featued_image

இலங்கை : கொரோனா தின்னும் மனிதவுரிமைகள் | ஜெரா

auhtor

on
2020-12-10


By :
Jera Thampi


498 Views

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். “மனித உரிமைகளுக்காக மீண்டெழுந்து திடமாதல்” என்ற கருப்பொருளில் இவ்வருட மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

2019 ஆம் ஆண்டில் சீனாவின் வுகான் மாகாணத்தில் கொரோனா அறிமுகமாகியிருப்பினும், 2020 ஆம் ஆண்டிலேயே அது உலகப் பரவலாகியது. உலகம் முழுமைக்குமான பொதுப் பிரச்சினையாக கொரோனா இந்த ஆண்டே மாறியது. மனிதர்களைப் பார்த்து பயந்து ஓடவும், தனித்தனியாக மனிதர்களைப் பிரித்துப் பார்த்ததுமான நிலைமையை இந்த ஆண்டு ஏற்படுத்தியது. இந்தச் சூழலில்தான் மனித உரிமைகள் விடயங்கள் குறித்து அதிக அக்கறை செலுத்த வேண்டிய தேவையுணரப்படுகிறது. சக மனிதனின் உரிமைகள் மீது மதிப்பும், நம்பிக்கையும் கொண்டு ஆளை ஆள் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சீனாவைத்தவிர உலக மக்கள் அனைவருமே நொடிந்துபோய் இருக்கின்றனர். அதற்குப் பொருத்தமாகவே இவ்வருட மனித உரிமைகள் தினத்திற்கான கருப்பொருளும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தில் இலங்கை எவ்வாறு முன்னேறியிருக்கிறது என்பதையே இக்கட்டுரை பதிவுசெய்கிறது.

இலங்கையின் முதலாவது கொரோனா நோயாளர் 27.01.2020 இல் அடையாளம் காணப்பட்டார். சீனப் பெண்ணான இவர் விரைவாகவே குணமடைந்து நாடுதிரும்பினார். அதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்து 10.03.2020 அன்று இலங்கையின் பிரஜையான (52) ஒருவர் முதலாவது கொரோனா உள்நாட்டுத் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அன்றிலிருந்து கொரோனா குறித்த பரபரப்பான செய்திகளும், நாடு தழுவிய முடக்கங்களும் தொடர்ந்தன. 05.08.2020 அன்று  நாடாளுமன்றத் தேர்தல் நிறைவுறும்வரை நாட்டு மக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்து சில நாட்களிலேயே “பயங்கரவாதப் பிரச்சினையெனில் அதனை நான் பார்த்துக்கொள்வேன். இது சுகாதாரப் பிரச்சினை. எனவே பொதுமக்கள்தான் ஒத்துழைத்து தத்தம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்ற சாரப்பட உரையாற்றினார் இலங்கையின் ஜனாதிபதியாகிய கோட்டபாய ராஜபக்ச. இதற்குப் பிறகு இலங்கை வாழ் மக்கள் தம் பாதுகாப்பை இயலுமானவரைக்கும் தாமே உறுதிப்படுத்திக்கொண்டு அன்றாட கடமைகளை நிறைவேற்றிவருகின்றனர். சகலவிதமான சவால்களையும் தனித்து நின்று தாங்குகின்றனர்.

நோயாளிகளுக்கான உரிமை

இலங்கையில் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியதாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட நோயாளியின் நிழற்படம்

