featued_image

புதுக்குடியிருப்பு வீடுகள் | ஜெரா

auhtor

on
2020-05-24


By :
Jera Thampi


966 Views

 

வாய்மொழி வரலாற்றெழுத்தியல் என்ற ஆய்வியல் முறைமை மானுடவியல்சார் கற்கைகளில் பயன்படுத்தப்படுவதுண்டு. அதாவது கிடைக்கின்ற தொல்லியல் – மானுடவியல் எச்சங்களை நிரூபிக்க மேலதிகமாக சமகாலத்தில் வாழும் மனிதர்களது கதைகளை அவர்களிடம் கேட்டுப் பதிவுசெய்வது, ஆய்வுக்குட்படுத்துவது, வரலாற்றுத் தொடர்ச்சியற்ற தன்மை காணப்படுமிடத்து அதனை இணைத்தக்கொள்ள வாய்மொழிக் கதைகளைப் பயன்படுத்தவது, இனக்குழுமங்களது வரலாற்றை கட்டமைக்கும்போது அவ்வினத்தின் மூதாதையர்கள், அதற்குள் உலவும் வயதால் மூத்தவர்களது வாழ்க்கையை அறிந்துகொள்ளல் எனப் பல விடயங்கள் இதற்குள் உள்ளடங்குகின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் வன்னியின் முதுநிலை ஊர்களில் ஒன்றான புதுக்குடியிருப்பு கிராமம் பற்றிய வரலாற்றைத் தேடும் வாய்ப்புக் கிடைத்தது. போதியளவு இலக்கிய ஆதாரங்கள் இல்லாதவிடத்தில், வாய்மொழியாக ஆதாரங்களைத் திரட்டவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது சந்தித்த மனிதர்களுல், தனக்குள் மிக நீண்ட – கனதியான வரலாற்றுக் கதைகளை கொண்டவராக எம் முன் அமர்ந்திருந்தவர் அமரர்.க. சிதம்பரப் பிள்ளை அய்யா அவர்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற புதுக்குடியிருப்பை பூர்வ நிலமாகக் கொண்ட இவர், அக்கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்களில் பிரதானமானவர். ‘சிதம்பரப்பிள்ளை வாத்தியார்’ என அறியப்பட்ட இவர்,  ஆசிரியராக, கல்வியலாளனாக ஆற்றிய பங்களிப்பினாலும்தான், இத்தனை பெரிய போரில் தரைமட்டமாக அழிக்கப்பட்ட பின்னரும் அச்சிறுநகரம் மீண்டும் செழித்தோங்கி நிற்கிறது. கல்வியோடு, தன் கிராமத்தின் வரலாற்றைப் பதிவுசெய்துவிடவேண்டும் என்பதிலும் நினைவுகள் மறந்துவந்த முதுமைக்காலத்திலும் ஆவலாக இருந்தார். அதன்படியே எங்களுக்கு ஒத்துழைத்தார். நேற்று க.சிதம்பரப்பிள்ளை அமரத்துவம் அடைந்தார் என்ற செய்தி வந்தபோது, அவரிடம் இருந்து தேடிக்கொண்ட அரிய வரலாற்றுத்தகவல்களை நிலைக்கச்செய்துவிட்டே சென்றிருக்கிறார் என எண்ணத்தோன்றியது.  அவர் தன் கிராமத்தின் வரலாறு குறித்து கொண்டிருந்த ஆவலின் சிறுபதிவாக, இந்த அஞ்சலிக்குறிப்பை காணிக்கையாக்குகின்றோம்.

‘..நான் தொடர்ச்சியில்லாமல் தான் கதைப்பன். நிறைய விசயங்கள் மறந்துபோச்சு. நீங்கள் பொறுமையாக் கேளுங்கோ. சந்தேகம் வாற இடங்களில் கேள்விகோளுங்கோ. நான் யோசிச்சிப் பதில்சொல்லுவன்’ என்றுதான் நேர்காணலை ஆரம்பிப்பார். அவ்வாறு அவர் சொன்னவற்றுள் புதுக்குடியிப்பு வீடுகள் போர் தொடங்கும் வரை எப்படியிருந்து, எப்படி வளர்ந்தன என்பதைத் தொகுக்க முடிந்தது.

