featued_image

பிரான்ஸிஸ் பாதர் – விடுதலை இறையியல் நோக்கில் |எழில்

auhtor

on
2020-05-12


By :
Oorukaai


986 Views

 

சொல்லொணா துயரத்தின் வலிகளும், பாலகர்களினதும், குழந்தைகளினதும் வேதனைகளும், பெண்களினதும், முதியவர்களின் துன்பங்களாலும் காற்று (வளி) நிரப்பப்படுகின்றது. கந்தகக் காற்று பெற்றோரினதும், முதியவர்களினதும், ஆண்கள் பெண்கள் என்று எல்லோரினதும் இதயத்தைக் குத்திக் கிழிக்கின்றது.

(பாதர் பிரான்ஸிஸின் இறுதிக் கடிதத்திலிருந்து மே 10, 2009)

மனிதம் காக்கப் போராடிய சீடனுக்கு, சீடத்துவத்திற்கான பரிசு கையளிக்கப்பட்டுவிட்டது. பாதர் பிரான்ஸிஸ் வரலாறாகிவிட்டாரா இல்லையா என்ற நினைவுகள் மட்டும் அவ்வப்போது வந்துபோகும். வருடத்தில் ஒரு தடவையாவது கையளிக்கப்பட்ட நாளில் நினைவுகளை மீட்டல் கனதியானது. அப்படியான ஒரு நாளில் இக்கட்டுரை எழுதப்படுவது துரதிஸ்டமானது. ஒரு தசாப்தம் கடந்தும் முடிவுகள் எட்டப்படாத நிலையில் தொடர்கின்ற தேடல், ஏனையவர்களைப் போல. இதுவரைக்கும் காணாமலாக்கப்பட்ட குருக்களின் பட்டியலில் இணைக்கப்பட்ட ஆகப்பிந்திய பெயராக பிரான்ஸிஸ் பாதர்.

‘நான் எழுதும் இக்கடிதம் சிறிலங்கா அரசின் கோபத்தைத் தூண்டும் என்பது எனக்குத் தெரியாததல்ல. அக்கோபத்தின் பழிவாங்கல் என்னுடைய கொலைக்கும் காரணமாகலாம்.'(இறுதிக் கடிதத்திலிருந்து)

இக்கட்டுரையின் நோக்கம், பிரான்ஸிஸ் பாதரின் ‘விடுதலைக்கான விருப்பத்தெரிவை’ தூரநோக்குப் பார்வையான மக்களின் கூட்டு விடுதலையை, கூட்டு உயிர்த்தலை, விடுதலை இறையியல் பார்வையில் அணுகுவதும், ‘சுவாமிமாருக்கேன் உந்த தேவையில்லாத வேலை’ என்ற பொதுச் சொல்லாடலை கேள்விக்குட்படுத்தி, சீடத்துவத்தை ‘முழு மனித விடுதலை’ சொல்லாடல் பரப்பினூடு ஆராய முற்படுவதாகும்.

கட்டமைக்கப்பட்ட அநீதி / Structural Injustice

‘சிறீலங்கா திருஅவையின் மௌனத்தை சாடுவது இந்த நேரத்தில் என்னுடைய மனச்சான்றின் கடமை என நினைக்கிறேன்.'(இறுதிக் கடிதத்திலிருந்து)

