முன்னுரை
2009க்குப் பின்னரான அரசியல் வரலாற்று வெளியில் சிங்கள அரசு பல்வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து, குறிப்பாக போர் சார்ந்தும் அதன் நியாயத்தன்மை, நம்பகத்தன்மை, சட்டப்பேறு நிலை சார்ந்த சொல்லாடல் கட்டமைப்பில் மிகப் பாரியளவில் முதலீடு செய்தது. இம் முதலீடு அறிவுசார் கற்கைநெறிகளுக்கூடாகவும், ஊடகத்திற்கூடாகவும் மிகச் செறிவற்ற விதத்திலும், இச் சொல்லாடல்கள் மக்கள் வாழ்வியலின் அடையாளத்தில் குறிப்பாக சிங்கள அடையாளத்தின் இன்றியமையாத கூறாக இடம் பெற்றுவிட்டது. ‘பாதிக்கப்பட்டவர்கள்’, அல்லது ‘பாதிக்கப்பட்டமை’ தமிழர் தரப்பில் இன்னும் நிறுவன மயப்படுத்தப்படாத வெற்றிடமாகவே இருந்து வருகின்றது. பின்இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பூசல்களுக்கு அப்பால் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளார்கள். நிறுவனமயப்படுத்தல் நீதி வேண்டிய பாதிக்கப்பட்ட உரிமை சார் பயணத்தில் வெற்றியை கொணர்ந்தது எனலாம் பெரும்பாலான நாடுகளில்.
இக் கட்டுரையின் நோக்கம், ஒன்று எவ்வாறு சிங்களம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டமை சொல்லாடலை/கருத்தியலை 2009க்குப் பின்னரான அரசியல் வரலாற்றுத்தளத்தில் கட்டமைக்கின்றது என்பதை ஆராய்வதாகவும், இரண்டாவது எவ்வாறு தமிழர்கள் ‘கூட்டு பாதிக்கப்பட்டமையை’ (Collective victimhood) கட்டமைத்து, நியாயப் பிரச்சாரத்திற்கான கருவியாக உபயோகித்து தமிழ்களின் கூட்டு உரிமை சார் கோரிக்கைக்கான உத்தியாக பயன்படுத்த வேண்டும் என்பதை ஆராய்வதாகவும் அமைகின்றது.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு இனம் சார்ந்து இருப்பினும், இக் கட்டுரையின் நோக்குக் குழுவாகதமிழினம் உற்று நோக்கப்படுகின்றது. ‘தமிழினம் கூட்டு பாதிக்கப்பட்டமையாக கட்டமைக்கப்பட்டு,’ கூட்டு பாதிக்கப்பட்டமை வலியுறுத்தப்படுகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உதிரிகளாக இருப்பினும் சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது போரை தொடுத்திருந்தது. சர்வதேச சட்ட வெளியில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உரிமையைப் பாவித்தும் தந்திரோபாய நகர்வும் சார்ந்து தமிழர்கள் ‘கூட்டு பாதிக்கப்பட்டமையாக’ கோடிட்டுக் காட்டப்படுகின்றுது. பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு தரப்பினர் உள்ள போதிலும் இக் கட்டுரையில் குறிப்பிடப்படும் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கள அரசின் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களைக் குறித்து நிற்கின்றது. இங்கு குற்றமாக கொள்ளப்படுவது சிங்கள அரசின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
2009 வைகாசிக்குப் பின்னரான அடையாளக்கட்டமைப்பு இருதுருவ ஊடாட்டங்களின் அடிப்படையில் அமைந்தது. ஏன் இருதுருவம் என்று குறிப்பிடுகின்றேன் என சிந்தித்தால், பாதிக்கப்பட்டவர்கள் – தமிழர்கள் ஒரு துருவம், மறு துருவம் குற்றவாளிகளும், வெற்றியாளர்களும். ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரையில் குற்றவாளிகளுக்கும் வெற்றியாளர்களுக்குமிடையேயான இடைவெளி மிகமிகக் குறுகியது அதனால் தான் இருவகையினரும் ஒரு துருவத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள்
பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பின்னர் அல்லது இனப்படுகொலைக்குப் பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற, குற்றவியல் நீதிப் பொறிமுறை, நிலைமாறுகால நீதிப் பொறிமுறை, நல்லிணக்க முயற்சிகள் பாதிக்கப்பட்டவர்கள்-மைய அணுகுமுறையைக் கொண்டது(Enns 2007). இது விளிம்புநிலை-மைய அணுகுமுறையும் கூட. போரில் பங்குபற்றாத ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட(ஏதோ ஒருமுறையில்) ஒரு சமூகம் அல்லது தனிநபர்கள் போரின் சாட்சியங்களாக (குற்றவாளிகளுக்கெதிராக), குற்;றங்கள் சார்ந்தும், போரினுடைய உடனடித்தாக்கம் சார்ந்தும் அதன் பின்விளைவும் சார்ந்தும் பங்களிப்பதில் முக்கிய பங்கு தாரர்களாக உள்ளனர். அதே வேளை எதிர்கால தேச-கட்டுமானப் பணியில் இவர்களின் பங்களிப்பு சுதந்திரமானது என்று சொல்வது மிகையல்ல பின்-போர் கதாநாயகர்களாக இவர்கள் வருணிக்கப்படுகின்றார்கள் என்று uuyse குறிப்பிடுகின்றார்.
