featued_image

முள்ளிவாய்க்கால்: (தமிழ்த்) தேசிய மையம் | எழில்

auhtor

on
2020-06-05


By :
Ezhil


634 Views

மே 18 சிறிலங்காவில் ஒன்றுக்கொன்று முரணானவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாள். கடந்த 11 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஏதோவொன்றைக் காரணங்காட்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்த சிங்கள அரசு இவ்வருடமும் கொரோனாவைக் காரணம் காட்டிநினைவேந்தலைத் தடுக்க முற்பட்டது அல்லது பிளவுகளை உருவாக்க முற்பட்டது. இந்தத் தடை தொடர்ந்துகொண்டேயிருக்கப் போகின்றது, இதற்கான ஒரு சில காரணங்களை ஆராய்வோம்.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரால் கொல்லப்பட்ட ஏறக்குறைய 60 லட்சம் யூதர்களை இன்றும் மறுக்கின்ற ஒருசாரார் உள்ளனர். அதிலே முக்கியமானவர் David Irving என்கின்ற வரலாற்றாய்வாளர். இவரை சுற்றிய வட்டம் புதிய அங்கத்தவர்களுடன் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. யேர்மன் அரசு யூதர்களைக் கொன்றர் Holocaust (யூத இனப்படுகொலை) என்கின்ற இனப்படுகொலையை ஏற்றுக்கொண்ட பின்னரும் ஒஸ்ரியா போன்ற ஒரு சில நாடுகள் Holocaust மறுப்பை குற்றமாக அறிவித்த நிலையிலும் இந்த மறுப்புத் தொடர்கின்றது. 2006ல் யூத இனப்படுகொலையை மறுத்த குற்றத்திற்காக David Irving கைதுசெய்யப்பட்டு சிறையிலிடப்படுகின்றார். நூறு வருடங்கள் கடந்த பின்னரும் துருக்கி ஆர்மேனிய   படுகொலையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறாக அரசுகளும், பல்வேறு குழுக்களும், தனிநபர்களும் படுகொலைகளை ஏற்றுக்கொள்ளாத கலாசாரம் மானிட குலத்திற்குப் புதியதல்ல, மறுத்தல் பொறுப்புத் துறத்தலின் உத்தியாகக் கூட இருக்கலாம். இது சிறிலங்காவிற்கும் பொருந்தும்.

மே 18 2009 க்குப் பின்னர், சிங்கள அரசு வெற்றி-தோல்வி சொல்லாடலை, சிறிலங்கா அரசியல் சூழலில் சிங்கள-பௌத்தத் தேசிய சொல்லாடாலாக அறிமுகம் செய்தது. வெற்றி-தோல்வி சொல்லாடல் உளவியல் போர் சார்ந்த ஓர் உத்தி. தமிழர்களைத் தோல்வியடைந்தவர்களாகக் கட்டமைப்பதன் மூலம் தோல்வி மனப்பான்மையை உருவாக்கித் தமிழர்களின் கூட்டு அறவலிமையை சிக்கலுக்குட்படுத்துவது சிங்கள அரசின் நோக்காக இருந்துவந்துள்ளது. எந்தவொரு மக்கள் விடுதலைப் போராட்டமும் தோல்வியைச் சந்தித்ததாக சொல்லமுடியாது, போராட்ட வடிவங்கள் இழப்புக்களைச் சந்திததிருக்கலாம். இழப்புக்களைத் தோல்வியாக மொழிமாற்றம் செய்யமுடியாது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான தடையானது மூக்கிருக்கு மட்டும் சளி இருக்கும் கதை போன்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வெறுமனே ஒரு நினைவேந்தல் சடங்கு மட்டுமல்ல அது பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத்தளத்தில் தமிழர்களின் தேசிய மையமாக உருவாகின்றது. சிங்கள அரசினுடைய பயங்கரவாதப் போரின் வரலாற்றுச் சொல்லாடல்களை மறுத்து அதற்கெதிரான எதிர்க்கும் சக்தியை மையப்படுத்துகின்ற வெளி. சிங்கள அரசு மனிதாபிமான யுத்தத்தில் அப்பாவி மக்கள் எவரையும் தனது படைக்கட்டுமானம் கொல்லவில்லை என்ற பாரிய அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுத்தபோது முள்ளிவாய்க்காலிலிருந்து மீண்ட சாட்சியங்கள் கருத்துப்படியும், குறிப்பாக முன்னாள் மன்னார் ஆயரின் கணிப்பின்படி 146,679க்கு மேற்பட்ட மக்களின் கதி இன்று வரைக்கும் என்னவென்று தெரியாது, அதைவிட இறுதிப் போரின் பின்னர் கொல்லப்பட்டோர் எத்தனை ஆயிரம் என்ற புள்ளிவிபரம் யாரிடமும் இல்லை. சிங்கள அரசின் மறுப்பை முள்ளிவாய்க்கால் கட்டவிழ்க்கின்றது. சிங்கள அரசின் மனிதாபிமானப் போரை முள்ளிவாய்க்கால் கட்டவிழ்த்துத் தமிழ் மக்களுக்கொதிரான போர் என முள்ளிவாய்க்கால் சாட்சியங்களுடன் கூறுகின்றது.