புதுக்குடியிருப்பு வீடுகள்

1948 ஆம் ஆண்டிலும், அதற்கு முன்னரான காலத்திலும் புதுக்குடியிருப்பின் கிராமங்களெங்கும் வட்டவடிவான வீடுகளே அமைக்கப்பட்டிருந்தன. நடுவின் கப்பு எனப்படும் வெட்டப்பட்ட வைர மரம் நட்டு, அதனைச் சூழ வட்டமாக சிறிய கப்புகள் நட்டு, சிறிய கப்பிலிருந்து நடுக் கப்பிற்கு பூட்டு எனப்படும் தடுகளால் இணைப்பர். பூட்டைச் சுற்றி வட்டமாக பாவட்டம் வரிச்சால் நெருக்கமாக வனைவர். வனைவதற்கு ஆலமர விழுதுக் கயிறு, இத்தி மர நார், மான்கொடி போன்றன பயன்படுத்தப்படும். கூரைக்கு மிகவும் நெருக்கமாகப் பனையோலையே வேயப்பட்டது. சில இடங்களில் இணுக்குப் புல்லும், வைக்கோலும் வேயப்பட்டுமுள்ளது. சுவரானது வரிச்சுக் கட்டி, அதில் களிமண்ணை சதுரமாக உருட்டி வைத்தே கட்டப்பட்டிருந்தது. சில வீடுகளில் சுவரின் உட்புறமும், வெளிப்புறமும் மண்ணினால் பூசப்பட்டு, வெள்ளைமலையேற்றத்திலிருந்து எடுத்துவரப்படும், வெண்ணிற மண்ணினால் பூசப்பட்டீருந்தது. வீட்டின் நிலம் சாணி, ஆவரசு இலை, முள்முருக்கு இலை போன்றவற்றால் மெழுகப்பட்டிருந்தது. வீட்டுக்கு ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்தது. மெல்லிய தடிகள், பனையோல, மரக் கிளைகள் போன்றவற்றினால் வீடுகளுக்குக் கதவு போடப்பட்டடிருந்தது. சமைப்பதற்கும், உறங்குவதற்கும் என தனியறைகள் இருக்கவில்லை. ஒரு வட்டவீட்டுக்குள்ளேயே சமையல், உறங்குவது, தங்குவது என அனைத்து வாழ்க்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. வீட்டின் முன் பகுதியில் திண்ணை எனப்படும் 3 தொடக்கம் 4 அடி உயரமான திண்ணை போடப்பட்டிருந்தது. இதனை விருந்தினர்கள் வந்தால் உபசரிப்பதற்கும், ஓய்வைக் கழிப்பதற்கும், உறங்குவதற்கும் பயன்படுத்தினர். பெரும்பாலான வீடுகளின் முற்றத்தில் கொம்பறை எனப்படும் நெற்சேமிப்புக் கலம் வைக்கப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பின் பூர்வீக கிராமங்களை விட்டு மக்கள்  வெளியேறியதும், வீட்டு அமைப்பு முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. பனையோலையிலிருந்து தென்னையோலைக்கு வீட்டின் கூரைகள் வேயப்பட வேண்டிய சூழல் வந்தபோது, இந்த அமைப்பு மாற்றம் முறையில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது தென்னையோலை கிடுகுகள் நீளமானவையாக இருந்தபடியால் வட்டமாக வேய்வதில் சிரமம் இருந்தது. எனவே வீடுகளை வேய்வதற்கு அமைவாக நீளமாக அமைத்துக்கொண்டார்கள். பின்னர் கிடுகினால் வேய்வது  வீடமைப்பு நாகரிகமாக மாறவே, அனைவரும் அதையே பின்பற்றினார்கள். 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் வட்டவீடு அமைத்தல் முற்றாகவே அருகியது. முழு வீடுகளுமே தச்சுப் பொறிமுறைகளுக்குட்பட்ட அதாவது 4 மூலைகளுக்கு கப்பு நட்டு, நடுக்கப்புக்குப் பதிலாக ஊசிக்கால் வைத்து வீடு அமைக்கும் முறை உருவானது. இந்த வீடு செவ்வக வடிவில் பெரியளவில் இருந்தமையால், உறங்கும் அறை, சுவாமி அறை, மால் (விறாந்தை) என சுவரால் பிரித்துக் கொண்டனர். காலப்போக்கில் சமையலறை தனியாகவும் அமைக்கப்பட்டது.

