featued_image

முள்ளிவாய்க்கால் உணவுக் கலாசாரம் | முகில்நிலா

auhtor

on
2020-05-14


By :
Oorukaai


584 Views

 

திடீரென தான் எங்களின் இடப்பெயர்வு நடந்தேறியது. ஆனையிறவு, கிளிநொச்சி, பரந்தன், தர்மபுரம், விசுவமடு வரையில் நீண்டுவிட்டிருந்த படையினரின் ஆக்கிரமிப்பு எந்நேரமும் எங்களை வந்தடையலாம் என்கின்ற ஆபத்தில் ஏற்கனவே இரண்டு பயணப்பைகளை தயார்செய்து வைத்திருந்தார் அம்மா. அவசரத்திற்கு எடுத்துக்கொண்டு ஓடுவதற்கேற்ப இரண்டே இரண்டு பை. ஒன்று மிக முக்கியமான ஆவணங்கள் அடங்கிய பை. மற்றொன்று இரண்டொரு மாற்றுத்துணிகள் அடங்கிய பை. ஏற்கனவே ஆயிரத்தெட்டு இடப்பெயர்வுகளை காலம் காலமாக சந்தித்திருந்ததால் அதன் அனுபவங்களைக் கொண்டு இப்போதைய இந்த ஆயத்தப்படுத்தல் இலகுவாகவிருந்தது. போர் நிலைமைகளும் மிகமிக மோசமாக மாறிக்கொண்டேவந்துகொண்டிருந்தது. பரந்தன் முல்லை பிரதான வீதிக்கருகில் எங்களது வீடு அமைந்திருந்தது. வீதி முழுதும் விசுவமடுவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த சனங்களாலும் வாகனங்களாலும் நிறைந்திருந்தது. அம்மா பைகளை தயார்செய்து வைத்து இரண்டு நாட்களிற்கு மேலாகி விட்டது. இராணுவத்தினர் ஏவும் எறிகணைகள் எங்களை தாண்டி இரண்டு பக்கங்களிலும் விழுந்தன. ஆனாலும் எங்களின் பிரதேசத்தில் விழவில்லை. அதனால் நாங்களும் கொஞ்சம் கவனயீனமாக இருந்துவிட்டோம். பையிலிருந்த ஆடைகள் வெளிக்கு வந்துவிட்டன. ஒரு சில ஆவணங்களும் மேசைக்கு ஏறியிருந்தன.

நான்காம் நாள் காலை. அப்பா சந்தைக்கு போயிருக்க அம்மா சமையலுக்கு தயார் செய்துகொண்டிருந்தார். திடீரென சிறீலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் பிரதான வீதியின் இரண்டு கரைகளையும் சல்லடை போடத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இங்கிருந்து வெறும் மூன்று கிலோமீற்றர்கள் தூரமுள்ள குளக்கரை பக்கமிருந்து சூட்டுச்சத்தங்கள் கேட்கத்தொடங்கின. வேட்டுக்கள் சீறிப்பாய்ந்துவரும் சத்தத்தையும் தூரத்தையும் வைத்து பார்க்கின்ற போது இராணுவத்தினர் கண்டிப்பாக குளக்கரையை தாண்டி முன்னேறிவந்துவி;ட்டார்கள் என்பது தெளிவாக தெரிந்தது. மழை வேறு இடைவிடாது கொட்டிக்கொண்டேயிருந்தது. வேறு வழியில்லை. மழை வெள்ளத்தில் பாதி நிரம்பிய பதுங்குகுழிக்குள் போயிருந்தோம். தலைக்கு மேலாக வேலிக்கரை கிளுவன் தடிகள் எறிகணை சிதறல்கள் பட்டு “ஸளுக் ஸளுக்” என்கின்ற சத்தத்தோடு வெட்டிவிழுந்துகொண்டிருந்தன. தென்னைகளின் தலைகள் முறிந்தன. வீட்டுக்கு காயம் படாத இடமேயில்லை. வழமையாக எறிகணை தாக்குதல்கள் நடத்தப்படும் போது இடையிடையே சின்ன இடைவெளி விடப்படும். எறிகணைக்குழல்கள் ஆறுவதற்கான நேர இடைவெளி அது. ஆனால், இன்று அப்படி ஒரு இடைவெளி கூட எங்களுக்கு தரப்படவில்லை. இரண்டு மணித்தியாலயங்களாக வீதியின் இருகரைகளிலும் அரையடி இடைவெளியில்லாமல் எறிகணைகளை விதைத்துக்கொண்டிருந்தான் ஆமிக்காரன். இரண்டு மணி நேர தொடர் தாக்குதலிற்கு பிறகு ஒரு சின்ன இடைவெளி கிடைத்தது. அம்மா விழுந்தடித்து பதுங்குகுழியை விட்டு வெளியே ஓடினா. மறுபடி கொடியிலிருந்த உடுப்புகளையும் மேசையிலிருந்த ஆவணங்களையும் பொறுக்கியெடுத்து பைகளில் திணிக்கத்தொடங்கினா. வெளியில் போன அப்பா இன்னும் வந்துசேரவில்லை. நெஞ்சு பதட்டத்தில் உள்ளிருந்து சுட்டியலால் அடிக்கத்தொடங்கியது.