கொரோனா குறித்து இலங்கை வாழ் மக்களிடம் அதீத பயப்பீதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தனிமைப்படுத்தல் பற்றிய “புரளி” மிக மோசமானவை. “தனியறையில் அடைத்து வைப்பார்களாம்”, “கட்டிலோடு சங்கிலியால் கட்டிவைப்பார்களாம்” போன்ற “கதைகள்” சாதாரணமாக உலவுகின்றன. இதனால் கொரோனா தொற்று குறித்த பயப்பீதி மேலோங்கியிருக்கிறது. அதனாலேயே கொரோனா நோயாளர்கள் மருத்துவமனைகளில் இருந்து தப்பியோடுகின்றனர். அவ்வாறு தப்பியோடும் நோயாளர்களைத் தேடிப் பிடித்தல் என்பது “கைது சம்பவமாகவே” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவரைத் தேடிக் களைத்த பாதுகாப்புத் தரப்பினர், அவரின் புகைப்படத்தை ஊடகங்களில் விளம்பரப்படுத்தி, இவரைக் கண்டால் இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் அளவிலேயே, தப்பிச் செல்லும் கொரோனா நோயாளிகள் குறித்த செய்திகள் வெளியிடப்படுகின்றன. எனவே ஒரு பொது நோய்ப்பரவல் பற்றிய போதிய விழிப்புணர்வின்மையால் ஏற்பட்டுள்ள அச்சவுணர்வின் விளைவுகளுக்கு அரசு கொடுத்திருக்கும் தண்டனையானது பயங்கரமான கைதிக்குரியது. நொடிந்த நோயாளிக்கானதல்ல. ஆக, நோயாளி தனக்குப் பாதுகாப்பானது என நம்பும் மருத்துவமனை இங்கு அவருக்கு அச்சம் தருவதாக மாறிவிடுகிறது. அவருக்கு கிடைக்கவேண்டிய பாதுகாப்பு சார்ந்த உரிமையை இழந்துவிடுகிறார்.

நினைவேந்தல் உரிமை

யாழ்.செம்மணியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடைவிதித்த பொலிஸார்

2009 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18 ஆம் திகதியை தமிழர்கள் இனவழிப்பு நாளாக அனுஸ்டித்து வருகின்றனர். இலங்கையில் போர் முடிவுற்ற அன்றைய தினத்தை தம் உறவுகள் கொல்லப்பட்ட நாளாக நினைவுகூர்கின்றனர். தம் சமூகத்தில் இருந்து இறந்தவர்களை நினைவுகூர்வது சகல மனிதர்களுக்குமுரிய அடிப்படை உரிமையாகும். ஆனால் இலங்கையில் தமிழர்களுக்குக் கடந்த 11 ஆண்டுகளாகவே அந்த உரிமைகூட மறுக்கப்பட்டுவருகிறது. கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி ஒன்றுகூடினால் கைதுசெய்யப்படுவர் என்ற பாதுகாப்பு அறிவிப்பின் கீழ், நினைவேந்தலுக்குத் தயாரானவர்களும் அச்சுறுத்தப்பட்டனர். மீறியும் நினைவேந்தலை அனுஸ்டித்தவர்கள் மீது கொரோனா பாதுகாப்பு சட்டம் நீதிமன்ற வழக்காகப் பாய்ந்தது. இதே “செக்”தான் வருடாவருடம் நவம்பர் 27 இல் தமிழர்களால் அனுஸ்டிக்கப்படும் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கும் வைக்கப்பட்டது. இத்தனைக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் முகக் கவசம் அணியாமலோ, சமூக இடைவெளியைப் பேணாமலோ, ஏனைய கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களோ அல்ல. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியபோதும் நினைவேந்தல் உரிமை பறிக்கப்பட்டது. சமநேரத்தில் நாட்டின் தெற்குப் பக்கத்தில் பெரும்பான்மையின மக்களுக்கு இந்த சட்டங்கள் எவையும் செல்லுபடியாகவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.

