featued_image

நீதியற்ற தேவாலயப் படுகொலை | நேர்மியன்

auhtor

on
2020-12-25


By :
Jera Thampi


334 Views

க்களை ஒடுக்கும் ஒரு கருவியாக நீதிமீறலை – அநீதியை அரசுகள் கட்டவிழ்த்துவிடுகின்றன. அத்தகைய அநீதியான செயற்பாடுகள் மூலம் குறித்த இனத்தினரது விடுதலை வேணவாவை அழித்துவிடலாம் எனநம்புகின்றன. அதற்காக அந்த இனத்துள் இருக்கும் புத்தீவிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோரை அநீதியானமுறையில் படுகொலை செய்யப்படுகின்றனர். முட்டாள்தனமான இனக்கூட்டத்தை இலகுவாக ஒடுக்குமுறைக்குட்படுத்தி அடிமைப்படுத்தலாம் என்ற வாதத்தின் அடிப்படையிலேயே இத்தகைய காட்டுமிராண்டித்தனங்கள் நிகழ்ந்தேறுகின்றன”. – தராகி  சிவராம்.

படுகொலையான ஊடகர் தராகி சிவராமின் இந்தக் கருத்தைத் தமிழ் சமூகத்தில் அப்படியே பிரயோகிகப்பட்டிருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் பயணமானது படுகொலைகளின் வழியேதான் நடந்திருக்கிறது. உளப்பூர்வமாகவும், மெய்ஞான ரீதியிலும் தமிழ் தேசிய எண்ணத்திற்கு வலுவேற்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட செயற்பாட்டளர்களுக்கு இக்கதி நடப்பதே வரலாறாக இருக்கிறது. தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் இதற்கு எடுத்துக்காட்டான மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இனத்தின் மீட்பர்களாக மேடைகளில் தோன்றி நெஞ்சிலும், நெற்றியிலும் மறைந்துதாக்குவோரின் சூடுபட்டுத் தம்மை ஆகுதியாக்கியிருக்கின்றனர். வரலாற்றில் கரைந்திருக்கின்றனர்.

இளமைக்காலம்
இந்தப் பொதுவான வரலாற்றுப் பயணத்தில் திட்டமிட்ட ரீதியில் படுகொலை செய்யப்பட்டவர்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம். 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்தார். அவருக்கு மூன்று வயதானபோது பெற்றாருடன் மட்டக்களப்புக்குக் குடிபெயர்ந்தார். அன்றிலிருந்து மட்டு.சென் மைக்கல் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்த இவர் விளையாட்டு, எழுத்து ஆகிய துறைகளில் ஆர்வமிக்கவராகச் செயற்பட்டார். இலங்கையில் 1956 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இன ரீதியான அரசின் புறக்கணிப்புக்களுக்கு மத்தியில் வாழ்ந்தமையால் அதற்கு எதிராகப் போராடும் பண்பை சிறுவயதிலிருந்தே பெற்றார்.

ஜோசப் பரராஜசிங்கம்

ஊடகப் பணியும் சமூகப் பணியும்
பொதுவாக அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயகத் தளத்தில்நின்று குரல்கொடுப்போர், எழுத்து, சமூக செயற்பாடுகள், ஊடகப் பணி போன்றவற்றைத் தெரிவுசெய்வது வழமையானது. ஜோசப் பரராஜசிங்கம்மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நில அளவைத் திணைக்களத்தில் வரைபடவியலாளராகப் பணியாற்றிக்கொண்டே எழுத்து, ஊடகம் ஆகியவற்றிலும் தடம் பதித்தார். தமிழில் சுகுனம் ஜோசப் என்ற புனைபெயரில் சுயாதீனப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கினார். சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும், Sun என்ற ஆங்கில பத்திரிகையிலும் செய்திகள், கட்டுரைகளை எழுதிவந்ததோடு,கிழக்கு மாகாண பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டார்.

அரச பணி ஓய்வும் அரசியல் பணியும்
ஜோசப் பரராஜசிங்கம் அரச சேவையில் சிலவருடங்களே பணியாற்றினார். அரசியல் பழிவாங்கல் ரீதியான இடமாற்றங்கள் அரச பணியிலிருந்து விரைவாகவே ஓய்வைப் பெற்றுக்கொள்ள வழிவகுத்ததென சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு அரசியலில் ஈடுபாடுடையவராகச் செயற்பட்டார். 1956 ஆம் ஆண்டில் இலங்கை தமிழரசு கட்சியில் இணைந்துகொண்ட ஜோசப் பரராஜசிங்கம், 1970 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் தன் கட்சி சார்பில் களமிறங்கிய செ.ராஜதுரையை ஆதரித்தார். சுயேட்சைக்குழு சார்பில் பி.ஆர்.செல்வநாயகமும் போட்டியிட்டார். தேர்தலின் முடிவில் இருவருமே வெல்ல, பி.ஆர்.செல்வநாயகம் அரசமைத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் தாவினார். தாவியதும் ஜோசப் பரராஜசிங்கம் நுவரெலியா மாவட்டத்திற்கு கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றத்தோடு அரச பணிக்கு ஓய்வைக் கொடுத்துவிட்டு, வியாபாரத்தில் இறங்கினார் ஜோசப் என அறியப்பட்ட பரராஜசிங்கம்.

