வரலாற்றுப்பழி.
பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்தான்கள் என்று ஒரு கூற்று உண்டு. பிணத்தையே தின்று களிக்கும் சாத்தான்களிற்கு புத்தகங்களின் மகிமை புரியுமா என்ன..? இன்று நேற்றல்ல, கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே கூரிய முனை கொண்ட போராயுதத்தை விட சீரிய ஒளி கொண்ட அறிவாயுதத்தின் மீதான பயம் ஆட்சியாளர்களிற்கு இருந்துகொண்டே தான் இருக்கிறது. அதனால் தான் வென்றவர்களின் பெருமை கூறும் இலக்கியங்கள் தோற்றுவிக்கப்படுவதும் அல்லது அவர்களிற்கு முன்னைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக திரிக்கப்படுதலும் அதிகார வர்க்கத்தின் ஆணையாக இருந்துள்ளது.
ஆரம்பகால உலக வரலாற்று நூல்களை ஆராய்ந்தோமானால் அவை அதிகமாக காலனித்துவ ஆதிக்கவாதிகளை பற்றி பெருமையடிப்பதையும் அவர்களின் மதம் சார்ந்த செயற்பாடுகளை ஏகத்திற்கும் புகழ்வதையும் காணலாம். உலகம் முழுதுமே அப்படித்தான். அரச ஆணையின் பிரகாரம், வென்றவர்களின் வரலாறு மட்டுமே மேலெழுந்துபோய் நிற்பதும் தோற்றவர்களின் வரலாறுகள் சத்தமேயில்லாமல் குழி தோண்டிப்புதைக்கப்படுவதும் வராலற்றுப்பழியாய் தொடர்கின்றது. ஒரு சமூகத்தை வெல்ல அல்லது திரிபுபடுத்த போரில் அவர்கள் கையிலெடுக்கின்ற இரண்டு முக்கியமான விடயங்கள் உண்டு. ஒன்று குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. இரண்டாவது அவர்களின் வரலாற்று தொன்மையை பேணிப்பாதுகாக்கும் அறிவாயுதத்தின் மீதான அத்துமீறல்.
ஒரு சமூகத்ததுடன் முரண்பாடு அல்லது பிரச்சினை என்று வருகிறபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எதிர்தரப்பினரின் அறிவைத்திருடுவதிலேயே உலகின் அத்தனை அரசுகளும் குறியாய் இருந்திருக்கின்றன, இருக்கின்றன. இலங்கையிலும் அதிகார மிலேச்சத்தனமும் அடக்குமுறைகளும் சிங்களப்பகுதிகளில் இருந்து தமிழ்பகுதிகள் மீது கொட்டப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் தமிழர்களின் அறிவுப்பொக்கிசமான யாழ்ப்பாண பொதுநூலகமும் ஆசிய நாடுகளில் அது கொண்டிருந்த முக்கியத்துவமும் சிங்களவர்களின் கண்ணை உறுத்தத்தொடங்கியது. தமிழர்களின் இருப்பை அழிப்பதொன்றே தார்மீக நெறி என்ற வெறியில் ஊறியிருந்த அவர்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமிழர்களின் கிளைகளை வெட்டுவதற்கு பதில் ஒரேயடியாய் வேரோடேயே வெட்டிச்சாய்த்துவிட திட்டம்தீட்டினார்கள். பலன், 1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் 1ஆம் திகதி யாழ்நகரின் மையப்பகுதியில் இருந்த, யாழ் பொலிஸ் நிலையத்திற்கு மிகமிக அருகாமையில் இருந்த, யாழ்ப்பாண பொது நூலகம் பெரும்தீயில் எரிந்துசாம்பலாகிக்கொண்டிருந்தது.