கிடுகு வீடு வேய்வதில் புதுக்குடியிருப்புக்கெனத் தனிப் பாரம்பரியம் ஒன்றிருந்தது. சமூக ஒற்றுமையின் அடையாளமாக அது நீண்டகாலம் பேணப்பட்டும் வந்தது. ஊரில் இருக்கின்ற ஒருவரின் வீடு  வேய்வதாக இருந்தால், அயலில் இருக்கின்ற ஆண்கள் அனைவருமே, அதிகாலை 4 மணிக்கு வேயவுள்ள வீட்டுக்கு வந்துவிடுவர்.  கிடுகு எடுத்து அடுக்குவதிலிருந்து மூலை வேய்தல் வரையில் தனித்தனியாகப் பிரிந்து நின்று வேலையைத் தொடங்குவார். காலை 10 மணிக்குள் வீட்டு வேய்ச்சல் நிறைவுற அனைவருக்கும் உணவு வழங்கப்படும். கள் அருந்துபவர்களுக்கு கள்ளும் வழங்கப்படும். இப்படியே அந்தக் கிராமத்தில் இருக்கின்ற அனைவரினது வீடுகளும், மாறிமாறி வேயப்படும். மண்ணினால் அறுத்த கற்களைக் கொண்டும், சுடு செங்கற்களைக் கொண்டும் சுவர்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அறைக்கும் தனிக் கதவுகளும், யன்னல்களும் வைக்கப்பட்டு, வைரமான பலகைகளால் கதவு, யன்னல் பொருத்தப்பட்டடிருந்தன.  ஆவரசு, அன்னமுன்னா, முள்முருக்கு போன்றவற்றினால் வீடு மொழுகப்பட்டது.

 2002 ஆம் ஆண்டுகள் வரையிலும் புதுக்குடியிருப்பின் வீடுகள் இந்த அமைப்பு முறையிலேயே இருந்தன. 2002 ஆம் ஆண்டில் ஏ9 சாலை திறக்கப்பட்டவுடன், தெற்கிலிருந்து சீமெந்து, இரும்பு மற்றும் கட்டடிடப் பொருட்கள் புதுக்குடியிருப்புக்கு வந்தன. அத்துடன் புதுக்குடியிருப்பு மக்கள் போதியளவு பணத்தைச் செலவிட்டு மிகவும் நவீனமயப்பட்ட வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதிகளில் தனியார் மின்சார வழங்குநர்களும் இருந்தமையினால், வீடுகளுக்கு மின்குமிழ்களும் பொருத்தப்பட்டன.

2009 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போரின் காரணமாக, புதுக்குடியிருப்பில் இருந்த அனைத்து வீடுகளுமே சேதமடைந்தன. பல வீடுகள் தரைமட்டமாகிப் போயின. வீடுகள் அழிக்கப்பட்டதுடன், நூற்றாண்டு காலமாக புதுக்குடியிருப்பு மக்களின் சேகரிப்பில் இருந்த அரிய பொருட்களும் அழிந்து போயின. ஏட்டுச்சுவடிகள், காணி உறுதிகள், வெண்கல பொருட்கள், பண்பாட்டுப் பொருட்கள் எனப் பல வகையும் இதற்குள் அடக்கம்.

அமரர்.க.சிதம்பரப்பிள்ளை அவர்கள் தந்துவிட்டுப்போன தகவல்களில் ஒரு பகுதியை எடுத்தே வாய்மொழி வரலாறாக அச்சிறுநகரத்தின் வீடுகள் பற்றிய வரலாற்றை எழுத முடிந்திருக்கின்றது. இன்று புதுக்குடியிருப்புக்கு செல்லும் ஒருவர் இத்தகைய வீடுகளைக் காண்பதரிது. ஆனால் அவரின் நினைவில் இருந்த விடயங்களைப் பதிவாக்கிச் சென்றார். இவரைப்போல நம் சூழலில் எத்தனை மனிதர்கள்…! ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை கதைகள்…! சிறுகச் சிறுக வாய்மொழி வரலாறாகப் பதிவுசெய்யத்தொடங்கினால், ஒவ்வொரு கிராமத்தின் மிகக் கிட்டிய வரலாற்றையாவது பதிவாக்கி வைக்கமுடியும். அதற்கு அமரர்.க.சிதம்பரப்பிள்ளை போன்ற மூத்தோர்கள் சாட்சியாக இருக்கின்றனர்.

Our Facebook Page

Archives