பத்து நிமிடம் கழித்து அப்பா வந்தார். சேட் முழுவதும் இரத்தத்தால் நனைந்திருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. சொல்லும் நிலையிலும் அப்பா இல்லை. வந்ததும் வராததுமாக எங்களைக் கூட்டிக்கொண்டு பின்வளவால் வேளியேறினார். மழை இன்னும் நிக்காது பெய்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு வீட்டு தென்னைமறைவிலும் பதுங்குகுழுpயருகிலும் என சீறிவரும் வேட்டுகளிலும்; செல்துகள்களிலிருந்தும் ஓடி ஓடி காப்பெடுத்து பின்வாங்கிக்கொண்டிருந்தோம் நாம். நான்கைந்து வீடுகள் தள்ளி ஒரு குடும்ப நண்பரின் வீடு இருந்தது. அவர்கள் வீட்டு பதுங்குகுழியில் அவர்களோடு போய் உட்கார்ந்துகொண்டிருந்தோம். ஒரு நாள் முழுதும் அங்கேயே தங்கியிருந்தோம். அப்பாவின் உடம்பு முழுதும் சின்ன சின்ன செல் துண்டுகள் ஒட்டியிருந்தன. மழையில் வேறு நனைந்திருந்தார். ஏற்ப்பாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் ஊசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார் அவரது நண்பர். ஆனாலும் அப்பா மறுத்துவிட்டார். எறிகணைத்தாக்குதல்களில் காயப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட மக்களை வீதியிலிருந்து அப்புறப்படுத்த தான் உதவியதோடு அவர்களை முன்னிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கிருந்த அவசிய நிலையை பார்த்ததாகவும் இப்போது வெறும் ஏற்ப்பூசிக்காகவெல்லாம் அங்கு போய் நிற்பது நியாயமில்லை எனவும் சொல்லி மறுத்துவிட்டார். கையிலே வெறும் இரண்டு உடுப்போடும் ஒரு சில ஆவணங்களோடும் மட்டுமே ஓடிவந்திருந்த எமக்கு அன்று அவர்கள் தான் சாப்பாடு போட்டார்கள். பச்சையரிசி சோறும் கத்தரிக்காய் தீயலும்.

மறு நாள் எல்லோரும் அங்கிருந்து கிளம்பவேண்டியதாயிற்று. வயல் செய்கின்ற அவர்களிடம் நெல் இருந்தது. டக்கரர் இருந்தது. அவரின் மனைவி ஊறுகாய் செய்து வைத்திருந்தார். கொப்புறா போட்ட தேங்காய் துண்டுகள் இருந்தன. சாப்பாட்டு பொருட்கள் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாயிற்று. பிரதான வீதிக்கு ஏறமுடியாது. இரண்;டு கரைகளிலும் விதைத்துவிடப்பட்டிருந்த செல்களில் சனங்கள் வெங்காயக் குடுமி போல செத்து செத்து கிடந்தார்கள். அதனால், உள்வீதிகளால்,குறுக்குப்பாதைகளால் நடந்து சுதந்திரபுரம் கொலனியை அடைந்தோம். நான்கு நாட்களில் அங்கிருந்து அடுத்த புறப்பாடு வள்ளிபுனப்பகுதிக்கு. அதன் பின் ஆயிரத்தெட்டு இடங்கள். ஆயிரத்தெட்டு தாக்குதல்கள். ஆயிரத்தெட்டு சவால்கள்.

