1970களின் நடுப்பகுதியாயிருக்கக்கூடிய நாளொன்றில் அம்மாவுடன் கடற்கரைச்சேனை வள்ளிகேணியிலிருந்து அருகேயுள்ள ஆற்றைக் கடந்து மூதூருக்குப் போகும் பயணம் எனக்கு சிறுசலனமாக ஞாபகம் இருக்கிறது. ஆற்றைக் கடந்து பிரதான வீதியைக் கட்டைபறிச்சான் சந்தியில் தொட்டு மேற்குப்புறமாக மூதூரை நோக்கித் திரும்பி சிறுதூரம் நடந்தால் பாதை என அழைக்கப்பட்ட மிதவைத்துறை எனக்கு ஞாபகமிருக்கிறது. அதில் பயணப்பட்டபோது நடந்த விபத்து பற்றியும் மாட்டு வண்டிநீரினுள் மூழ்கியது பற்றியும் அம்மா சொன்ன கதையுடன் எனது பார்வை திரும்பியபோது ஒரு பாலம் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைக் கண்டேன். வாழ்க்கையில் அவ்வளவு பிரமாண்டமான கட்டடவேலைத் தளத்தை அப்போதுதான் பார்த்தேன். பின்னர் பாலம் வேலை முடிந்து திறந்து பொதுப் போக்குவரத்து நடந்தபோது அதன் உயரம்> பிரமாண்டம் என்பன என்னை ஒவ்வொருமுறையும் பிரமிக்கவைக்கும். எப்போதும் போலவே அம்மாவுடனான மூதூர்ப் பயணங்களில் பாலத்திலிருந்து கீழே குனிந்து நீரைப்பார்ப்பதும் பாலத்தின் தளத்திலிருந்த மழைநீர் வழிந்தோடும் குழாய்களூடாக நீரைப்பார்ப்பதும் தலைசுற்றவைக்கும் சாகச கணங்கள். அம்மாவிடம் ஏச்சு வாங்கினாலும் பாலத்தின் அருகுக் கட்டில் ஏறாமல் நடந்து கடந்த நாட்களே இல்லை எனலாம். வள்ளிக்கேணியில் எங்கள் வீடு> கடற்கரைச்சேனை சந்தியைச் சுற்றி வந்தால் 5 கிலோமீற்றர் பயணம். பாலத்திற்குப் பக்கத்தில் பாதையில் திரும்பினால் ஒருபுறம் தில்லைநகர்த்தோட்டத்திற்குப் போகும் ஒற்றையடிப் பாதை> அதன் எதிர்ப்புறமான இன்னுமொரு ஒற்றையடிப்பாதை எங்கள் பாயுறதுறையடிக்குப் போகும். அதனூடு நடந்தால் சிறிய பாயும்துறை (நடந்து கடந்துபோகக்கூடிய ஆழம் குறைந்த ஆறு) 300 மீற்றர்களில் எங்களது வீடு முதலாவது. பால வேலை நடந்தபோதும் அதனூடு போக்குவரத்து நடந்தபோதும் அத்தனைச் சத்தங்களையும் நாங்கள் எங்கள் வீட்டுமுற்றத்திலிருந்து கேட்போம். மாட்டுவண்டிகள் போகும் சத்தங்கள் கூட இரவுகளில் துல்லியமாகக் கேட்கும்.
1980களின் ஆரம்ப காலங்களில் இராணுவ, பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினரின் வாகனங்கள் பாலத்தைக் கடக்கும்போதே எங்களால் கணித்துச் சொல்லக் கூடியதான வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்தோம். பாலம் எங்கள் போராளிகளை ஒளித்துக் கொள்ளுங்கள் என்ற செய்தியை முதலாவதாகச் சொல்லிவிடும். பாலம் எங்கள் எல்லையிலிருந்ததாக நாங்கள் மனதளவில் கணித்திருந்தோம் என்பது கூட உண்மைதான். ஆனாலும் தமிழர் தாயகப்பகுதி மூதூர் நகரினுள் நீண்டுவியாபித்திருந்த காலப்பகுதி அது.