கல்விக்கருவூலம் – யாழ் பொதுநூலகம்
இலங்கையில் அன்னியர்கள் வருகைக்கு முன்பிருந்தே அறிவைப்பெருக்குதல் கற்றுக்கொடுத்தல் செயற்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும் அது ஒரு கட்டமைக்கப்பட்ட ஒழுங்குமுறையில் இருந்திருக்கவில்லை. அதன்பின் வரிசையாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என இலங்கையை கைப்பற்றிய அத்தனை வெளிநாட்டவரும் கூட வியாபாரநோக்கிலும் தமது மதத்தைப்பரப்புதல் என்பதிலுமே குறியாயிருந்தனர். அதற்காக அவர்களால் உருவாக்கபட்ட பாடசாலைகளிலும் நிறுவனங்களிலும் தமக்கு தேவையான புத்தகங்களை பேணிப்பாதுகாத்து வைத்தனரே தவிர, அவை பொதுவாக எல்லாப்பிரிவு மக்களும் சமமாக இலவசமாக பாவிப்பதற்கு ஏற்ற வகையில் இருந்திருக்கவில்லை. இந்நிலையில் சுதேசியத்தை பாதுகாக்கவும் சைவ சமயத்தை ஊக்குவிக்கவும் என பல முயற்சிகள் இங்கிருந்த சுதேசிகளால் முன்னெடுக்கப்பட்டன. 1915 ஆம் ஆண்டு காரைநகரில் தோற்றம் பெற்ற சைவமாகசபையில் ஒரு சிறிய நூலகம் (1926) பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து யாழ்ப்பாண மக்களிற்கான ஒரு அறிவுத்தேடலாக, அனைவரிற்கும் இலவசமாக சேவை வழங்கக்கூடிய ஒரு நூலகத்தின் தேவை குறித்து சிந்தித்த, யாழ்ப்பாண நூலகத்தின் பிதாமகன் திரு க.மு செல்லப்பா அவர்கள் விதைத்த விதை பின்னாளில் யாழ்ப்பாண பொதுநூலகமாக நிமிர்ந்து நின்றது.
பல ஆலோசனைக்கூட்டங்கள், பகிரங்க கலந்துரையாடலிற்கான அழைப்புக்கள், நிதிசேகரிப்பு விளம்பரங்கள், நூல்கள் சேகரிப்பு, புத்தக அன்பளிப்பு, தளபாட வசதிகள், சந்தா முறைகள், கட்டிட தேர்வுகள் என பார்த்தப்பார்த்து ஒவ்வொன்றாக செய்து கடைசியில் தமிழ் மக்களின் அயராத கூட்டுறவாலும் முயற்சியாலும் அவர்களிற்கென ஒரு பொதுநூலகம் தோற்றம் பெற்றுவிட்டது. ஆரம்பத்தில் மழவராயர் கட்டடத்தில் சிறிய அளவிலேயே செயற்பட்டு வந்தது. அதன் பின் யாழ்ப்பாண மாநகர சபையின் தோற்றம் பொதுநூலகத்திற்கு இன்னும் பலம் கொடுத்தது. நூலகத்தின் சேவையை பரவலாக்குவதன் பொருட்டு நூலகத்திற்கென்று தனியான கட்டடத்தொகுதியொன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்று தீட்டப்பட்டு 1954 ஆம் ஆண்டில் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 22 000 டொலரும் இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தால் 10,000 ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய நன்கொடையிலும் வெளிநாட்டு உதவிகளாலும அதன் பின் கட்டடம் மளமளவென்று வேகமாக வளரத்தொடங்கியது. 1958ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 17 ஆம் திகதியன்று இக் கட்டிடத்திற்கு யாழ்ப்பாண பொதுசன நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டு 1959ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11ஆம் நாள் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. மக்கள் சந்தோசத்தில் திளைத்தார்கள்.