குற்றவியல் வழக்குகளின், நிலைமாறு கால நீதிப்பொறிமுறையில், நல்லிணக்க முயற்சிகளின் மையமாக ‘பாதிக்கப்பட்டவர்கள்’ இருக்கின்றார்கள். 2009க்குப் பின்னர் ஸ்ரீலங்காவில் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகளும் சரி, நிலைமாறுகால நீதிப்பொறிமுறை முயற்சிகளும் சரி பாதிக்கப்பட்ட மக்கள்-மைய பொறிமுறையாக கட்டமைக்கப்பட வேண்டும் என தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் விடப்பட்டது. அது ஸ்ரீலங்கா அரசுக்கு செவிடன்; காதில் ஊதிய சங்கானது.பாதிக்கப்பட்ட மக்கள் மைய அணுகுமுறையை ஏனைய நாடுகள் கடைப்பிடித்தன என்பது வரலாறு சொல்லித் தரும் பாடம்.
ஸ்ரீலங்கா அரசின் அரசியல் வன்முறையால்-கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையால் – பாதிக்கப்பட்ட இனக்குழுமமுமாக தமிழினம் இருக்கின்றது. ‘பாதிக்கப்பட்டமை’ கட்டமைப்பு, அரசியல் சாரந்தது அதை அரசியல் நீக்கம் செய்யமுடியாது. அதே நேரத்தில் அக் கட்டமைப்பு வெறுமனே உயிர்பற்றதாகவும் இருக்கமுடியாது. மாறாக அரசியல் இயக்கியாக (Political agent) அரசியல் இயங்கு தளத்தில் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. பல அறிஞர்;கள் ஏற்றுக்கொள்வது ‘பாதிக்கப்பட்டமை ஓர் அரசியல் சமூகக் கட்டமைப்பு.இச் சமூக கட்டமைப்பு இரண்டு விதத்தில் கட்டமைக்கப்படலாம். ஒன்று மற்றவர்களினால் ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரையில் சிங்களத்தினால், இரண்டாவது பாதிக்கப்பட்;டவர்களே தங்கள் பாதிக்கப்பட்டமையை கட்டமைத்துக் கொள்வது (deWaardt, 2016). தமிழர்களைப் பொறுத்தவரையில் சர்வதேச குற்றங்கள் சார்ந்து ‘பாதிக்கப்பட்டமையை’கட்டமைப்பது வரலாற்றுத் தேவையும், அடுத்த கட்டத்திற்கு தமிழ்தேசிய விடுதலையை நகர்த்துவதற்குரிய உத்தியுமாகும்.
சர்வதேச குற்றங்களின் குறிப்பாக, இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களாக எங்களை கட்டமைத்து அக்கட்டமைப்பை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்வதன் நியாயப் பிரச்சாரம் முடுக்கிவிடப்படுவது தற்போதைய அரசியல் வரலாற்று இயங்கு தளத்தில் இன்றியமையாதது.
பாதிக்கப்பட்டவர்கள் (Victims), மீண்டுவந்தவர்கள் (Survivors) பதங்களுக்கிடையேயான மயக்கத்தன்மையையும் சற்று உற்று நோக்குவோம். பாதிக்கப்பட்டவர்கள் சில சந்தர்ப்பங்களில் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணாது மீண்டு வந்தவர்களாக ஆனால் அதே நேரத்தில் ஏதோ ஒரு விதத்தில் சாட்சியாக அல்லது நீதிப் பயணிகளாக இருக்கலாம் (Cath Collins, 2010). சர்வதேச வல்லுநர்களின் விதிப்புரைப்புப்படி ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்ற பதம் குற்றவியல் நீதி தொடர்பில் அவசியமானது (de Waardt, 2016) ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று சர்வதேச சட்டத்தில் உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளுக்கு அரச அரசியல் வன்முறைகளால் பாதி;க்கப்பட்டவர்கள் மட்டுமே உரித்துடையவர்கள்.
இதனடிப்படையில் எவ்வாறு சிங்களம் ‘பாதிக்கப்பட்டவர்களாக’ அல்லது ‘பாதிக்கப்பட்டமையை’ கட்டமைக்கின்றது என்று பார்ப்போம். இது தொடர்பான ஆய்வுகள் மிக மிக சொற்பமே, தமிழில் இல்லை என்றே கூறலாம்.