இடம்பெயர்ந்து நாளுக்கு இரண்டு மூன்று இடங்களில் கொட்டில் போடவேண்டி வந்தாலும் கூட ஆரம்பத்தில் ஒரு முப்பது நாள்கள் வரையில் அன்ரியிடம் இருந்த இரண்டு போத்தல்; ஊறுகாயும் அரிசியும் ஏதோவொரு வகையில் சாப்பிடக் கிடைத்தது. அவர்கள் வீட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர். நாங்கள் மூன்று பேர். மொத்தமாக எட்டு பேரிற்கு சாப்பாடு தயார் செய்ய வேண்டும். பொருட்கள் கிடைப்பனவற்றிருந்த அந்த காலகட்டத்தில் அது ஒரு பெரிய சுமை தான். அம்மாவின் கையிலிருந்த இரண்டு சோடிக்காப்பை வாங்கிக்கொண்டு போன அப்பா அதை கொடுத்துவிட்டு யாரிடமோ அரை மூட்டை கோதுமை மாவும் பத்து கிலோ சீனியும் வாங்கி வந்தார் அப்பா. அதன் பின்னர் காலையில் சீனி போடாத பிளேன்ரீ, மதியம் சோறு, மாலையில் ஆளாளுக்கு பாதி ரொட்டியும் தொட்டுக்கொள்ள சீனியும் என்பதாக நாட்கள் மாறியது. இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் தவறாது ஓடிக்கொண்டேயிருந்தோம். போகின்ற இடமெல்லாம் தறப்பாளைக் கட்டுவதற்கு முன் ஒரு ஷபங்கர்ஷ என்கின்ற பெயரில் ஒரு கிடங்கை கிண்டுவது தான் முதல் வேலையாகவிருந்தது. அதற்குப்பிறகு தான் எல்லாம்.

வள்ளிபுனத்தை விட்டு தேவிபுரம் தாண்டி கோம்பாவில் பகுதியை அடைந்திருந்த போது கோதுமை மா தீர்ந்துவிட்டிருந்தது. அரிசி சாக்கும் முடிவடையும் நிலையை தொட்டுவிட்டிருந்தது. வெகு விரைவாக சாப்பாட்டிற்கு ஏதாவதொரு வழியை கண்டுபிடித்தாக வேண்டும். அப்பாவும் அங்கிளும் என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் கிபிர் தாக்குதல்கள், செல் அடிகள், ஓலங்கள், காயங்கள், சாவுகள் என்பன மறுபுறம் வழமைபோலவே தான் இருந்தன. இரத்தத் சிவப்பிலும் வயிறு சாப்பாட்டிற்காக குடைந்துகொண்டிருந்தது. அருகிலிருந்த ஒரு வீட்டின் தலைவாசலில் நெல்லுச்சாக்குகள் நிரம்ப அடுக்கப்பட்டிருந்ததை தான் கண்டதாகவும் அவர்களிடம் ஒரு சாக்கு விலைக்கு கேட்டுப்பார்க்கலாம் என்றும் கலந்துபேசி அம்மாவின் தங்கச்சங்கிலியை வாங்கிக்கொண்டு அப்பாவும் அங்கிளும் குறித்த அந்த வீட்டிற்கு சென்றிருந்தார்கள். திரும்பி வரும்போது வெறுங்கையுடன் வந்தார்கள். இடம்பெயர்ந்து வந்த சனம் என்பதால் அவர்கள் வீட்டு கதவைக் கூடத் திறக்கவில்லை என்று சொல்லி கவலைப்பட்டுக்கொண்டார்கள். அதன் பின் நான்கு நாட்கள் வரையிலும் காலை பதினொரு மணிக்கும் மாலை ஐந்து மணிக்கும் அரை அரை ரொட்டி கிடைத்தது. அவ்வளவு தான். எங்கள் நிலையாவது பரவாயில்லை. அப்போதே பலரின் நிலை இதை விட மோசமானதாக இருந்திருந்தது.