நான் சைக்கிள் ஓடிப் பழகியதும் மூதூருக்கான பயணங்கள் யாவுமே தனித்து நடந்தன. அம்மாவின் கண்காணிப்பிலிருந்து கிடைத்த சுதந்திரம் பாலத்தைக் கடக்கும் ஒவ்வொரு கணத்தையும் இன்னும் மகிழ்ச்சியாக்கும். பாலத்தில் நீண்டநேரம் நின்று பின்னர் இறங்கிச் செல்வதை வழக்கமாகவே கொண்டிருந்தேன். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு. அப்போது நான் மிகவும் \நோஞ்சான்|. என்னால் அந்தப் பாலத்தின் உயரத்தை சைக்கிளால் ஓடி ஏறிவிடமுடியாது. உருட்டியே ஏறவேண்டும். அப்போதும் நீண்ட மூச்சுவாங்கும். பாலத்தில் நிற்பதும் அதனை இரசிப்பதுவும் இழைப்பாறும் நேரமாகவும் எனக்கு இருந்தது. பாலத்தின் வடக்குப் பக்கத்திலிருந்து பார்த்தால் எங்கள் வளவின் எல்லiயிலிருக்கும் புளியமரம் தெரியும். இப்போதும் புளியமரம் இருக்கிறது. எங்கள் வளவு களீபரம் செய்யப்பட்டுவிட்டது. மூதூரிலிருந்து திரும்பிவந்தால் புளியமரத்திடம் பாலத்திலிருந்தே செய்தியைப் பரிமாறிவிடமுடியும்.
ஆயுதப் போராட்டம் தீவிரங்கண்ட 80களின் நடுப்பகுதியில் எங்கள் ஊர் ’பொடியனுகளால்| (இயக்கங்களால்) நிரம்பிவழிந்தது. ’கிப்ஸ்| சரமும் ’டாங்டாங்| சேட்டும் அணிந்த புதியவர்களும், சீறிப்பாயும் மோட்டார் சைக்கிள்களும், மறைத்தும் மறையாமலும் தெரியும் துப்பாக்கிகளும் எங்களை இன்னும் ஆச்சரியமூட்டின. போராட்டம் சிறுவர்களான எங்களையும் உள்ளிளுத்துக் கொண்டது. போர் மேகம் மௌ;ள எங்கள் பூமியை சுற்றத் தொடங்கிய காலங்களவை. துப்பாக்கிச் சூடுகள் தினமும் கேட்கும் காலமாக மாறியிருந்தது. பாலத்தால் ஜீப் வருவதும் பின்னர் துப்பாக்கிச் சூட்டொலி கேட்பதும் வழக்கமாகிவிட்ட காலமது.
ஒருநாள் எங்கள் தாய்மாமா தில்லைநகர்த்தோட்டத்திலிருந்து வீதி கடந்து பாயுற ஆறு கடந்து எங்கள் வீட்டிற்குப் பிற்பகலில் வந்தார். “பாலத்தடியில் பொடியனுகள்ற சிலாவன தெரியுது ஏதாவது நடக்கும்போல கிட்டடியில” என்றார். “கொஞ்சநாளா கணேசும் சரியான வேலையா ஓடித்திரியிது” என்றார். நாங்களெல்லாம் ஒரு திருவிழாவிற்காகக் காத்துக்கிடக்கத் தொடங்கினோம். பாலம் நாங்கள் கடந்தபோதெல்லாம் அதே வசீகரத்துடனேயே கம்பீரமாய் நின்றது. 1985 ஏப்ரல் மாதத்தின் ஒருநாள் மதியம் 2.30 இருக்கும் பேரிடி> நிலங்கள் வீடுகள் அதிர்ந்தன, குழந்தைகள் ஒருகணம் மூர்ச்சையாகி மீண்டநிலை. எங்கள் முற்றத்தில் பெரிய ஒரு மண்கட்டி வந்து வீழுந்தபோதுதான் புரிந்தது> பாலம் தன் முன்னால் ஒரு பாரிய குழியைக் தோண்டி அதனுள் இராணுவ ஜீப்பொன்றைப் புதைத்துவிட்டதென்று. மூதூர் கிழக்கின் முதலாவது இராணுவத் தாக்குதல் தொடங்கிய பாலம் 2006 இறுதிச் சண்டைவரை அத்தனை துயரங்களையும் சுமந்து மௌனசாட்சியாக நிற்கிறது.