காலனித்துவம் கட்டமைக்கப்பட்ட, நிறுவனமயப்படுத்தப்பட்ட அநீதி என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. கிறிஸ்தவத்தோடு தொடர்புபட்ட (ஸ்ரீலங்கா) காலனித்துவத்தை நியாயப்படுத்துவதற்கு விவிலியப்பகுதிகள் பயன்படுத்தப்பட்டன. அவையே தொடர்ந்தும் அடக்குமுறைகளையும், அடிமைத்தளைகளையும் நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன. இவை பின்–காலனித்துவ வரலாற்றிலும், அதே உத்திகள் பயன்படுத்தப்பட்டு, அடக்குமுறைகள் நியாயப்படுத்தப்பட்டு, வர்க்க முரண்பாடுகள் கட்டமைக்கப்பட்டு ‘ஏழைகள்’ அல்லது ‘மற்றமைகள்’ உருவாக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர். இது அங்கீகரிக்கப்பட்ட சமூகவியல் செல்நெறியாக கட்டமைக்கப்பட்டது. இந்த அடக்குமுறைக்கு எதிரான, விடுதலை சார்ந்த விவிலிய பகுதிகளின் மீள்வாசிப்பும், விழிப்புணர்வு கொண்ட மக்களின் எழுச்சியும் முக்கிய அம்சங்களாகும்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவிய கட்டமைக்கப்பட்ட அநீதியும் அதன் விளைவான வறுமையும் இவற்றுக்கு எதிராக அல்லது சவாலாக எழுந்த நீதிக்கான தாகமும், போராட்டமும் ஏழைகள் சார்பாக எழுந்த கூட்டொருமைப்பாடும் (Solidarity) அதனூடு யேசுவின் மீட்பை நிகழ்தளம் சார்ந்து ஏழைகள் சூழ்நிலை அறிந்து விளங்க முற்பட்டமையும் இலத்தின் அமெரிக்க நாடுகளில் விடுதலை இறையியலுக்கு வித்திட்டது.

விடுதலை இறையியல் இயக்கத்தின் எழுச்சி மேற்குலக–மைய இறையியலாக்க முறையியலை கேள்விக்குட்படுத்தியது. மேற்குலக–மைய இறையியலாக்க முறைமை,இறையியலாளர்கள் தாங்கள் சிந்தித்து அருவமான (abstract) கோட்பாடுகளை முன்வைத்து இறையியலாக்கத்தை முன்வைத்தபோது, இறையியலாக்கத்திற்கும் மக்களின் வாழ்வியலுக்கும் இடையே தொடர்பின்மை (Disconnect) வெளித்தோன்றியது. ஆனால் விடுதலைஇறையியல் யதார்த்தத்தை|நிதர்சனத்தை, பொருளாதார, அரசியல், சமூக அமைப்பு முறையில் அடக்கிஒடுக்கப்படுகின்ற ‘ஏழை’ (Poor) மக்களின் யதார்த்த வாழ்வியலின் அனுபவங்களை (Praxis) மையமாக வைத்து இறையியலாக்க முனைப்புக்களை முன்னெடுத்தது. முந்தையது மேலிருந்து கீழ் நோக்கியும், பிந்தையது கீழிருந்து மேல் நோக்கியுமான எதிரெதிர் அணுகுமுறைகளைக் கொண்டிருந்தது. ‘ஏழைகளுக்காகவிருப்பத்தெரிவு’ (Option for the poor) என்ற மையத்தில் விடுதலை இறையியல் இயக்கமாகக் கட்டமைக்கப்பட்டது. இவ் இயக்க கட்டமைப்பு விவிலிய மீள் வாசிப்பினூடு எழுச்சிபெற்றது. இதற்கு விவிலிய பகுதிகளை சூழமைவு சார்ந்து விளங்கிக்கொள்ளல் இன்றியமையாதது.

யேசுவினுடைய அழைப்பு,’ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவித்தல்’ என லூக்கா குறிப்பிட்டாலும் அபிசேகம் பண்ணப்பட்டவரின் முதன்மை அழைப்பாக ‘ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்தல்’ இருக்க வேண்டும் என எசயா குறிப்பிடுகின்றார். James D.G.Dunn(1992,33), ஏழைகள் என்ற பதம் விவிலியத்தின் முதல் புத்தகத்தில் பொருளாதார ஏழைகளைக் குறிப்பாக, வேளாண் பொருளாதார அசமத்துவத்தால் உருவாக்கப்படும் ஏழைகளைக் குறித்து நிற்பதாக கூறுகின்றார். சமூக பரிணாமத்தில் ஏழ்மை வறுமையால் மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை. அது ஒரு சமூக நிபந்தனையாக, பேராசையாலும், திரிவுபடுத்தலாலும் உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு கட்டமைக்கப்படும் ஏழைகள் பொருளாதார, அரசியல் வலுவற்ற வர்க்கமாகிறார்கள். (Dunn)