ஐந்தாவது நாள் எங்கேயோ அலைந்து திரிந்து அங்கிள் ஒரு அரை மூட்டை கோதுமை மா வாங்கிவந்;தார். அதற்குப் பதில் அன்ரியின் கையிலிருந்து காப்பு காணாமல் போயிருந்தது. அதன் பின்னர் சோறு ஆக்குவது மிக மிக குறைந்து போனது. சரி, மா இருக்கிறது என்பதற்காக புட்டோ அல்லது வேறு சாப்பாடுகளோ ஆக்கமுடியாது. வெறும் ரொட்டி. அதுவும் தொட்டுக்கொள்ள ஒவ்வொருவருக்கும் தரும் சீனியின் அளவைக் கணக்குப்பார்த்து அதைவிட ரொட்டி மாவோடேயே சீனியையும் சேர்த்து குழைத்தால் சீனியை கொஞ்சம் மிச்சம்பிடிக்கலாம் என்று கண்டுபிடித்து பத்திரப்படுத்த தொடங்கினார்கள் அம்மாவும் அன்ரியும். இப்போது கையிருப்பிலிருந்த அரிசி மொத்தமாய் தீரும் நிலைக்கு வந்துவிட்டிருந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக அப்பாவும் அங்கிளும் செய்த பகீரத பிரயத்தனத்தின் பலனாக அரை மூட்டை அரிசி கிடைத்தது. அதுவும் தவிடு நீக்காத அரிசி. அதற்கு பதில் இம்முறை அம்மாவி;ன் தங்கச்சங்கிலி கழுத்தை விட்டு போயிருந்தது. இதற்கிடையில் அங்கு இங்கு என அலைந்து நாங்கள் இப்போது இரட்டை வாய்க்காலை அடைந்திருந்தோம்.

பக்கத்தில் ஏதோவொரு கடையில் கால் கிலோ பருப்பும் 100 கிராம் சீனியும் கொடுக்கிறார்களாம் என சனம் முழுதும் கடை வாசலிலே தவம் கிடந்தது. பலர் முதல்நாள் இரவே போய் கடைக்கு முன்பாக படுத்திருந்தனர். அந்த 100 கிராம் சீனிக்காகவும் கால்கிலோ பருப்புக்காகவும் போன அப்பா ஒவ்வொரு நாளும் வெறுங்கையோடு திரும்பிவந்தார். மூன்றாம் நாள் இரவோடிரவாக போய் கடைக்கு முன் காத்திருந்து கால்கிலோ பருப்பும் 100 கிராம் சீனியோடும் திரும்பி வந்தார். வரும்போது அவர் உடலெங்கும் சிராய்ப்புக்காயங்கள். கடைக்கு முன் வரிசைக்கு நின்ற சனங்களிற்கு அருகில் கிபிர்காரன் கொண்டுவந்து கொட்டிவிட்டு போனதில் விழுந்துருண்டு அங்கங்கு இரத்தம் கசிய வந்துநின்றார். ஷநிறைய சனம் செத்துப்போச்சுதுகளஷ; என்றும் ஷபாவம் குஞ்சு குருமனுகள் நிறையஷ எண்டும் சொல்லி பெருமூச்சு விட்டார். அப்பா வாங்கிவந்த கடலைப்பருப்பை தண்ணீரில் ஊறவைச்சு இது வரையில் தான் சமைக்காத ஒரு கறியை( உண்மையாக தண்ணிக்கறி) ஆக்கித்தந்தார் அம்மா. அதன்பின் மத்தியானத்திற்கு அந்த பருப்புக்கறியும் இரவிற்கு கால்வாசி ரொட்டுத்துண்டுமென்று ஆகியது எங்கள் சாப்பாடு. இதற்கிடையில் ஒரு நாள் திடீரென்று அங்கிருந்தும் ஓட்டம் பிடித்து இடையிடையில் பல பத்து இடங்களில் இருந்து கடைசியாக முள்ளிவாய்க்கால் வரை வந்துவிட்டிருந்தோம்.