ஆகக் குறைந்தது போர்க்குற்றம், மானிடகுலத்திற்கெதிரான குற்றங்கள் நடந்திருக்கலாம் எனஐ.நா.வும் ஏனைய மனிதஉரிமை அமைப்புக்களும் கோருகின்றபோது முள்ளிவாய்க்கால் – இனப்படுகொலை நடந்தேறியது எனக் கோருகின்றது. இனப்படுகொலை  தமிழ் இனத்தின் அடையாளத்தை மையமாகக் கொண்டு அரங்கேற்றப்பட்டது என்பதைத் தெளிவாகக் கட்டமைக்கின்றது. தமிழர்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக (இன அடையாளம்) கொத்துக் குண்டுகளாலும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்தும் சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவித்ததை சாட்சியங்களோடு முள்ளிவாய்க்க்கால் கூறிநிற்கின்றது. மனிதாபிமானப் போரில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் எதற்கு? சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? வலிந்து இடப்;பெயர்த்தலை சிங்கள அரசு எவ்வாறு இனப்படுகொலையின் ஆயுதமாகப் பயன்படுத்தியது? கொல்லப்பட்ட மக்களின் இறுதி எச்சங்களுக்கு என்ன நடந்தது? ஆங்காங்கே மனித எலும்புக்கூடுகள் வெளிவரும் போதெல்லாம் ஏன் அவை பொலிசாரால் அப்புறப்படுத்தப்படுகின்றன? போன்ற இன்னும் பலகேள்விகளைக் கட்டமைத்துத் தமிழர்கள் என்பதற்காக இன அடையாளத்தினால் முள்ளிவாய்க்காலிலும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களில் நடந்தேறிய படுகொலைகளையும் அதன் குற்றவாளிகளான சிங்கள தேசத்தையும், சிங்களதேசத்தின் ஆணிவேரான சிங்கள-பௌத்தத் தேசியவாதத்தின் கட்டமைப்புக் கொண்டுள்ள தமிழர்க்கெதிரான உள்நோக்கத்தையும் முள்ளிவாய்க்கால் சொல்லிக்கொண்டேயிருக்கப் போகின்றது.