இவ்வாறு வலுவற்ற சமூகம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றது. இவ்வாறான வலுவற்ற சமூகம் நிராதரவானநிலையில் மீட்பரை எதிர்பார்க்கின்றது. இறையியல் வரலாற்றுப் பாரம்பரியத்தில் ‘ஏழைகள்’ என்ற பதத்தின் பொருள்விளக்கம் வறுமையினால் உருவாக்கப்படும் ஏழைகளை மட்டுமே சுட்டி நிற்காமல் வௌ;வேறு சூழமைவுகளில் ‘மற்றமைகளாக’ (‘the Other’) கட்டப்பட்டவர்களையும் ஏழைகளாக உள்வாங்கியது, இவ்விரிவாக்கம் பல்வேறு இறையியல்களின் உருவாக்கத்திற்கு வழிகோழியது. உதாரணமாக, கொரியாவில் உருவான மின்யுங் (Minjung) இந்தியாவில் எழுந்த தலித் இறையியல், பின்காலனித்துவ இறையியல், பாலஸ்தீன விடுதலை இறையியல், பெண்ணிய இறையியல், ஆபிரிக்க விடுதலை இறையியல், கறுப்பின பெண் இறையியல், ஆசிய பெண்ணிய இறையியல் எனப் பலவற்றைக் குறிப்பிடலாம்.

சிறிலங்காவின் தேச வரலாற்றுக் கட்டமைப்பில், (காலனித்துவத்திலும், நவ- காலனித்துவத்திலும்) சிறுபான்மை இனக்குழுக்கள்’மற்றமைகளாக’, குறிப்பாகத் தமிழர்கள் (தமிழினம்) கட்டமைக்கப்பட்டது. இக்கட்டமைப்பு இன்றுவரைக்கும் தொடர்கின்றது. சிறிலங்காவின் பின்–காலனித்துவ இன – தேச-அரச கட்டுமானம் ‘மற்றமைகளை’ கட்டமைப்பதை நிறுவனமயப்படுத்தியுள்ளது. இக்கட்டமைப்பு கட்டவிழ்க்கப்படும்வரை ‘மற்றமைகள்’ உருவாவதை / உருவாக்கப்படுவதை தடுக்கவும் முடியாது. தவிர்க்கவும் முடியாது. இம் ‘மற்றமைகள்’ ஏழைகள் பரப்புக்குள் சுதேச முறையிலாக்க முயற்சியில் உள்வாங்கப்படும்போது ‘ஏழைகளுக்காக விருப்பத் தெரிவு ‘மற்றமைகளுக்கான விருப்பத் தெரிவாக’ விரிவாக்கப்படுகின்றது.

இவ்வாறாக இனப்பாகுபாட்டுக்கொள்கைகளாலும் அசமத்துத்தாலும் ‘இன மற்றமைகளாக’ (Ethnic Other) கட்டமைக்கப்பட்ட தமிழினம் ‘இன பலிக்கடாவாக’ (Ethnic scapegoate) மாற்றப்படுகின்றது. இவ்வாறு ‘இனப்பலிக்கடாவாக’மாற்றப்படுகின்ற’ இன மற்றமைகளின்’ இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. இருப்பு மட்டுமல்ல இருப்பு சார்ந்த வரலாற்றியல் (பூர்வீகம்) இன அடையாளம், கலாசாரம், பண்பாடு இன்ன பிறவும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. இவ்வாறான செய்முறைப் பரப்பில் கூட்டுரிமை, வாழ்வியல் சார்ந்து மறுக்கப்படுகின்றது.