இப்போது எங்களிடம் இருப்பது வெறும் கால்ப்பை அளவு அரிசி. வெறும் அரிசி. அவ்வளவு தான். ஊறுகாய், கொப்பறா உள்ளிட்ட அத்தனை துணையுணவுகளும் முடிந்தவிட்டிருந்த நிலையில் எதை ஆக்குவது..? எப்படி ஆக்குவதென அம்மா தலையை போட்டு கசக்கிக்கொண்டிருந்தா. கடற்கரை வெயிலும் மணல்ச்சூடும் சனங்களின் நெருக்கடியும் பக்கத்து கொட்டிலில் முன்கொட்டிலில் என எங்கும் சாவுகள் விழுந்துகொண்டிருக்க, சமைப்பதென்பதே மிக ஆபத்தென்பதாய் ஆகிப்போன நிலையில் பதுங்குகுழி என்ற பெயரில் கிண்டப்பட்ட கிடங்கு வித்தனில் தான் அடுப்பு வைக்கப்பட்டிருந்தது. பதினொரு மணி போல அம்மா சோறு ஆக்குவா. பதினொன்றரை மணிக்கு அதன் கஞ்சியை வடித்து தருவா. அது தான் மதிய சாப்பாடு. பின்னேரம் நான்கு மணிக்கு அந்த சோற்றோடு அக்கம் பக்கத்தில் எங்காவது பிடுங்கியிருந்த விடத்தல் இலையை பொரித்து ஆளாளுக்கு ஒவ்வொன்று தருவார். அவ்வளவு தான் மாலைச் சாப்பாடு முடிந்துவிடும். ஒரு நாளிற்கான மொத்த சாப்பாடும் அப்படியாகத்தான் இருந்தது. கால் ரம்ளர் கஞ்சி. பின்னேரம் ஒரு பிடி சோறு. இதற்கிடையில் இயக்கத்தின் கஞ்சிக்கொட்டில்களிலும் வாய்ப்பன் வழங்கும் இடங்களிலும் மிக நீண்ட வரிசை நின்றிருக்கும். நானும் ஒரு செம்பை எடுத்துக்கொண்டு போய் அந்த வரிசையில் நின்றிருக்கிறேன். பல நேரங்களில் கிபிரடித்து வரிசையில் எனக்கு முன் நின்றவர்கள் சாகவும் படுகாயமடையவும் நான் சிறு காயங்களோடு விழுந்தடித்து ஓடிவந்து கொட்டிலுக்கு சேர்ந்திருக்கிறேன். என்னதான் நடந்தாலும் செம்பை கைவிட மாட்டேன். பிறகு, நாளை கஞ்சிக்கு போவதற்கு செம்பு இருக்காதில்லையா.

எங்களை சுற்றி எங்களது சொந்தக்காரர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் ஐந்து அக்காக்களிற்கு அப்போது தான் குழந்தை கடைத்திருந்தது. வெறும் நான்கு மாத, ஐந்து மாதக் குழந்தைகள். பால்மா இல்லை. சத்தான சாப்பாடு இல்லை. தாய்ப்பால் கொடுப்பதற்கு தெம்பில்லை. இப்படியான சூழலில் அவ்வப்போது எங்காவது குழந்தைகளிற்கான பால்மா கொடுக்கப்படும் போது நான் அவர்களிற்காக அந்த வரிசையில் போய் நின்று வாங்கிவர முயற்சிப்பேன். ஒவ்வொரு முறையும் தோல்வியே மிஞ்சும். நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்க இடைநடவில் எப்படியும் கிபிர் வந்து கொட்டி குழப்பிவிட்டுப் போய்விடும். சாகிறவர்கள் போக மிச்சம் பேர் நாளை அடுத்த வரிசையில் போய் நிற்போம். நான்கைந்து தடவைகள் நான் வரிசையில் போய் நிற்பதும் கிபிரிடியில் செத்தது பாதி சாகாதது பாதியாய் கொட்டிலுக்கு வந்து சேர்வதுமாய் கழிந்தது. அதன் பின் ஐந்தாவது முறை நான் அந்த வரிசையில் நின்று பால்மா பையை வாங்கிக்கொண்டு கொட்டிலுக்கு வந்தால் அங்கு யாரையும் காணோம். மொத்தமாய் சிதைந்து போய் அலங்கோலமாய் இருந்தது அது. எனக்கு திக்பிரமை பிடித்தது போலாகிவிட்டது. அக்கம் பக்கத்தில் எல்லாம் தேடினேன். ம்கூம் யாரையும் காணோம். பிறகு பக்கத்திலிருந்த ஒரு ஐயா, இந்தக் கொட்டிலில் செல் விழுந்ததாகவும் இரண்டு பேரிற்கு காயம் என்றும் மற்றபடி கடவுள் புண்ணியத்தில் யாருக்கும் எதுவும் உயிர்சேதம் இல்லையென்றும் அவர்கள் இப்போது அதோ அந்த மேட்டின் மேல் கொட்டில் போட்டிருக்கிறாரகள் என்றும் சொல்லி இடத்தை காட்டினார். போய் அவர்களோடு சேர்ந்துகொண்டேன். ஒரு மாமிக்கு தலையிலும் அண்ணாவிற்கு காலிலும் பலத்த காயம் பட்டிருந்தது. இரத்தம் வெளியேறாதவாறு காயத்தை சுற்றி ஓடிக்கொலோனால் துடைத்துவட்டு துணியால் சுற்றிக்கட்டியிருந்தார்கள்.