பண்பாடுசார் உரிமை

கொரோனாவினால் இறந்ததாகக் கூறப்பட்டு எரியூட்டப்பட்ட 20 நாள் குழந்தை

ஒருவர் இறந்த பின்னர் அந்த சடலத்தை எரித்தல், புதைத்தல், கங்கையில் வீசுதல் போன்ற நடைமுறைகள் ஆதிகாலம் தொட்டு பண்பாடாகவே பின்பற்றப்பட்டுவருகின்றது. மத நம்பிக்கையுடனும், மறுமை தொடர்பான ஐதீகங்களுடனும் இணைந்த இனம்சார் உளவியலாக இது கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இதனாலேயே கொரோனா தொற்றினால் இறப்பவர்களை அவரவர் மத – பண்பாட்டு நம்பிக்கைகளின்படி புதைக்கவோ, எரிக்கவோ உலக நாடுகள் அனுமதிக்கின்றன. இலட்சம் பேர் இறந்துவிட்ட அமெரிக்காவில் கூட சடலங்கள் புதைக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையின் நிலைமையோ துயரமானது. இறந்த தம் உடலங்களை எரிக்கக்கூடாது என்ற நம்பிக்கையை பண்பாடாகவே பின்பற்றும் முஸ்லிம்களது ஜனாஸாக்கள் எரியூட்டப்படுகின்றன. பிறந்து 20 நாட்களேயான பிஞ்சுக் குழந்தையைக் கூட கொரோனா தொற்றைக் காரணம் காட்டித் தீயில் இட்டு எரிப்பதானது மிகக்குரூரமான மனநிலையின் வெளிப்பாடு. ஏனைய இனங்களின் மத நம்பிக்கைளை கேள்விக்குட்படுத்தும் சர்வாதிகாரச் செயற்பாடு. மூன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழும் நாடொன்றி்ல் இவ்வாறு ஓரினத்தின் பண்பாட்டை மாத்திரம் குறிவைத்து தாக்குவதானது கொவைட் காலத்தில் உச்சம் தொட்டிருக்கிறது. அவர் தம் பண்பாட்டு உரியை பறித்திருக்கிறது.

மருத்துவம் கோரும் உரிமை

மஹர சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளின் பெற்றோர் தம் பிள்ளைகளைப் பார்வையிடக்கோரி பொலிஸார் காலில் விழுந்து கதறியழுகின்றனர்.

தன் வாக்கினால் அதிகாரத்தைப் பெற்ற அரசிடம் நோய் நிலமைகளின்போது தனக்கான மருத்துவத்தைக் கோரும் உரிமை பிரைசைகளாகிய அனைவருக்கும் உண்டு. இந்த நம்பிக்கையில்தான் இலங்கையில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளும் கொரோனா அச்சத்தினாலும், குணங்குறிகளாலும் பி.சி.ஆர் பரிசோதனைகளை அரசிடம் கோரினர். கொரோனா முதல் அலையின்போதே அனுராதபுரம் சிறைக்கைதிகள் தமக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்துமாறு கோரி போராடினர். அது கலவரமாக மாறவே, அப்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கைதிகள் இருவர் கொல்லப்பட, ஆறுபேர் காயமடைந்தனர். கொரோனா இரண்டாவது அலையின்போது மஹர சிறைச்சாலை கைதிகள் மத்தியில் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து தமக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தக்கோரி கைதிகள் சிறைக் கூரைகளில் ஏறிப் போராட்டம் நடத்தினர். அப்போது இடம்பெற்ற கலவரத்தில் 11 கைதிகள் கொல்லப்பட, 117 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட 11 கைதிகளில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஆக, கொரோனா நோயாளிகள் அல்லது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பவர்கள் மருத்துவப் பரிசோதனை கோருவது கூட உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவைத் தரும் என்ற படிப்பினையை இலங்கை வழங்கியிருக்கின்றது.

நீதிகோரும் உரிமை

மட்டக்களப்பில் போராடிய வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளைத் தடுக்கும் பொலிஸார்

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்று இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டக்களப்பில் நீதி கோரிய போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்தனர். அங்கு வருகை தந்த பொலிஸார், உடனடியாகக் கலைந்துசெல்லுங்கள், இல்லையேல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவீர்கள் என மிரட்டியுள்ளனர். இத்தனைக்கும் போராட்டக்காரர்கள் யாரும் முகக்கவசமோ, சமூக இடைவெளியோ பின்பற்றாதவர்கள் அல்ல. இன்றைய நாளிலும் கொரோனா தொற்றை வைத்து நீதி கோரும் உரிமையை தடைசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றவெனில், ஏனைய நாட்களில் அந்தச் சட்டம் சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகளிலேயே கைவைக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?

ஓர் எடுத்துக்காட்டு

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் புதல்வியான துஷாரா விக்ரமநாயக்காவின் சமூகவலைதளப் பதிவொன்று கீழ்வருமாறு அமைந்தது. தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவர், தனக்கு நேர்ந்த உரிமைமீறல் சம்பவங்களைக் பின்வருமாறு பட்டியலிடுகின்றார்.

“நான் ஒக்டோபர் 16ஆம் திகதி இலங்கை வந்தேன். நீர்க்கொழும்பில் உள்ள ஜெட்வின் ப்ளூ ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். எனக்கு முதலாவது பிசிஆர் பரிசோதனை விமான நிலையத்தில் வைத்தும் 2ஆவது பிசிஆர் பரிசோதனை இம்மாதம் ஒக்டோபர் 26ஆம் திகதி ஹோட்டலில் வைத்தும் நடத்தப்பட்டது.