இம் மற்றமைகளுக்காக தனது விருப்பத் தெரிவை மேற்கொண்டு சீடத்துவத்தை ஏற்றுக்கொண்டவர் பிரான்ஸிஸ் பாதர். இவர் மட்டும் இவ்விருப்பத் தெரிவை மேற்கொள்ளவில்லை, ஆயிரக்கணக்கில் ‘மற்றமைகளான”ஏழைகளுக்காக’ லத்தின் அமெரிக்க நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் இவ் விருப்பத் தெரிவை மேற்கொண்டிருக்கின்றனர். இச் சீடத்துவத்திற்கான விலையாகப் பலர் கொல்லப்பட்டும், காணாமலாக்கப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் சித்திரவைக்குள்ளாக்கப்பட்டுமிருக்கின்றனர். இவ்வாறாக ஏற்கனவே இருந்த ‘மற்றமைகளான’ ஏழைகளுக்கான விருப்பத் தெரிவை பிரான்ஸிஸ் பாதர் சுதேச பண்பாட்டுமயமாக்கியிருக்கின்றார்.

கூட்டு சீடத்துவம் – சூழமைவு சார்ந்து

‘அப்பாவித் தமிழ் மக்களின் நீதிக்கும், கௌரவத்திற்கும் குரல் கொடுக்காத திரு அவையின் தோல்வி, திரு அவைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான தொடர்பை துண்டிப்பதாக அமைகின்றது…’ (இறுதிக் கடிதத்திலிருந்து).

சீடத்துவம் புலனாகாத வெளியில் கட்டமைக்கப்பட முடியாது. யேசுவின் மனித இருப்பு, காலத்தாலும், வெளியாலும் கட்டுப்பட்டதே. அதே இருப்புக்குள் தான் சீடத்துவமும் கட்டமைக்கப்படுகின்றது. அப்படியானால் சீடத்துவம், சமூக – அரசியல் – பொருளாதார வெளி சார்ந்தது. இவ் வெளி இருப்பு இயங்கியலின் அடையாளப் பண்புகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலைக்குள் சீடத்துவத்திற்குள் உள்வாங்கப்படுதல் என்பது கூட்டு ஆய்வுணர்வின் (discernment) பின்னணியில் நிகழ்கின்றது. கூட்டு ஆய்வுணர்வுக்கான பதிலிறுப்பு கூட்டு சீடத்துவமாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

விடுதலை இறையியல், அமைப்பு மயப்படுபத்தப்பட்ட ஏழ்மை, அநீதி அடக்குமுறைக்கு எதிரானது. அவ்வாறான சமூக அமைப்பாக்கங்களை கேள்விக்குட்படுத்துகின்றது. விடுதலை இறையியல் கண்டறிந்தவற்றில் ஏழ்மை, அநீதி, அடக்குமுறை வெறுமனே தனி ஒரு உதிரியான நபருக்கு எதிராக அமைப்பாக்கம் பெறுவதில்லை. மாறாக ஒரு கூட்டு குழுமத்திற்கு எதிராக அதன் கூட்டு அடையாள இருப்புக்கு அச்சுறுத்தலாக வெளிவருகின்றது. அக்கூட்டு அடையாள இருப்பு, மத, இன, பால், மொழி, சாதி, போன்ற பல்வேறு தளங்களில் எழலாம். கூட்டு அடக்குமுறைக்கு எதிரான சீடத்துவ பதிலிறுப்பு வெறுமனே உதிரியானதாக இருக்க முடியாது. நிச்சயமாக அது கூட்டு சீடத்துவ பதிலிறுப்பாகத்தான் இருக்க முடியும்.