பொஸ்னியாவில் முஸ்லிம் பெண்கள் மத்தியில் கூட்டு வன்புணர்வை ஆய்வு செய்த ஹெல்மஸ் (uelms, 2013) குறிப்பிடுகையில், அப் பகுதியில் நீதி வேண்டி நியாயப் பிரச்சாரம் மேற்கொண்ட பெண் சமூகச் செயற்பாட்டாளர்கள் தங்களை பாதிக்கப்பட்டவர்கள் என்றே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பினர் ஏனெனில் ‘பாதிக்கப்பட்டவர்’ குற்றமின்மையை நிரூபிப்பதோடு, அவர்களின் அற ஒழுக்கத் தூய்மையை முன்னிறுத்துகின்றது. இவை அவர்களது நீதி வேண்டிய கோரிக்கையை சட்ட பூர்வமாக்கி வலுச் சேர்க்கின்றது. இந்த உத்தி சர்வதேச ஆடுகளத்தில் பலரின் கவனத்தையும் ஈர்க்க வல்லதுடன் படிமுறை செயற்திறனையும் துரிதப்படுத்தும்.
Anil Schubert (2013) தனது ஸ்ரீலங்கா பற்றிய ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பாக 2009க்குப் பின்னரான அரசியல் வெளியில், ஒரு மேட்டுக்குடி வர்க்கமாக கட்டமைக்க முயலுகின்றார். மேட்டுக்குடி வர்க்கமாக கட்டமைத்தலின் பின்னாலுள்ள அரசியல் ஆராயப்படவேண்டும்.
சிங்களம் கட்டமைக்கும் பாதிக்கப்பட்டமை
வெற்றியாளராகவும் அதே வேளை குற்றவாளியாகவும் காணப்படும் சிங்களம் கட்டமைக்கும் ‘பாதிக்கப்பட்டமை’ ஏகாதிபத்தியக் கட்டமைப்பாகும். ஏகாதிபத்தியக் கட்டமைப்பு, பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தை சம பலமற்ற, அதிகாரமற்ற, வலுவற்ற வெறுமனே இழப்புகளால் உணர்ச்சிவசப்பட்ட, தனித்து இயங்க முடியாத, மற்றவர்களின் இரக்கத்தையும் அனுதாபத்தையும் எதிர்பார்க்கின்ற அதே வேளை பண, பொருள் உதவியை வேண்டி நிற்கின்ற உதிரியாக மட்டுமே பார்க்க விரும்புகின்றது.
எவ்வாறு சிங்களம் தமிழர்களின் கூட்டு உரிமையை அடையாளப்படுத்தி அங்கீகரிக்கத் மறுத்ததோ அதே போல் சிங்கள அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழினத்தின் கூட்டு பாதிக்கப்பட்டமையும் அடையாளப்படுத்தி அங்கீகரிக்க மறுத்து வருகின்றது. மே 2009க்குப் பின்னர் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச ‘பாதிக்கப்பட்டமையை’, ஸ்டான்லி கோஹென் (Stanley Cohen 1996) மொழியில் சொல்வதனால் (Interpretive denial) பொருள்விளக்க மறுப்பினூடு கட்டமைக்க முயன்றார். தமிழ்தேசிய விடுதலை போராட்டத்தை உரிமைப் போராட்டமாக – சிங்கள-பௌத்த தேசியத்திற்கும், தமிழ் மக்கள் மீதான சிங்கள-பௌத்த அடக்கு முறைக்கும், காலனித்துவத்திற்கும் எதிரான போராட்டமாக வெளிப்படுத்தாது,சிங்கள-பௌத்தத்தின் இருப்புக்கு எதிரான போராட்டமாக புனைய முற்படுகின்றார். தமிழ்த் தேசிய உருவாக்கம் என்பது சிங்கள-தேசிய காலனித்துவத்திற்கு எதிரானது என்கின்ற வரலாற்று உண்மையை மறைத்து புதியதொரு விளக்கவுரையை கட்டமைத்து தமிழர் தேசியத்தை குற்றவாளிக் கூண்டிலேற்றுகின்றார்.
அதன் அடுத்த கட்டமாக விடுதலை புலிகள் தான் பிரதான குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டு அவர்களை ‘மற்றமைகளாக ”the other’ கட்டமைக்கிறார். மற்றமைகளாக கட்டமைத்தல் என்பது வந்தேறு குடிகளாக உருவாக்குவதாகும் (Schubert 2013:7). இதன் மூலம் ஒரு வகையில் ஒட்டு மொத்த தமிழினமும் வந்தேறு குடிகளாக சித்தரிக்கப்படுகின்றது. Schubert ன்கருத்துப்படி விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல அவர்களுக்குரிய மிகப்பெரிய வலையமைப்பு முழுவதையும் குற்றவாளியாக அல்லது குற்றவாளிகளாக கட்டமைத்து விடுதலைப் புலிகளும், அதன் வலைகட்டமைப்பும் ஸ்ரீலங்கா தேசத்தை பயங்கரவாதத்திற்கு இரையாக்கியதாக குறிப்பிடுகின்றார். சிங்கள தேசம் முழுவதையும் புலிகள் பயங்கரவாதத்திற்கு இரையாக்கியதாக குறிப்பிடுவதன் மூலம் சிங்கள தேசம் முழுவதையும் கூட்டு பாதிக்கப்பட்டமையாக உருவாக்குகின்றார் தனது வெற்றி விழா உரையில் (Schubert 2013:8).