இன்றுடன் (வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 30ஆம் திகதி) 14 நாட்கள் முடிந்து வீடு சென்றிருக்கவேண்டும். ஆனால், நேற்றிரவு (வியாழக்கிழமை) கூறுகிறார்கள்,

பரிசோதனைக்காக உங்களுடைய மாதிரி சரியான முறையில் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்று. மீண்டும் ஒருமுறை பிரைவேட்டில் எடுக்குமாறும் பரிசோதனை முடிவுகள் வரும்வரை இன்னும் 3 நாட்கள் இங்கிருக்குமாறும் சொன்னார்கள். என்னால் முடியாது, அரச வைத்தியசாலை ஒன்றில் பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கூறினேன். இங்கிருக்கும் அனைவரும் தனியார் வைத்தியசாலையில் பரிசோதனை செய்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள், நீங்கள் மட்டும்தான் மறுக்கிறீர்கள் என்று இராணுவத்தினர் கூறுகிறார்கள்.

என்னுடைய மாதிரிக்கு என்ன ஆனது என்று அறிந்துகொள்வதற்காக நான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் பொறுப்பாகவிருக்கும் வைத்தியர் கேணல் இசுறு வீரசேனவை தொடர்புகொண்டு பேசினேன். பிறகுதான் தெரியவந்தது, என்னுடைய மாதிரி உட்பட 10 மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பாமல் பெயர்களை மாத்திரம் அனுப்பிவைத்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவுகள் “No Sample” – “மாதிரி இல்லை” என்று வந்திருக்கிறது. அப்படியென்றால் என்னுடைய சாம்பல் எங்கே என்று கேட்டேன். தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்கள். எங்கிருந்து, யாருடைய மாதிரிகளைத் தேடி பரிசோதனை முடிவுகளைத் தருவார்களோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. அதனால், பரிசோதனை முடிவுகள் வரும்வரை நான் வீடுசெல்கிறேன் என்று அவர்களிடம் கூறினேன். எனது வீடு இந்த ஹோட்டலில் இருந்து 5 நிமிடங்கள் பயணிக்கும் தூரம்தான். நான் வீடு செல்ல முற்பட்டால் கைதுசெய்யப்படுவேன் என்று இராணுவத்தினர் மிரட்டுகிறார்கள். வைத்தியர் உட்பட அனைவரும் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். மருந்துக்குக் கூட சிவில் நபரொருவரை இங்கு காணமுடியவில்லை. இதுவரைக்கும் இந்த ஹோட்டலில் தங்கியிருந்தமைக்காக ரூபா. 175,000 செலுத்தியிருக்கிறேன். விமானப் பயணச்சீட்டு எடுக்கும்போது ஶ்ரீலங்கா எயார்லைன்சுக்கு பிசிஆர் பரிசோதனைக்காக கிட்டத்தட்ட ரூபா 25,000 வரை செலுத்தியிருக்கிறேன். இப்போது அவர்கள், தங்களுக்கு கட்டணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், அங்கு நான் செலுத்திய பணம்?

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் தொலைப்பேசி இலக்கத்தைத் தந்து நேரடியாகப் பேசுமாறு கூறினார்கள். நான் ஏன் அவருடன் பேசவேண்டும்?  நான் விமானத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் படம் பிடித்தார்கள். என்னுடைய பாஸ்போர்ட் படத்தையும் எடுத்தார்கள். தங்களுடைய தனிப்பட்ட மொபைல் போன்களில்தான் இராணுவத்தினர் படம் பிடித்தார்கள். தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் எவ்வாறு இப்படி மொபைல் போன்களில் சேர்த்துவைத்திருக்க முடியும் என்று நான் தர்க்கப்பட, பின்னர் அவர்கள் அவற்றை அழித்துவிட்டார்கள்…”

நாட்டின் பலம்பொருந்திய முன்னாள் அரசியல் தலைமையொன்றின் நிலைமையே இதுவெனில், சாதாரணர்கள் நிலமை?

Our Facebook Page

Archives