சிங்கள-பௌத்தத் தேசியவாதத்தின் வல்லாதிகாரத் தன்மை ஒரு போதும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத்தரப் போவதில்லை. சிங்கள-பௌத்தத் தேசியவாதம் தமிழர்களை சிங்கள-பௌத்த இருப்புக்கெதிரான எதிரிகளாகக் கட்டமைக்கின்றது இவ்வாறான எதிரிக் கட்டமைப்புத் தமிழர்களின் மீது போர் தொடுக்கப்படலாம் அப்போர் நீதியான போராகக் கருதப்படும் எனப் போருக்கான நியாயாதிக்கத்தன்மையையும்,  அற ஒழுக்கத்தையும், சட்டபூர்வத்தன்மையும் வழங்குகின்றது. இக்கட்டமைப்புக்கள் எல்லாவற்றையும் முள்ளிவாய்க்கால் சிக்கலுக்குட்படுத்துகின்றது. இனப்படுகொலையின் உச்சமான முள்ளிவாய்க்கால் சிங்கள-பௌத்த வல்லாதிக்கத் தேசியவாதம், தமிழர்களை அவர்களின் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்கின்ற உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றது. ஏனெனில் சிறிலங்கா சிங்கள-பௌத்தர்களுக்கானது.

இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசுடன்,  இனப்படுகொலை மனநிலைகொண்ட அல்லது ஒரு இனத்தைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அதன் இன அடையாளத்தின் அடிப்படையில் அழிக்கும் நோக்குடன் கட்டமைக்கப்பட்டுள்ள சிங்கள-பௌத்த ஏகாதிபத்திய தேசியவாத அரசுடன் அல்லது அவ் அரசின் கீழ், அழிக்கப்படுகின்ற இனம் வாழ முடியாது. இச்சந்தர்ப்பத்தில் தேசமாகத் தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் அழிக்கப்படுகின்ற இனத்திற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று பிரிந்துசெல்வது,  இரண்டாவது பிரிந்துசெல்வது சாத்தியப்படாத சூழலில் தேசங்கள் ஒன்றாக வாழுகின்ற அரசியல் சூழலை உருவாக்கி சமஸ்டி முறை சனநாயகத்தை நோக்கி நகர்வது.

தேசங்கள் ஒன்றாக வாழ்வதற்கான சூழலை ஒற்றையாட்சிமுறை வழங்கப்போவதில்லை. சிங்கள-பௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்தின் இருப்பு ஒற்றையாட்சி முறையில் தங்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் முள்ளிவாய்க்கால் மீயுயுர் இனப்படுகொலைக் கட்டமைப்பு சிங்கள தேசத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலைக் கட்டவிழ்க்கின்றது. முள்ளிவாய்க்கால் மையத்தை சூழ்ந்த இனப்படுகொலை அல்லது மையங்கொண்ட நிகழ்வுகள் எல்லாமே சிங்களதேசம் கட்டமைக்கின்ற தேசத்தின் கட்டுமானத்திற்கெதிரான இன்னொரு தேசக்கட்டுமானத்தை முன்மொழிந்துகொண்டேயிருக்கப் போவது. ஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பின் முள்ளிவாய்க்கால் அரசியல் வெளியில் தமிழ்த்தேசியத்தின் மையம்.

முள்ளிவாய்க்கால், ஆயுதம் மௌனிக்கப்பட்ட அரசியல் வெளியில் தமிழினத்தின் மிகப்பெரிய ஆயுதம். தமிழ்த் தேசியப் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி இனப்படுகொலையை உத்தியாகப் பாவித்து தமிழ்த்தேசக் கட்டுமானமுனைப்புக்களை முன்னெடுக்க முள்ளிவாய்க்கால் வழிவகுக்க வேண்டும். சிங்கள தேசம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சட்டரீதியாக அங்கிகரிப்பது தமிழினப் படுகொலையை அங்கிகரிப்பதாகும். இனப்படுகொலையை ஏற்றுக்கொள்வது சிங்கள அரசுக்குத் தமிழினத்தை அழிக்கின்ற உள்நோக்கம் சிங்கள-பௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்தில் உள்ளியல்பாயிருக்கின்றதை ஒத்துக்கொள்வதாகும். இனஅழிப்பு உள்நோக்கத்தைக் கொண்டுள்ள அரசுடன் அல்லதுஅரசின் கீழ் அந்த இனம் வாழமுடியாத சூழல் அந்த இனத்தின் சுயநிர்ணயகோரிக்கையைத் தமிழர்கள் தேசமாகக் கட்டமைக்கப்பட்டநிலையில் ஏற்றுக்கொள்ளவேண்டிய நியதிக்குள் தள்ளப்படுதலாகும்.