புதிய நூலக கட்டடத்திற்குள் ஆரம்பத்தில் ஏறத்தாழ 16,000 நூல்கள் பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்தன. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளிவந்த பல சஞ்சிகைகள் இருந்தன. பல அரும்பெரும் பழைய நூல்களும் சுவடிகளும் பக்குவப்படுத்தப்பட்டிருந்தன. பின்நாட்களில் பல தமிழ் அறிஞர்களும் பண்டிதர்களும் தம்மிடம் இருந்த பழம்பெரும் புத்தகங்களை தாமாகவே முன்வந்து நூலகத்தில் சேர்ப்பித்தார்கள். அறிவை தேடிக்கண்டடைதல் பரவலாக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் தமது கல்விச்செயற்பாடுகளிற்காகவும் ஆய்வுநடவடிக்கைகளிற்காகவும் வந்து நூலகத்தை பயன்படுத்தி சென்றார்கள். அந்த குறுகிய காலப்பகுதியிலேயே மக்களின் உற்சாகமான பங்களிப்பும் அறிஞர்களின் விடாமுயற்சியும் சேரந்து யாழ் பொதுநூலகத்தை தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியமாக மிளிரச் செய்தது.
கொளுத்திய தீயில் வெளிப்பட்ட கோரமுகம்.
1981 ஆம் ஆண்டு. யூன் மாதத்தின் முதல் நாள். நள்ளிரவை நெருங்கும் நேரம்… திடீரென யாழ் நகரின் மையப்பகுதியில் இருந்த யாழ்ப்பாண பொதுநூலகம் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. நூலகத்திற்கு இடப்பக்கமாக ஏறத்தாழ 500 மீற்றர் இடைவெளியில் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் கடமையில் இருக்கிறார்கள். நூலகத்திற்கு பின்புறமாக துரையப்பா விளையாட்டரங்கில் யாழ்ப்பாண அபிவிருத்திசபைதேர்தலை கண்காணிக்கவென தென்னிலங்கையிலிருந்து வந்திருந்த விசேட பொலிஸார் தங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே நடைபெற்ற சிறு அசம்பாவிதம் ஒன்றை காரணம் காட்டி ஊரடங்கு உத்தரவென்றை பொலிஸார் பொதுமக்களிற்கு வழங்கியிருந்தார்கள். அதனால் அரச அல்லது பொலிஸ் அனுமதியின்றி யாரும் வெளியில் நடமாடமுடியாது. அப்படியானதொரு சூழ்நிலையில், இறுக்கமான பாதுகாப்பு வளையத்தினுள் இருந்த பொதுநூலகம் தீவைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. அந்த பாதுகாப்பு வலயத்தினுள்ளிருந்த ஆசியாவின் அறிவுக்களஞ்சியம் அங்கிருந்த அத்தனை அரும்பெரும் புத்தகங்;களோடு பற்றியெரிந்துகொண்டிருக்கின்ற போது அதை அணைக்க அருகிலிருந்த பாதுகாப்புத்தரப்பினர் யாருமே முன்வரவில்லை என்பது ஒன்றே போதும். அந்த நாசகாரவேலையை யார் செய்தார்கள் என்பதை தெளிவுபடுத்த.
யாழ் நூலகம் எரிக்கப்படுவதற்கு முன்னைய நாளில் பூபாலசிங்கம் புத்தகசாலை, மக்மிலன் புத்தகசாலை, ஈழநாடு பத்திரிகை காரியாலயம் போன்றனவும் பொலிஸாராலும் சிங்கள காடையர்களாலும் தீவைத்து கொளுத்தப்பட்டிருந்தன. அறிவைப் பெருக்கும் இடங்கள் எல்லாம் பார்த்து பார்த்து நாசம் செய்யபட்டன. அந்த தொடர் சங்கிலித்திட்டம் கடைசியில் யாழ் பொது நூலக எரிப்பில் வந்து நின்று எக்காளமிட்டு சிரித்தது. இரவுப்பாதுகாப்புக் கடைமையில் இருந்த காவலாளியை துரத்திவிட்டு நூலகத்திற்குள் புகுந்த சிங்கள வெறியர்கள் கொஞ்சம் கூட சிந்திக்காமல் புத்தகங்களின் மேல் நெருப்பை கொட்டினர். புத்தகங்களில் பற்றிக்கொண்ட தீ ஒவ்வொரு பகுதியாக பரவி மொத்த நூலகமுமே நெருப்புப்பந்தாக எரியத்தொடங்கியது. நகரின் மையத்தில் கரும்புகை சூழ்ந்தது. இது எதையுமே கருத்திற்கொள்ளாத பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். விடயத்தை கேள்விப்பட்ட யாழ் நகர முதல்வர் தமது தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்திற்கு உடனே அனுப்பிவைத்தார். ஆயினும், அவர்களை இடைமறித்த பொலிஸார் ஏற்கனவே இருக்கின்ற ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி அவர்களை அங்கு செல்லவிடாது தடுத்துவிட்டனர். கல்விக்கருவூலமாக திகழ்ந்த அந்த கட்டடம் வெறும் கறுப்புச்சுவாலையால் மூடியிருந்தது.