விடுதலைப் புலிகள் தான் பிரச்சனையும், பிரச்சனைக்கு காரண கர்த்தாக்களும் என கூறி ஸ்ரீலங்காவில் இனப்பிரச்சனையை இல்லையென மறுத்து வெறும் புலிப் பயங்கரவாதமே நிலவுகின்றது (Neil De Votta 2007:37) என கூறி பூகோள மயமாக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஸ்ரீலங்காவின் வகிபாகத்தை வலியுறுத்தி புலிகளை பயங்கரவாதிகளாக்கி அவர்களை தீயவர்களாக கட்டமைக்கின்றார். இதன் மூலம் சிங்கள அரசு தீமைக்கு எதிராக போரிட வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டதான சொல்லாடலை/புனைவை உருவாக்குவதன் மூலம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் தேவையற்றது எனும் முடிவுக்கு மக்களை திசை திருப்புவதை நோக்கலாம்.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடத் தலைப்பட்ட சிங்கள அரசையும் அதன் படைக்கட்டுமானங்களையும் வெற்றியாளர்களாகவும் கதாநாயகர்களாகவும் உருவாக்குவதன் மூலம் போரையும் போர் நடத்தப்பட்ட முறையையும் நியாயப்படுத்துகிறார். மீண்டும் மீண்டும் மனிதாபிமானத்திற்கான போர் என்று வர்ணித்து, சிங்கள அரசு தமிழ் மக்களை விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தில் இருந்து மீட்பதற்காக போரை நடத்தியதெனக் கூறி தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து அந்நியப்படுத்துகிறார். மகிந்த ராஜபக்ஷ தனது உரையினூடாக மூன்று வகையான பாதிக்கப்பட்டமைகளை கட்டமைப்பதாக (Schubert 2013:11) குறிப்பிட்டுள்ளார்.
1. ஸ்ரீலங்காவின் வாழுகின்ற அனைத்துத் தரப்பினரையும் புலிப்பயங்கரவாதத்தின் கூட்டு பாதிக்கப்பட்டமையாகவும்,
2. புலிப் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களை விசேட பாதிக்கப்பட்டமைககளாகவும்,
3. புலிப்பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட சிங்களவர்களை உண்மையான பாதிக்கப்பட்டமைகளாகவும் கட்டமைக்கின்றார்.
மகிந்த ராஜபக்ஷவின் முதலாவது வகை பாதிக்கப்பட்டமையான ஒட்டுமொத்த ஸ்ரீலங்காவில் வாழ்பவர்கள். விடுதலை புலிகளுக்கு எதிராக ‘பாதிக்கப்பட்டமையை’ மையமாக வைத்து மிகப் பாரிய பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரட்டலை மகிந்த ராஜபக்ச முன்னெடுக்கின்றார். பாதிக்கப்பட்ட மக்கள் அணிதிரட்டல் சொல்லாடல் இன, மத, பால் வேறுபாடுகளைக் கடந்து விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு குடையின் கீழ் உள்வாங்குகின்றது. இதன் மூலம் அனைவருக்கும் பொதுவான இறந்தகாலம் (shared past) உருவாக்கப்படுவதன் மூலம் கூட்டு நினைவுத்திறத்தை (Collective Memory) விடுதலைப் புலிகளுக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ உருவாக்குகின்றார். பொதுவான இறந்த காலத்தினூடும் கூட்டு நினைவுத்திறனினூடும் ‘ஸ்ரீலங்கன்’ என்கின்ற கூட்டு அடையாளம் ஸ்ரீலங்காவில் வாழுகின்ற அனைவர் மீதும் திணிக்கப்படுகின்றது. இவற்றினூடு சிங்கள அரசு தான் விரும்புகின்ற கூட்டு பாதிக்கப்பட்டமையை உருவாக்கி நிர்ணயம் செய்கின்றது. பொது அடையாளத்தை திணிப்பதனூடு ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சி பிராந்தியத் தன்மையை வடக்கு-கிழக்குக்கு விசாலப்படுத்துகின்றது. அதிகார மையத்தை கொழும்பு நோக்கி நகர்த்துவதன் மூலம் அதிகாரப் பரவலாக்கத்தை கட்டுப்படுத்தி ஒற்றையாட்சித்தன்மையை வலுப்படுத்துகின்றது.