எத்தனை சண்டைகள் எத்தனை முற்றுகைகள் எல்லா இயக்கங்களும் எத்தனை ஒற்றுமையாகத் திரிந்த காலங்கள் அவை. நமக்கான தாயகம் இதோ இன்னும் சிலநாட்களில் பிறந்துவிடும் என்கிற அசாத்திய நம்பிக்கை எங்களைப் போன்ற சிறார்கள் மனங்களிலும் வந்துவிட்டது. நாங்களும் காற்சட்டைகளை மறந்து எப்பொதும் தூக்கிக் கட்டிய சாறனும் ’பக்கிசேட்டு|க்களுமாகத் திரியத் தொடங்கினோம். முற்றுகை நீண்டபோதும் பொருளாதாரத் தடையால் பாலம் தாண்டி சாமான்கள் வராதபோதும் நாங்கள் துயருறவில்லை. போராட்டம் இனிப்பாயிருந்த காலங்கள் அவை. வடக்கில் நடந்தபிளவுகள், சகோதரயுத்தங்கள் எங்கள் பாலம் தாண்டிவரவேயில்லை. தடைசெய்தவர்களும், தடைசெய்யப்பட்டவர்களும் இறுதிவரை நட்பாகவே இருந்தனர்.
போர் முற்றியபோது பாலம் இராணுவத்திடம் போனது. இராணுவம் எங்கள் வீட்டுமுற்றங்களில் குடியேறியது. துயரம் மீட்க ஆளின்றி எங்களுடன் தூங்கி எழுந்து திரிந்த காலங்கள் அவை. மூதூருக்குச் செல்லும் பயணங்கள் யாவும் உயிர் உத்தரவாதமின்றிய பயணங்களாகின. பாலத்தைக் கடக்கும் ஒவ்வொருகணங்களும் மரணக்குழிப் பயணங்களை நினைவூட்டின. பாலம் தன் கம்பீரத்தை இழந்து சரணடைந்த போர்வீரனாக மாறிப்போனது. பாலம் தாண்டினால் போதும் என்கிற எண்ணமே மேலோங்கியிருந்தபோது இரசிப்பது எப்படி..?
1988 இறுதிப்பகுதி, நாங்கள் பாடசாலையில் உயர்தரத்திலிருந்தோம். துப்பாக்கிச் சன்னங்கள் மட்டுமே பேசிய, கேட்ட காலங்களவை. எங்கள் பாலம் காத்த பூமி கொலைக்காடாகியது. நாளும் ஒரு மரணம், ஓலம். துயரம் சூழ்ந்திருந்த இன்னுமொரு காலம் அது. உற்றதோழன் ஜெயச்சந்திரனின் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கிப் போட்டபோது உயிர் பிழைத்தால் போதுமென்று பாலம் கடக்க முடிவெடுத்தோம். அன்று 12 பேர் இடம்பெயர்ந்து திருமலைநகரப் பாடசாலையை நோக்கி எங்கள் பாடசாலை அதிபருடன் புறப்பட்டோம். பாலம் அப்போதும் மௌனமாகவே நின்றது. அதைத் தாண்டியபோதுகூட அது எங்களை நிற்கச் சொல்லவில்லை. துப்பாக்கிச் சன்னங்களுக்குப் பயந்து ஒடுங்கி நின்ற பாலத்தை அதன் பின்பு எந்தக் காலத்திலும் நான் பழைய கம்பீரத்துடன் காணவில்லை. பாலம் கடந்தபோது எனக்குள்ளேயே ஏதோ ஒரு இழை அறுந்ததான வலி உணர்ந்தேன். அதனுள்ளும் அறும் வலி இருந்தேயிருக்கும். நாங்கள் நீண்ட பயணங்களை முடித்துப் பழையவற்றை மறக்கும் வாழ்க்கைச் சுழலுக்குள் மாறிவிட்டோம். பாலம் அதே இடத்தில் அதே துயரங்களை சுமந்தபடி வயதாகி உழைத்துக் களைத்த ஏழைத் தொழிலாளியாக இன்னும் நிற்கிறது.