ஆசியாவின் அறிவுக்களஞ்சியம் இரவோடிரவாக அழிக்கப்பட்டு விட்டது. கிடைத்தற்கரிய பல ஆதி நூல்கள் இருந்த அடையாளமே தெரியாமல் சாம்பலாகிவிட்டன. பல அதி உயர் உசாத்துணை நூல்கள் நெருப்புச்சுவாலையில் வெந்து போயின. தொண்ணூற்றேழாயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள் ஒரு நொடிப்பொழுதிற்குள் இனி இல்லை என்றாயிற்று. சிறுகச் சிறுக சேர்த்து, ஒரு சமுதாயம் அத்தனை அங்கத்தினரும் மொத்தமாக முயற்சித்து உருவாக்கிய ஒரு அதிபுனித இடம் ஆடைஉருவப்பட்டு அம்மணமாகக்கிடந்தது. வருத்தம் என்னவென்றால் தென்பகுதிமக்களுமே இங்க வந்து தம் அறிவுப்பசியை தீர்த்துப்போனார்கள். அது யாரிற்கும் ஓரவஞ்சனை செய்யாதது. யாரிற்கும் வெறுப்பை விதைக்காதது. ஆனால் அதே தென்னிலங்கை சிங்கள வெறியர்களும் பாதுகாப்பு தரப்பினரும் சேர்ந்து செய்த இந்த வெறியாட்டத்தால் தெற்காசியாவே ஒரு பெரும் புதையலை இழந்துவிட்டது. நாளும பொழுதும் தான் சென்று தரிசித்த அத்தனை பொக்கிசங்களோடும் பற்றியெரிந்துகொண்டிருக்கும் நூலகத்தை பார்த்த அதிர்ச்சியில் மொழியியல் வல்லுனர் (33 மொழிகள்) கலாநிதி சிங்கராயர் தாவீது அவர்கள் மாரடைப்பால் இறந்தார். சிங்கள காடையர்களின் இந்த அறமற்ற அக்கிரமமான காட்டுமிராண்டித்தனமாக செயலை கேள்விப்பட்டு வடபகுதி முழுதும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது.
அரும்பாடுபட்டு சேர்த்த புத்தகங்களையும் அரை நூற்றாண்டு கால விலைமதிக்க முடியாத சேவையும் தன் கோரக்கரத்தால் நெரித்துப்போட்டிருந்தது சிங்கள தேசம். வடபகுதி தமிழர்களின் அறிவை அழிப்பதையே குறியாக கொண்டிருந்த தேசம். சிங்களம் மட்டும் சட்டம் மூலம் மொழியுரிமை மீறலையும் தரப்படுத்தல் சட்டம் மூலம் கல்வித்தடையையும் கொண்டுவந்த தேசம். அடுத்த படியாக அறிவுக்கிடங்கை எரித்து அழித்துவிட்டிருக்கிறது. வரலாற்றை மறைப்பதையும் வளர்ச்சியை தடுப்பதையும் குறியாக கொண்டு சொந்த நாட்டு மக்களையே கொன்றொழிக்கும் அரசு, இந்த வன்முறை தொடர்பில் வழக்கம் போலவே மொளனியாக இருந்தது.
வரலாற்றுக்கடமை.
