பு மண்ணின் நன்மைக்காக புலிகளிடமிருந்து பிரிகின்றேன் என்று கூறிய கருணாவிடம் இருந்த வளங்களுக்கு அளவுகணக்கில்லை. ஆனால் நடந்தது என்ன?

தனியாகப் போகின்றேன் என கருணா பிரகடனப்படுத்தி நான்கு நாட்களின் பின்னர் கொழும்பில் ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று பதிவுசெய்யப்பட்டது. நிறுவனத்தின் பெயர் “காஜால ஏற்றுமதி இறக்குமதி கம்பனி” பதிவிலக்கம்: N36846 பதிவுசெய்யப்பட்ட திகதி: 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி. இதற்கான ஆவணங்களை தயார்செய்தவர் சட்டத்தரணியும் நொத்தாரிசுமான எஸ். துரைராஜா இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விநாயகமூர்த்தி முரளிதரன், நிர்வாக முகாமையாளர் கந்தையா சந்திரசேகரம் கல்லடியைச் சேர்ந்தவர். வித்யாபதியின் தந்தை, வித்யாபதி என்பது கருணாவின் மனைவி நிராவின் சொந்தப் பெயராகும்.

மட்டக்களப்பிற்காக அதன் மக்கள் மீது கொண்ட அக்கறைக்காக – விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிகின்றேன் எனக்கூறிய கருணா ஏன் தன் மனைவியின் பெயரில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் தொடங்கவேண்டும்?

தனது மனைவியின் பெயரில் இரண்டரைக் கோடி ரூபாவை வெள்ளவத்தையிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏன் வைப்புச் செய்யவேண்டும்? இது மட்டுமன்றி மட்டக்களப்பில் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்தும் முதலாளி ஒருவரிடமிருந்தும் பெறப்பட்ட மூன்று கோடி ரூபாவை கருணா என்ன செய்தார்?

மட்டக்களப்பு மீது பேரன்பு இருந்திருந்தால் மேற்படி கோடிக்கணக்கான பணத்தை அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான ஏழை விதவைகளுக்கு வழங்கியிருக்கலாமே!

கருணாவிற்கு உதவிசெய்து தங்கள் சொத்துக்களையும் வாழ்வையும் இழந்த எத்தனையோ அன்பர்கள் இருக்க தமிழ் மக்களைக் கொன்றொழித்த ஐக்கிய தேசியக் கட்சியின் அலிஸாஹிர் மௌலானவை மட்டும் ஏன் கருணா நம்பவேண்டும்?

இது போன்ற இன்னும் பல கேள்விகள் உண்டு.

என்னைக் கொல்வது அவற்றிற்கு மறுமொழியாகிவிடாது. வெளிநாட்டு வானொலிகளுக்கு அறிக்கை விடுவதை விடுத்து மட்டக்களப்பு மக்களுக்கு விளக்கம் அளிப்பது கருணாவின் கடமை. ஆனால், அதற்கு அவருடைய போசகர் இடமளிப்பாரா என்பது கேள்விக் குறி.

போன கிழமை நான் ஆங்கிலத்தில் “டெய்லி மிரர்” பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையின் தழுவல் என என்னுடைய பெயரில் (தராக்கி) வீரகேசரி வாரவெளியீட்டில் ஒரு ஆக்கம் வெளியாகியிருந்தது. இதில் நான் எழுதாத சில விடயங்களும் எனது ஆங்கில நடையை சரியாக புரிந்துகொள்ளாமையால் ஏற்பட்ட தவறுகளும் இடம்பெற்றுள்ளன. எனது மூலக்கட்டுரைக்கு முரணான சில அபிப்பிராயத்தை மேற்படி தமிழ்த்தழுவல் ஏற்படுத்தியதையிட்டு நான் மனம் வருந்துகிறேன்.

எனது ஆங்கில கட்டுரைகளை மொழிபெயர்க்க விரும்பும் அன்பர்கள் அகராதியை மட்டும் துணைக்கொள்ளாமல் ஆங்கில வழக்காறுகளையும் (Idioms) கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன்.

மாமனிதர் தரமரட்னம் சிவராம்

நன்றி: #வீரகேசரி வார வெளியீடு (ஜீலை 19, 2004)

Our Facebook Page

Archives