கடவுளுடைய முன்னுரிமைக்குரிய அன்பு ஏழைகளுக்கும், ஏதும் இல்லாதவர்களுக்குமானது. ஆனால் அது பிரத்தியேகமானது (Exclusive) அல்ல மாறாக உள்ளடங்கலானது (Inclusive) என Gutierrez குறிப்பிடுகின்றார். இவ் அழைப்பு வரையற்ற தனிமைப் பண்புடன் முரண்படுவதில்லை. விடுதலை இறையியலின் மையமான ‘ஏழைகளுக்காக விருப்பத்தெரிவு’ யேசுவினுடைய விருப்பத்தெரிவிலிருந்து உருவானது. அதுதான் நற்செய்திகளின் மையமும் கூட. இது இயேசுவின் மனவுருவாதலின் நோக்கத்திற்கு இட்டுச்செல்கின்றது. இறையரசு,சமத்துவமற்ற உலகிலிருந்து சமத்துவமுள்ள உலகை நோக்கிய விடுதலைப் பயணம், ஒரு பரிணாமப் பயணம். வரலாற்றில் நிகழும் ‘விடுதலைகள்’ எல்லாமுமே சுதந்திரமான சமத்துவ அரசை (இறை) நோக்கிய பயணம், வரலாற்று விடுதலை நிகழ்வுகள் ஒவ்வொன்றுமே இவ் விடுதலைப் பயணத்திற்கு வலுச்சேர்க்கின்றது. இப்பயணத்தில் கூட்டு சீடத்துவத்தின் வகிபாகம் மிகவும் காத்திரமானது.

சீடத்துவத்தின் பல்வேறு பரிணாமங்களை பலர் சூழமைவு சார்ந்து விளங்கியுள்ளனர். அவற்றில் ஜோன் ஹவார்ட் யோடர்,’சீடத்தவம், அரசியல் பொறுப்பாக/அர்ப்பணிப்பாக (Discipliship as Political Responsibility -John Howard Yoder) இன்னொரு பரிணாமத்தை, குறிப்பாக பலர் பார்க்கத் தவறிய அல்லது பார்க்க விரும்பாத கோணத்தைக் காட்ட முனைகின்றார். யேசு ஓர் யூத அந்நிய ஆக்கிரமிப்பின் கீழ் எனத் தொடங்கும் வரிகள் (17) எதைக் கூற வருகின்றது என்பதற்கான கட்டியமும் கூட. கிறிஸ்தவத்தில் துன்பியலைஃதுன்பத்தை ஏற்றுக்கொள்ளல் என்ற சொல்லாடலை கேள்விக்குட்படுத்துகின்றார். ‘துன்பப்படுதலாலேயே மீட்பை அடைந்துவிடமுடியாது (22)’. கடவுளுடைய விருப்பு ஒவ்வொருவரும் மீட்படைய வேண்டும்(22)’ இக்கூற்று திரு அவையின் ஆணையுடன் தெளிவாக்கப்பட வேண்டும். ‘திரு அவையின் ஆணை என்பது தீமையை தோற்கடித்தல் (23)’ இவ் ஆணை சாதாரண அரசுகளின் ஆணையை விட உயர்ந்ததாகும். மிக அண்மைய ஆய்வுகளின்படி யேசு அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது சாதாரண விவிலிய வாசிப்பு வழி கண்டறிவது கடினம் (35).
‘மனுவுருவானவரின் அரசியல் இருப்பு, அதாவது அன்றைய கால அரசியல் பிரச்சினைகளில் யேசுவினுடைய முடிவு, யேசு இறை சித்தத்தை நிறைவேற்றினார், அரசியல் தளத்தில் என்பதற்கு சான்றாகும்.’ (54)

The political exixtence of the incarnate one, that is the decisions of Jesus in the face of his politcal problems, are a revelation of God’s command in the relam of politics. மேற்படி கூற்றை C. H. Dodd என்கிற விவிலிய அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘யேசு எல்லா விதமான அரசியல் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்தார். எமக்கிருக்கும் அரசியல் பிரச்சினைகளைப்போல (55)’. ‘அரசியல் என்பது ஆட்சி சார்பானது அல்ல (57)’,மாறாக மக்கள் மையம் சார்ந்தது. அரசியல் சொல்லாடலை ஆட்சிக்குரிய மொழியிலிருந்து கட்டவிழ்த்து மக்கள் மைய சொல்லாடலை கட்டமைக்கும்போது, அரசியலுக்குரிய இன்னொரு பரிணாமமும், ஏன் அச்சொல்லாடலும், மக்கள் பிரச்சினையும் மக்கள் விடுதலையும் சீடத்துவத்தின் பதிலிறுப்பாக மாறவேண்டும் என்பதும் விளங்கும்.