எரிந்து கிடந்த சாம்பல் மேட்டை கூட்டியள்ளி அதிலிருந்து புதிதாக மீள முளைக்க திடம் கொண்டது யாழ் நூலகம். மறுபடி எல்லாமே முதலிலிருந்து தொடங்கவேண்டும். தொடங்கினார்கள். எரிக்கப்பட்ட பழம்பெரும் நூல்கள் திரும்ப பெறமுடியாதவை தான். ஆனால் மனதின் நம்பிக்கை மீளவும் துளிர்விட்டது. அறிஞர்பெருமக்கள், உதவும் நல்லுள்ளங்கள், பொதுமக்கள் உதவியோடு மீளவும் எழுந்தது அது. மறுபுறும், இலங்கையில் நடக்கும் காட்டுமிராண்டித்தனமான அரச நிர்வாகத்தின் முகம் வெளியுலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதன் தாக்கமாக ‘புத்தகமும் செங்கல்லும்’, ‘வெண் தாமரை’ இயக்கங்கள் மூலம் பழைய வடுவை மறைத்து புதிய உருவைக்கொடுக்க ஆளும்தரப்பு முயற்சித்தது. புதிய கட்டடம், புதிய திட்டங்கள், புதிய நூல்கள் எல்லாமும் வரிசைப்படுத்தப்பட்டன. அதற்குள்ளும் ஆயிரம் சிக்கல்கள், இழுபறிகள், பிரச்சினைகள். ஆனாலும் என்னதான் நடந்தாலும் நமது நூலகத்தை மீளவும் இயங்கவைக்க வேண்டும் என்பதில் மக்கள் குறியாக இருந்தார்கள். அதனால் அத்தனை தடைகளையும் தாண்டி இன்று எம் சமூகத்தின் அறிவின் மையப்புள்ளியாக மறுபடி யாழ் பொதுநூலகம் மறுபடி எழுந்துநிற்கின்றது.
இதோ இப்போது நாம் பார்க்கின்ற, நன்கு உயர்ந்த மாடிக்கட்டத்தின் பின்னால், வெள்ளை சுவர்ப்பூச்சுகளிற்கு பின்னால், ஒரு அரச பயங்கரவாதத்தின் காட்டுமிராண்டித்தனம் ஒளிந்திருக்கிறது. தமிழர்கள் அறிவில் முன்னேறிவிடக்கூடாதென்ற படு கேவலமான ஒரு அசிங்க எண்ணம் மறைந்திருக்கிறது. எம் முன்னோர்களின் செழுமைப்படுத்தப்பட்ட இலக்கிய வடிவங்களையும் அவை கூறும் வாழ்வியல் முறைகளையும் ஆதாரமாக கொண்டு தமிழர்களை நாகரிகமடைந்த இனக்கட்டமைப்பாக, இந்த நாட்டின் சொந்தக்குடிகளாக உறுதிப்படுத்திவிட ஒரு சிறு இடம்கூட விட்டுவிடக்கூடாதென்ற காழ்ப்புணர்வு ஒட்டிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தாம் செய்த இந்த அறிவுக்கொலையை ஒரு புதிய கட்டடத்தின் மூலம் சரிக்கட்டி ஏமாற்றிவிடலாம் என்ற ஏளனம் நிறைந்திருக்கிறது. அதன் மாய வெளிப்பாடு தான் இன்று தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்களவர்களிற்கு யாழ் நூலகம் ஒரு காட்சிப்பொருளாக காட்டப்படுவது. சிலவேளை இனிவரும் எமது சந்ததியும் கூட அதன் வளர்ச்சி வேகத்தில், யாழ் பொது நூலகத்தின் பழைய வேதனைகளையும் வடுக்களையும் கண்டுகொள்ளத் தவறிவிடலாம்.
ஆனால், கல்விக்கூடத்தையே களங்கப்படுத்திய அந்த சாத்தான்களிற்கு காலம் காலமாக நாம் திருப்பி செய்யவேண்டியதெல்லாம் ஒன்றேயொன்று தான். கல்வியின் வழி அவர்களால் நினைத்துக்கூடப்பார்க்க முடியாத உயரத்தை தொடுவது, அதன்வழி சமூகத்தை முன்னோக்கி கூட்டிச்செல்வது.