தேர்தல் அரசியல் களத்தில்
1972 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி “இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்” என்ற கோசத்தின் கீழ் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழ் பேரவை ஆகியன இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கின. அந்தக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளராகத் தெரிவானார் ஜோசப் பரராஜசிங்கம். 1989 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட போதிலும், தோல்வியைத் தழுவினார். ஆனாலும், 1990 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து கொல்லப்பட்டதையடுத்து, அவரின் இடத்திற்கு பரராஜசிங்கம் நியமனம்பெற்றார். 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதே கூட்டணி சார்பில் போட்டியிட்டு 43,350 வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரார். நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான
நாளிலிருந்து, அந்தக் காலகட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற இராணுவ – துணைக்குழுக்களின் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராகக் குரல்கொடுத்துவந்தார்.

த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரானார்
2001 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 20 ஆம் திகதி உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஜோசப் பரராஜசிங்கம், அவ்வருடமே இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமி்ழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டபோதும், அதில் தோல்வியைத் தழுவியவர், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பணியோடு நின்றுகொள்ளாது, 2004 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தை (NESOHR) மற்றைய நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரநேருவுடன் இணைந்து ஆரம்பித்தார். இந்தச் செயலகம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அறிக்கைப்படுத்தி வெளியிடும் பணியை செய்யத் தொடங்கியது.

தேவாலயப் படுகொலை
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி நத்தார் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு, நத்தார் தின நள்ளிரவுப் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்காக மனைவியார் சகிதம் மட்டக்களப்பு சென்.மேரி தேவாயலத்திற்கு வருகைதந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம். பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அதிகாலை 01.10 மணியளவில் தேவாலயத்தின் பலிபீடத்தின் வழியாக உள்நுழைந்த ஆயுதக்குழுவினர், அவர்களைக் கண்டதும் தன் வழிபாட்டு இருக்கையை விட்டு எழுந்திருக்க முயற்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொன்றனர். அவரைச் சுட்டுக்கொன்றதும் வானை நோக்கி சுட்டுத்தீர்த்துக்கொண்டு நகர்ந்த துப்பாக்கிதாரிகள் முச்சக்கரவண்டியில் முச்சக்கரவண்டியில் ஏறி, பட்பொடி முகாமை நோக்கி சென்றதாக நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

மாமனிதர் கௌரவிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை அக்காலப் பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பயப்பீதியையும் ஏற்படுத்தியது. பொதுவெளியில் தீவிரமாக அரசியல் பேசுவதை தமிழ் தேசிய அரசியல்வாதிகளே தவிர்க்கும் சூழல் ஒன்று உருவானது. இவ்வாறான நிலையிலும், படுகொலைசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இறுதி வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பெரியளவான மக்கள் கலந்துகொண்டு இறுதி வணக்கத்தை செலுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகள் “மாமனிதர்” என்கிற உயரிய கௌரவத்தை இவருக்கு அளித்தனர்.

(அ)நீதிக்கான செயற்பாடுகள்
இச்சம்பவம் இடம்பெற்று சில நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு சேனன் படை என்ற அமைப்பு உரிமை கோரியது. கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளிலிருந்து விலக வேண்டும் எனவும் அறிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். இவ்வாறு அறிக்கை விடுக்கப்பட்டபோதிலும் தாக்குதல்தாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமிசங்க – தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் இந்தப் படுகொலையின் சந்தேகநபர்கள் எனத் தெரிவித்து, 11.10.2015 அன்று, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்ரர், கஜன் மாமா, எம்.சலீம், மதுசங்க ஆகியோரைக் கைதுசெய்து சிறையிலடைத்தது. இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து, 24.11.2020 அன்று பிணையில் விடுதலைசெய்யப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்திற்கு நிகழ்ந்ததைப் போன்ற பாரிய குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பலமுறை மீளமீள நடந்திருப்பினும், முறையான நீதி கிடைக்காமையால், அது தண்டிக்கப்படாத குற்றங்களாக இருக்கின்றன. மீளமீள நிகழும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன என்ற விமர்சனம் முற்றுப்புள்ளியற்றதாகிறது.

Our Facebook Page

Archives