பிரான்ஸிஸ் பாதர் தன்னுடைய சீடத்துவத்தை மக்களுடைய கூட்டு உரிமை சார்ந்தும், நியாயமான அரசியல் கோரிக்கை சார்ந்தும் கட்டமைத்திருந்தார். திரு அவையை யேசுவினுடைய வழியை பின்பற்றுகின்ற ஒன்றாக, ஏழைகளுக்கான, மற்றமைக்கான திரு அவையாக நோக்கினார். சீடத்துவ பரப்பை அகலப்படுத்தி அதற்குள் எழுந்த வினாக்களுக்கு விடைதேட முயன்றார்.

ஏழைகளின் / மற்றமைகளின் திருஅவை

‘அடக்கப்பட்ட, கைவிடப்பட்ட மக்களின் உண்மைக்காகவும், நீதிக்காகவும் குரல்கொடுக்க வேண்டிய திரு அவை தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்போது மௌனம் காப்பது திரு அவையின் அற ஒழுக்க அதிகாரத்தை சிதைத்துவிடும்.(இறுதிக் கடிதத்திலிருந்து)

வரக்க பேதமற்ற சமத்துவ (இறை) அரசை நோக்கிய பயணத்தில் அடக்குமுறையிலிருந்து, ஒடுக்கப்படுதலிலிருந்து விடுதலை என்பது இன்றியமையாததாகின்றது என ஏற்கனவே விவிலியத்தில் கூறப்பட்டிருக்கின்றது. பாகுபாடு,பாரபட்சம்,வேறுபாடுகாணல்,வேறுபடுத்தல் போன்றவைவௌ;வேறு பதங்களாயிருப்பினும் அடிப்படையில் ஒன்றையே சுட்டி நிற்கின்றது. பாரபட்சம் எந்த அடிப்படையில் அமைந்தாலும் இயற்கையான பிரச்சினை அல்ல. அதுஓர் சமூகக் கட்டமைப்பு. இக் கட்டமைப்புக்குபின்னால் பாரியஅநீதிநிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது.இச் சமூகக் கட்டமைப்பு ஏற்றத் தாழ்வுகளை, வர்க்க பேதங்களை உருவாக்குகின்றது. இவ் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் அதிகாரப் பிரிப்பு கட்டமைக்கப்படுகின்றது. இவ் அதிகாரப்பிரிப்பு செல்வ வளத்தை யார் கையகப்படுத்துகின்றார்கள் என்பதைத் தீர்மானிக்கின்றது. ‘வறுமையை வெறுமனே பற்றாக்குறைமொழிமூலம் விளங்கப்படுத்திவிடமுடியாது’ (Carter Linderberg, 1979,37). தற்போதைய பூகோள வடிவமைப்பு ,’ஒற்றை உலகஒழுங்கு ‘எப்போதுமே ஏழைகளையும்/மற்றமைகளையும் கட்டமைக்கும். இச் செயன்முறைசிறிலங்காவுக்கும் பொருந்தும்.