முள்ளிவாய்க்காலை மையமாகக் கொண்டு தமிழர்கள் உருவாக்ககுகின்ற அல்லது கட்டமைக்கின்ற இனப்படுகொலைக் கோரிக்கை தமிழினத்தின் கோரிக்கை. அந்தக் கோரிக்கைக்கான குரலை உரத்து அழுத்திச் சொல்லவேண்டிய நாள் தான் மே 18. முள்ளிவாய்க்கால் தேசிய மையத்தைச் சூழ கட்டப்படுகின்ற இனப்படுகொலைக் கோரிக்கை தமிழர்களின் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கின்றது. முள்ளிவாய்க்கால் தேசியமையத்தை சிக்கலுக்குட்படுத்துகின்ற முயற்சிகள் எல்லாமே தமிழர்களே தமிழர்களின் தலையில் மண் அள்ளிப்போடும் ஒரு பொறி.

ஒவ்வொரு இனப்படுகொலையுமே தனித்துவமானது. இந்தத் தனித்துவத்தை வெளிக்கொணர்வதற்குரிய   பிரதிநிதித்துவ ஊடகத்தைத் தமிழினம் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். தமிழினப் படுகொலை வெறுமனே மனிதக் கொலைகளோடு தொடர்புபட்டதல்ல. கலாச்சார இனப்படுகொலை, பொருளாதார இனப்படுகொலை எனப் பரந்தபரப்பை உள்ளடக்குகின்றது. யாழ்ப்பாண நூலகத்தின் எரிப்பும் கூட இனப்படுகொலையின் ஓர் அங்கம்தான்.

தமிழினப் படுகொலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகமாக வரலாற்றியலை மட்டும் கொள்ளமுடியாது. எண்கள் தொடர்பான மொழி மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தலை நிர்ணயம் செய்யமுடியாது. கலாசார நினைவுத்திறத்தில் உள்வாங்கப்பட்ட நாடகம், பாடல்கள், கதைகள், திரைப்படம், ஓவியம், உளவியல் உண்மைகள் ஏன் பாதிக்கப்பட்டவர்களின் ‘அமைதியும்’’ (Silence) அடக்குமுறைக்குள்ளிருக்கும் ஓர் இனத்தின் மிகப் பிரதான ஊடகமும் கூட. அமைதியின் மொழியை எவ்வாறு ஓர் ஊடகத்திற்குள் மாற்றுவது என்பது தமிழினப்    படுகொலை பிரதிநிதித்துவத்தில் மிகப் பிரதான பங்காகும்.

முள்ளிவாய்க்கால் தேசியமையம் சமபல கட்டமைப்பை உருவாக்கிப் பிரயோகிக்கின்ற அழுத்தமே சிறிலங்காவை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்கும். இன்று எம்முன்னே உள்ள கேள்வியாக இருப்பது தமிழர்கள் நாங்கள் எவ்வாறு தமிழினப்படுகொலையின் தனித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முள்ளிவாய்க்கால் தேசியமையத்தை சூழ சமபலத்தைக் கட்டமைப்பது. முள்ளிவாய்க்கால் மைய சமபல கட்டமைப்பு அமெரிக்க-ஐ.நா, மேற்குலகமைய, சீனாமைய, தெற்காசியாவில் கோலோச்சமுயலும் இந்தியமைய பூகோள  ஒழுங்கிற்கு எதிரானது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.

Our Facebook Page

Archives