தமிழர்களை விடுதலை புலிகளால் பாதிக்கப்பட்டவர்களாக உருவாக்குவதன் மூலம் தமிழர்களுக்கிடையே உடைவுகளை ஏற்படுத்துதல் சிங்கள அரசின் பிரதான தந்திரோபாயமாக ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தமிழர்களைத் தமிழர்களுக்கெததிராக, தமிழர்களே தமிழர்களின் எதிரிகளாக வடிவமைப்பதனூடு, தமிழர் அரசியல் உரிமை நோக்கிய பயணத்திற்கும் சாவு மணி அடிக்க முனைகின்றார். இதன் மூலம் ஒட்டு மொத்த தமிழரையும் ‘ஸ்ரீலங்கர்களாக’ வடிவமைத்து மைய அதிகாரத்திற்குட்பட்டவர்களாக கட்டமைக்கின்றார்;. புலிப்பயங்கரவாதத்திலிருந்து தமிழர்களை விடுவிப்பதற்காக நியாயப்படுத்திய ‘மனிதாபிமானத்திற்கான போரினூடு’ சிங்கள அரசும், அதன் படைக்கட்டுமானங்களும் தங்களை தமிழர்களின் மீட்பர்களாக கட்டமைத்துக் கொண்டது. இதற்கான நினைவுத்திறத்தை கட்டமைப்பதில் சிங்கள அரசு தோல்வியைச் சந்தித்தது எனலாம். இதனால் தான் சிங்கள அரசு படுகொலை சார்ந்த நினைவுத்திற உருவாக்குதலை தடை செய்தது. தமிழர்களின்படுகொலை சார் நினைவுத்திற கட்டமைப்பு சிங்கள அரசின் ‘பாதிக்கப்பட்டமை கட்டமைப்புக்கு’ முரண்பாடானது.
சிங்களவர்களை புலிப்பயங்கரவாத பாதிக்கப்பட்டவர்களாக காட்டமுனைவது சிங்கள-பௌத்த அடக்குமுறை வரலாற்றை ரோஜாப் பூக்களால் அலங்கரிப்பது போன்றது. இதன் மூலம் மகிந்த ராஜபக்ஷ குறிப்பாக சிங்களவர்கள் தான் உண்மையான (Real) பாதிக்கப்பட்டவர்கள் என்று சுட்டுவதன் மூலம் (Competitive Victimhood) போட்டிக்குரிய பாதிக்கப்பட்டமையை உருவாக்கின்றார்.
போட்டிக்குரிய பாதிக்கப்பட்டமை (Competitive Victimhood)
கமிழர்கள், கட்டமைக்கப்பட்ட சிங்கள அரசியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதை ‘பாதிக்கப்பட்டமையாக’ (Victimhood) கட்டமைக்கும் போது மகிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளால் சிங்களவர்கள் பாதிக்கப்பட்டதை ‘உண்மையான (Real)’ பாதிக்கப்பட்டமையாக கட்டமைக்கின்றார். மகிந்த ராஜபக்ஷவின் சிங்கள பாதிக்கப்பட்டமை அரசியல் சொல்லாடல் யார் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் என்ற விவாதத்தை இனக் குழுக்களுக்கிடையே தோற்றுவிக்கின்றது. இவ்வாறான விவாதம் அரசியல் மயப்படுத்தப்பட்டு எதிரெதிரான குழுக்களுக்கிடையே விவாதிக்கப்படும் போது யார் அதிகமாக கொலை செய்யப்பட்டார்கள் அல்லது பாதிப்புக்குள்ளானார்கள் என்ற கருத்தாடல் ‘எண்ணிக்கையை’ மையமாகக் கொண்டு எழுகின்றது.தமிழர்களை பொறுத்தவரையில் பாதிப்பு எண்ணிக்கை மட்டும் சார்ந்ததல்ல மாறாக சிங்கள அரசின் நிறுவனமயப்படுத்தப்பட்ட,கட்டமைக்கப்பட்ட உள்நோக்கம் (intent) சார்ந்தது.போட்டிக்குரிய பாதிக்கப்பட்டமையை விவாதப் பொருளாக்குதல் தமிழர் பாதிக்கப்பட்டமையை மைய விவாதத்திலிருந்து வெளியே நகர்த்துகின்ற ஒரு பொறி.