ஆட்சியாளர்களுக்கும், திரு அவைத் தலைவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்தக் காணட்டது பற்றி வரலாறு பாடங்களைக் கற்றுத் தந்திருக்கின்றது. திரு அவையை அதனுடைய கொள்கைகள், அணுகுமுறைகள் எல்லாவற்றிலுமே ஏழைகள் மையகட்டமைப்பை உருவாக்குவதற்கு, ஏழைகள்–விடுதலைமைய விவிலிய மீள்வாசிப்பு அவசியமாகின்றது. இதை விடுதலை இறையியல் தனது முறையியலூடாக தெளிவாக விளங்கப்படுத்துகின்றது. ஏழைகளுக்கான திரு அவையாக மாறுதல் என்பது வெறுமனே ஏழைகளுக்கான உதவித் திட்டங்களை முன்வைத்தல் மாத்திரம் அல்ல. ஆழ புரையோடியுள்ள காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்தல். இதில் தான் திருஅவையின் தீவிரவாதத் தன்மை தங்கியிருக்கின்றது.

இதைத்தான் தனது கடிதத்தில் பிரான்ஸிஸ் பாதர் சுட்டிக்காட்டுகின்றார். ஏழைகளுக்காக-அடக்குமுறைகுள்ளாக்கப்பட்டவர்களுக்கான திருஅவை ஏழைகள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது மௌனம் காப்பது என்பது திரு அவையின் அடிப்படைத் தன்மையையே கேள்விக்குட்படுத்தியது. அதுமட்டுமல்ல சிறிலங்காவின் திரு அவை துருவமயப்படுத்தப்பட்டிருந்தமையையும் நுணுக்கமாக சுட்டிநிற்கின்றார்.

சிறிலங்கா திரு அவை ஏழைகள் சார்ந்த அல்லது ஏழைகளின் விடுதலை சார்ந்த அடக்குமுறைகளுக்கு எதிரான விழுமியங்களுக்கு குரல்கொடுக்காது, இன ரீதியான கருத்தியல்கள் சார்ந்த ஆட்சிமுறைகளுக்கு ஒத்துழைப்பு நல்கியது வரலாற்றுப் பிழை. இவ்வரலாற்றுப் பிழை ஆயிரக்கணக்கான உயிர்களை காவுகொண்டது மன்னிக்கமுடியாத குற்றம். நிறுவனமயப்படுத்தப்பட்ட பாரபட்சத்திற்கு தென்னிலங்கை திரு அவை எதிராக குரல்கொடுக்காதது அவர்களுடைய ஒத்தோடும் தன்மையை காட்டுகின்றது. ஒத்தோடாதோர் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றார்கள் அல்லது ஒதுக்கிவைக்கப்படுகின்றார்கள். அவர்களது குரல்கள் நசுக்கப்படுகின்றன. ஏனெனில் உண்மை சுடும்.

இவ்விடத்தில் டொம் ஹெல்டர் காமறாஎன்றபிரேசில் பேராயர் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

நான் ஏழைகளுக்குஉணவளிக்கும்போதுஎன்னை புனிதர் என்கின்றனர். ஆனால் ஏன் ஏழைகள் பசியாக இருக்கின்றார்கள் அல்லது ஏழைகளுக்கு உணவில்லை என்று கேட்கும்போதுஎன்னைகம்யூனிசவாதிஎன்கின்றனர்.’

 

(புனித) உயிர்த்துறவும் நினைவுத்திறமும்

பேராயர் ஒஸ்கார் றோமெறொ திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது பலிபீடத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய உயிர்த்துறப்பை மகிமைப்படுத்திய திரு அவை பிரான்ஸிஸ் பாதர் உட்பட உண்மைக்காக, நீதிக்காக, மக்களின் கூட்டுரிமைக்காக குரல்கொடுத்து கொல்லப்பட்ட, கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களையும் தலைமைத்துவம் ஏற்றவர்களையும் இன்னமும் மதிப்புக்கொடுத்து மேன்மைப்படுத்தாமல் இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அதற்கான முன்னெடுப்புக்கள் அவ்வத்தளங்களில் மேற்கொள்ளப்பட்டதா என்பதும் கேள்விக்குறியே. பிரான்ஸிஸ் பாதர் தன்னுடைய கொலையை எதிர்வுகூறியவர். இதை அவர் தனது கடிதத்தில் மிகத் தெளிவாக, யாரால் கொலை செய்யப்படலாம் என்பதையும் எழுதியிருக்கின்றார். அவர் இறந்து விட்டாரா இருக்கின்றாரா என்ற விவாதம் இக்கட்டுரைக்குப் பொருத்தமற்றது. ஆனால் இறுதி வரைக்கும் தான் நேசித்த மக்களுக்காக (ஏழைகளுக்காக, மற்றமைகளுக்காக) சாட்சியாக வாழ்ந்த பணியாளன். அரச வன்முறைகளுக்கும் இனப்படுகொலைக்கும் சாட்சி. விடுதலை இறையியல் முறையியலை – காண் – தீர்மானி – செயற்படு (See – Judge – Act ) தனது வாழ்வுக்கூடாக வாழப்புறப்பட்டு இன்று…!