அதன் பின் சாப்பாட்டிற்கு எதுவுமில்லை. குஞ்சு குருமன்கள் எல்லாம் பசியால் வாடின. மறுநாள் அம்மா தன் தாலியை கழற்றி அப்பாவின் கையில் கொடுத்து விட்டு சாப்பாட்டிற்கு ஏதாவது பார்த்துவரச்சொல்லி அனுப்பிவிட்டிருந்தார். அரை நாளிற்கு பிறகு கையில் ஒரு தேங்காயும் கொஞ்சம் மைசூர் பருப்புமாக அப்பா திரும்பி வந்தார். அம்மா அருகிலிருந்த சுள்ளிகளை எடுத்து ஒருமாதிரி அடுப்பு இணக்கி பருப்புக்கறி தயார்செய்துகொண்டிருந்தார். அப்பா தேங்காயை உடைத்து ஆளாளுக்கொவ்வொரு துண்டுகளாக பகிர்ந்துகொண்டிருந்தார். பருப்புக்கறி அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. பதுங்குகுழிக்குள் இருந்த எல்லோரது கண்களும் அடுப்பை சுற்றி சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருந்தன. திடீரென அக்கம் பக்கத்திலிருந்த சனங்கள் எல்லாம் ஆமி வந்துட்டான் ஆமி வந்துட்டான் என விழுந்தடித்து ஓடினார்கள். சீறிவரும் துப்பாக்கி ரவைகளையும் விழுந்துவெடிக்கும் எறிகணைச்சிதறல்களையும் தாண்டி அப்பா மெல்ல தலையை வெளியே நீட்டிப்பார்த்தார். சனம் சொன்னது உண்மை தான். தூரத்தே ஆமியின் தலைகள் தெரிந்தன. எனினும் அப்பா பொறுமையாய் இருந்தார். அடுப்பு அணைந்துவிட்டிருந்தது.

அரைமணித்தியாலயம் கடந்திருக்கும். வீதி எங்கிலும் சாரைசாரையாய் சனங்கள் போய்க்கொண்டிருந்தன. அப்பா பதுங்குகுழியை விட்டு மெல்ல எழுந்தார். எங்களை உள்ளேயே இருக்குமாறு பணித்துவிட்டு வெளி நிலைமைகளை போய் அவதானித்துவிட்டு வந்தார். அதற்கிடையில் நீரேரிப்பக்கமிருந்தும் ரவைகள் சீறிவரத்தொடங்கின. நாங்களும் வெளியே வந்தோம். வீதியில் நகரும் மந்தைக் கூட்டங்களோடு கூட்டமாக நாங்களும் சேர்ந்துகொண்டோம். பருப்புக்கறிச்சட்டி உடைந்துவிட்டிருந்தது. இரண்டு நாட்களாய் சாப்பாடு காணாத வயிறு உள்ளே முரண்டுபிடிக்கத்தொடங்கியது. பசி வயிற்றை விராண்டிக்கொண்டிருந்த அந்த நொடியில் பயம் வாழ்க்கையை கவ்வத்தொடங்கியிருந்தது.

Our Facebook Page

Archives