MasiNoor மற்றும் அவருடைய சகாக்களால் அறிமுகப்படுத்தப்பட்ட Competitive Victimhood/போட்டிக்குரிய பாதிக்கப்பட்டமை, மகிந்த ராஜபக்ஷவின் ‘விஷேட பாதிக்கப்பட்டவர்கள்'(தமிழர்கள்),’உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் ‘(சிங்களவர்கள்) சொல்லாடல்’ நாங்கள்'(us) எதிர் ‘அவர்கள்'(them) என்ற சமூக பிரிவினையை உருவாக்குகின்றது. இச் சமூகப்பிரிவினை அல்லது கட்டமைப்பு மகாவம்ச வரலாற்று மனநிலையிலிருந்து கட்டப்படுகின்றது. மகிந்த ராஜபக்ஷவின் முதலாவது பாதிக்கப்பட்டமைக் கட்டமைப்பிற்கும், இரண்டாவது, மூன்றாவது வகைக் கட்டமைப்பிற்கும் இடையே முரண்பாடு இருக்கின்றது. போட்டிக்குரிய பாதிக்கப்பட்டமையை கட்டமைப்பதனூடாக மகாவம்ச வரலாற்றினூடாக கட்டப்பட்ட ‘நாங்கள்’ எதிர் ‘அவர்கள்’ சமூகப்பிரிவினை மேலும் பாதிக்கப்பட்டமை தொடர்பில் பேணுவதோடு. தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்கின்றார்.
தெற்கு தன்னார்வ நிறுவனங்கள் மைத்திரி-ரணில் அரசாங்கமும் சேர்ந்து அரச முயற்சிகளுக்கு, நிலைமாறுதலை நீதிப்பொறிமுறை தொடர்பில் ஆதரவு அளிக்கின்ற மற்றும் ஆதரவு அளிக்காத பாதிக்கப்பட்ட மக்கள் வகுப்பினரை கட்டமைத்தனர். குறிப்பாக காணாமல் போன அலுவலகம் உருவாக்குவது தொடர்பான சரத்திலும் அதன் ஏனைய அபிவிருத்தியிலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களை ‘ஆதரவான’ மற்றும் ‘ஆதரவற்ற’ வகையினராக பிரித்து பாதிக்கப்பட்டவர்களை தேவைகள் அடிப்படையில் அல்லது தேவைகள் உள்ளவர்களாக கட்டமைத்தனர். தேவைகளை முன்னிறுத்திய தெற்கு அமைப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகளை முன்னிறுத்தவில்லை. அப்போதைய அரசும் அது சார்ந்த நிறுவனங்களும், அரச சலுகைகளை பெற வேண்டுமெனில் அரசின் பொறிக்குள் வர வேண்டும் என பொறியை உருவாக்கியது. பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை சிங்கள அரசு தனக்குச் சாதகமாக்கி தனது அரசியல் நிகழ்ச்சி திட்டத்தை நகர்த்தியது. இவ்வாறு பாதிக்கப்பட்டமையை அரசு கட்டமைத்தது.
தமிழர்கள்கூட்டமைக்க வேண்டிய ‘பாதிக்கப்பட்டமை’
சிங்கள அரசு மே 2009க்குப் பின்னர் தனது வள வலுவைப் பயன்படுத்தி இறுதி கட்டப்போரை நியாயப்படுத்த முயன்றது. நியாயப்படுத்தல் பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்பட்டது. அறிவு சார் அறிக்கை நெறிகளினூடாக, உள்நாட்டு வெளிநாட்டு பிரச்சாரங்களுக்கூடாக, ஊடகங்களினூடாக இன்னும் பிற. மே 2009 ஆயுத மௌனிப்பின் பின்னர்;, தமிழர்கள் பயன்படுத்தகூடிய – சிங்கள அரசிற்கு எதிராக- பாதிக்கப்பட்டமையும், சாட்சிகளும் தான் ஆயுதமாக இருந்து வந்துள்ளன.
சிங்கள அரசின் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் எதிரான போரை சிங்கள அரசு மே 2009க்குப் பின்னர் முன்னெடுத்தது. இப் போர் முன்னெடுப்பு பல்வேறு முனைகளைக் கொண்டிருந்தது. மிகத் திட்டமிடப்பட்டு இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கள அரசோ, வேறு எவரோ ‘தமிழ் பாதிக்கப்பட்டமையை’கட்டமைக்க வேண்டிய அவசியமில்லை,தமிழர்களே கட்டமைக்க வேண்டிய வரலாற்றுத் தேவை தமிழர்களுக்கு உண்டு.
பாதிக்கப்பட்டமையை பிரதிநிதித்துவப்படுத்தல்.