(புனித) உயிர்த்துறவு தேர்ந்தெடுத்த பாதையின் முடிவல்ல. மாறாக பல பாதைகளின் ஆரம்பம். பேராயர் றோமெறொ தன்னுடைய சாவு / கொலை பற்றிக் குறிப்பிடும்போது பின்வருமாறு கூறுகின்றார். ‘நான் கொல்லப்பட்டால், மீண்டும் சல்வடோர் மக்களுக்குள்ளே உயிர்ப்பேன்.’ (புனித) உயிர்த்துறவுக்கும், நினைவுத்திறத்திற்கும் மிக நெருங்கிய உறவு இருக்கின்றது. ‘சாட்சிகளாக கொல்லப்படுபவர்கள் மக்களால் நினைவுகூரப்படுகின்றார்கள். அவ்வாறு நினைவுகூருபவர்கள் மீண்டும் சாட்சியங்களாகின்றனர்’ (Burke 2001, 83). இவ்வாறான நினைவுகூரல் (புனித) உயிர்துறவின்) சாட்சிகள் வாழ்ந்த சமூகங்களில் நடைபெறுகின்றது. இது இயற்கை. ஆனால் அதை சர்வதேசமயப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. குறிப்பாக பிரான்;ஸிஸ் பாதர் சார்ந்து அந்ததளத் திருச்சபைக்கு Metz குறிப்பிடுகின்ற ‘அபாயகரமான நினைவுத்திறம்’ இதுவாகும். ஏனென்றால் இவ் நினைவுகூரல் பல நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தி சொகுசான செல்நெறியை சிக்கலுக்குட்படுத்துகின்றது.

இன்று புனிதபத்திரிசியார் கல்லூரி நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற புகைப்படம் அவருடைய அர்ப்பணிப்பை – ஏழை – அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக-நினைவுபடுத்தப்படவேண்டும். அவருடைய கனவு சமத்துவ உலகை – பாகுபாடற்ற, வேற்றுமை இல்லாத, வர்க்கமற்ற – ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கின்ற பணியை, இறையரசை கட்டமைக்கின்ற பண்பை தொடர நினைவுகூரல்கள் இன்றியமையாதவை ஆகும்.

‘வெறுமையான கல்லறை’, பிரான்ஸிஸ் பாதருடைய வெறுமையான கல்லறை சிறிலங்காவின் யதார்த்தங்களை வெளிக்கொணர்ந்து நிற்கின்றது. சிறிலங்கா அரசின், இனப்படுகொலை மறுப்பையும், மனித உரிமைமீறல் தொடர்பான பொறுப்புக்கூறல் இழுத்தடிப்பையும், குற்றவாளிகள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்கின்றகலாசாரத்தையும், உண்மையின் நீதியின் திரிபுபடுத்தலையும், அரசின் மேற்குலஒத்துழைப்புடனான சிங்கள காலனித்துவத்தையும், இன்னும் பிற…

‘வெறுமையான கல்லறை’ சாவை கடந்தது போன்று தமிழ் மக்களின் கூட்டு உயிர்ப்பையும் சுட்டுகின்றது என்ற நம்பிக்கையுடன்.

Our Facebook Page

Archives