தமிழர்களின் பாதிக்கப்பட்டமையை நிறுவனமயமாக்கப்படவில்லை நிறுவனமயமாக்கப்படாத காரணத்தினால் தான் நாம் எமது பாதிக்கப்பட்டமையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மூன்றாம் தரப்பினர்களில் தங்கியிருக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. மே 2009க்குப் பின்னர் தெற்கிலிருந்தும், ஏனைய நாடுகளிலிருந்தும் பாதிக்கப்பட்டமையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு வந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பியவாறு தமிழ் பாதிக்கப்பட்டமையை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெற்ற தகவல்களை தாங்கள் விரும்பியவாறும் தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறும் தங்கள் அரசியலுக்கு துணைநிற்கக் கூடியவாறும் பாதிக்கப்பட்டமையை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள் என்பது கசப்பான உண்மையே.பல்வேறு தரப்பினர் தங்களுக்கேற்ற வகையில் தமிழ் பாதிக்கப்பட்டமையை பிரதிநிதித்துவப்படுத்த முற்பட்ட போது பாதிக்கப்பட்டமை பல்வேறு வகையில் திரிவுபடுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு சொல்லாடல்கள் கட்டமைக்கப்பட்டன. பல்வேறு சொல்லாடல்களில் தமிழ் பாதிக்கப்பட்டமை தொடர்பான மைய சொல்லாடலின் நம்பிக்கைதன்மையும், அறத்தன்மையும், சட்டப்பேறும் சிக்கலுக்குட்படுத்தப்பட்டது. சொல்லாடல்களை கேள்விக்குட்படுத்தல் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைத்தன்மை, நம்பிக்கைத்தன்மை, அறவொழுக்கம் போன்றவற்றை கேள்விக்குட்படுத்தலேயாகும்.
பாதிக்கப்பட்டமை நிறுவனமயப்படுத்தப்பட்டு அணிதிரட்டப்படும் போது அதனுடைய நம்பிக்கைத்தன்மை, உண்மைத்தன்மை, அறஒழுக்கம், சட்டபூர்வ தன்மை உடைந்து அல்லது சிதிலடைந்து போவதற்குரிய வாய்ப்புக்கள் அரிதாக உள்ளது. நிறுவனமையப்படுத்தல் மீஉயர் சொல்லாடலை (metanarrative) உருவாக்குகின்றது. இம் மீயுயர் சொல்லாடல் ஒரு இலக்கு நோக்கி மையப்படுத்தப்படுகின்றது அதுவே இலக்கு நோக்கி அணித்திரட்டப்படுகின்றது. தமிழர் பாதிக்கப்பட்டமை தொடர்பில் தற்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அணித்திரட்டலும், இராணுவமயப்படுத்தலால் காணிகளை இழந்தோரின் பாதிக்கப்பட்டமையும் ஒரளவுக்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக நிறுவனமயப்படுத்தப்படாவிட்டாலும் ஓர் அளவிற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன. நிறுவனமயப்படுத்தப்படுகின்ற போது பிரதிநிதித்துவப்படுத்தல் இலகுவாக்கப்படும்.பாதிக்கப்பட்டமை சொல்லாடலை கேள்விக்குட்படுத்தும் சந்தர்ப்பங்கள் குறைவாக உள்ளது. சித்திரவதைக்குட்படுத்தப்பட்டோரின் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டோர், அவயங்களை இழந்தோர் போன்ற இன்னும் பிற பாதிக்கப்பட்டமை இன்னும் நிறுவனமயப்படுத்தப்படவில்லை, ஏனைய நாடுகளை போல.
பாதிக்கப்பட்டமையை நிறுவனமயப்படுத்தல் என்பது ஏற்கனவே கூறப்பட்டது போல் நினைவுத்திறத்தை உருவாக்குதலாகும். நினைவுத் திறத்திற்கும் வரலாற்று உருவாக்கத்திற்குமான இடைவெளி மிக நெருக்கமானதாகும். பாதிக்கப்பட்டமை- நினைவுத்திறம்-வரலாறு இவற்றுக்கிடையேயான தொடர்பு இன்றியமையாதது. மூன்றும் ஒன்றிலொன்று தங்கியுள்ளது. சிங்கள அரசு ஒரு போதும் தமிழ் பாதிக்கப்பட்டமையை நிறுவனமயப்படுத்த அனுமதிக்காது ஏனெனில் நிறுவனமயப்படுத்தல் என்பது கூட்டு பாதிக்கப்பட்டமையை கட்டமைத்தலாகும். சிங்கள அரசு உதிரியான பாதிக்கப்பட்டமையை பொறுத்துக்கொள்ளும். ஏன் தமிழர்கள் கூட்டு பாதிக்கப்பட்டமையை கட்டமைக்கவேண்டும் என்பதை ஆராய்வோம்.
கூட்டுப் பாதிக்கப்பட்டமை
கூட்டு பாதிக்கப்பட்டமையை தமிழர்கள் கட்டமைத்தலுக்கான காரணங்களைப் பட்டியலிட்டாலளூ; கூட்டுப் பாதிக்கப்பட்டமை கூட்டு வன்முறையால் நிகழ்கின்றது (Masi nosr 2009).கூட்டு பாதிக்கப்பட்டமை கூட்டு வன்முறையால் நிகழ்கின்றதென்றால், கூட்டு வன்முறை கட்டமைக்கப்பட்ட வன்முறையால் நேரடியாக அரங்கேற்றப்படுகின்றது (Galtung 1969). கட்டமைக்கப்பட்ட வன்முறைபாரபட்சமுள்ள சமூக அரசியல் கட்டமைப்புக்கள், கொள்கைகள், சட்டங்கள், சமத்துவமற்ற அபிவிருத்தி போன்றவற்றின் மேல் கட்டப்படுபவை. ஒரு சமூகத்தை கூட்டாக பாதிப்புக்குட்படுத்தல் பின்வரும் காரணங்களினால் நிகழலாம்.
1. காலனித்துவத்திற்கூடாக
2. ஆக்கிரமிப்பிற்கூடாக
3. அடிமைபடுத்தலினூடாக
4. இனப்பிரச்சனையினூடாக
5. பயங்கரவாதத்தினூடாக
6. வெறுப்புணர்ச்சியைஃவிரோதத்தை தூண்டும் குற்றங்களுடாக
7. போரினூடாக
8. இனப்படுகொலையினூடாக (Masi Noor,2007)
ஸ்ரீலங்காவில் தமிழர்கள் வரலாற்று ரீதியாக கூட்டான பாதிப்புக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளார்கள் என்பதை எல்லாரும் நன்கறிவர். தமிழ் கூட்டுப் பாதிக்கப்பட்டமைக் கட்டமைப்பை இனப்படுகொலையூடாக உருவாக்கப்பட வேண்டிய தேவை உண்டு இனப்படுகொலை வரைவிலக்கணத்தில் சரத்து இரண்டில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
‘ஒரு தேசத்தை சார்ந்தவர்களை அல்லது இனத்தை சார்ந்தவர்களை அல்லது மரபுக்குடியை சார்ந்தவர்களை அல்லது மதத்தை சார்ந்தவர்களை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ அழிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் இருப்பின் அது இனப்படுகொலையாகக் கருதப்படும். இவ் இனப்படுகொலை பின்வரும் நடவடிக்கைகள் செயற்பாடுகள் ஊடாக முன்னெடுக்கப்படலாம்.
கொலை
உடல்/உள தீங்கு
திட்டமிடப்பட்டு வாழ்வியலை பாதிப்பதற்காக பிரயோகிக்கப்படும் அழிவு (முழுமையான அழிவாக அல்லது பகுதியானதாக இருக்கலாம்
பிறப்பு வீதத்தை தடுக்கின்ற முறைமைகள்
வலிந்து சிறுவர்களை ஒரு குழுவிலிருந்து இன்னொருகுழுவிற்கு இடமாற்றுமின்ற முயற்சிகள்’ ([.eh/un.org.org)
தமிழர்கள், பாதிக்கப்பட்டமையை பலநிகழ்ச்சித் தளங்களில் கட்டியமைக்க வேண்டிய தேவை உள்ளது அதன் இலக்கு தமிழர் மீது இனப்படுகொலை நடப்பதை நிரூபிக்க உதவி புரிய வேண்டும் அத்துடன் அழிவுகளுக்கு காரணமாக கொள்கைகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட வேண்டியது இன்றியமையாததாகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் செயற்பாட்டாளர்களாக
நிலைமாறுகால நீதியின் (மிக முக்கிய) குறைபாடாக குறிப்பிடப்படுவது பாதிக்கப்பட்டவர்களை அரசியல் சமூக செயற்பாட்டாளர்களாக இயங்க ஊக்குவிக்காமை. ஸ்ரீலங்கா அரசு இதை மிகவும் கச்சிதமாக செய்து வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அரசியல் இயங்கு தன்மையை அந்நியப்டுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா அரசைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் வெறுமனே அபிவிருத்திக்கும் உதவிக்கும் உரியவர்கள். ஏவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உரிமை மறுக்கப்பட்டதோ அவ்வாறு தான் அரசியல் இயங்கு தன்மையும் மறுக்கப்பட்டது.
தமிழர்கள் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்ததற்காக சிங்கள அரசியல் வன்முறையால் (நிறுவனமயப்படுத்தப்பட்ட, கட்டமைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டார்கள். தமிழ் தேசிய எழுச்சியின் அடித்தளமாக இருப்பது தமிழர்களின் அரசியல் தன்மை, அந்த அரசியல் தன்மையை அரசியல் நீக்கம் செய்வது தமிழ் தேசியத் தன்மையை கேள்விக்குட்படுத்துவதாகும். தமிழ் பாதிக்கப்பட்டமையை, பாதிக்கப்பட்டவர்கள் (தமிழர்கள்) நிறுவனமயப்படுத்தி அரசியல் நீதி வேண்டிய அணித்திரட்டலாக மாற்ற வேண்டிய தேவை எம்முன்;னே எழுந்துள்ளது. தமிழர்களின் மிக பாரிய பலமாக இருப்பது தமிழர்களின் பாதிக்கப்பட்டமை. பாதிக்கப்பட்டமையை நேர்மறையான (Positive) வலிமைமிக்க படைவலுவாக சர்வதேச தளத்திலும், தாயகத்திலும் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசியல் வரலாற்று தளத்தில் வாழும் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்று கடமையிலிருந்து யாரும் ஒதுங்கிவிட முடியாது.