featued_image

திருகோணமலை | வலுவிழக்கிறதா தமிழர் பலம் | கலாநிதி.சிறீ ஞானேஸ்வரன்

auhtor

on
2021-01-17


By :
Jera Thampi


289 Views

‘நாகத்தையும் தீயகுணமுடையவைனையும் ஒரு சேரக் கண்டால் தீயகுணமுடையவனிடம் இருந்து விலகியிருங்கள். நாகம் தனது தற்காப்புக்காக மட்டுமே தீண்டும். ஆனால் தீயகுணமுடையவன் எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்புக் கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் உங்களைத் தாக்கமுனைவான்’– கௌடில்யர் (சாணக்கியநீதி)

  1. பின்புலம்:

1.1 மாவட்டத்தின் உள்ளூராட்சித் தகவல்கள்

திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேசசபைகளும் இரண்டு நகரசபைகளும் உள்ளடங்களாக மொத்தமாகப் பதின் மூன்று உள்ளூராட்சிசபைகள் இருக்கின்றன. இவற்றுள் பட்டணமும் சூழலும் பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை மற்றும் திருகோணமலை நகர சபை ஆகியன தமிழர்களின் ஆட்சியின் கீழும், பிரதேசசபைகளான குச்சவெளி,தம்பலகாமம், மூதூர் மற்றும் நகர சபையான கிண்ணியா ஆகியன இஸ்லாமியத் தமிழர்களின் ஆட்சியின் கீழும், மொரவௌ (முதலிக்குளம்),கோமரன் கடவெல (குமரக்கடவை),சேருநுவர (சேருவலை) கந்தளாவ (கந்தளாய்), பதவிசிறீபுர ஆகிய பிரதேசசபைகள் சிங்களவர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.

1.2 உள்ளூராட்சி சபைகளில் அங்கத்தவர்களின் இணைப்பு

தமிழர்களின் கட்டுப்பாட்டில் உள்ள திருகோணமலை நகரசபை மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச சபை ஆகிய இரண்டும் ஏனைய இன மக்களின் ஆதரவுடன் தமிழரசுக் கட்சியினால் ஆட்சியமைக்கப்பட்டிருப்பதுடன் வெருகல் பிரதேசசபையானது ஏனைய கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் மக்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் கூட்டாகவே (முழுவதும் தமிழர்கள்) தமிழரின் ஆட்சியில் உள்ளது.

  1. எழுந்துள்ள பிரச்சனை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டணமும் சூழலும் பிரதேசசபையின் ஆட்சியானது தமிழர்களின் வசமிருந்து பேரினவாத பொதுஜன பெரமுன கட்சியின் கைகளில் வீழ்ந்தது. அந்த நாள் திருகோணமலை வரலாற்றின் கறைபடிந்த நாட்களுள் ஒன்றாக வரலாற்றில் பதிவானது.

  1. தவிசாளர் தெரிவு

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் புதிய விகிதாசாரமுறைமையை அறிமுகம் செய்திருந்தது. அதனடிப்படையில் இனங்கள் கலந்து வாழும் வட்டாரங்களைக் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான ஆட்சி நிர்வாகம் என்பது பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள எந்தவொரு கட்சியும் தவறும் இடத்தில் மிகச் சவாலானதாக மாறியது. அவ்வாறான சவாலைச் சமாளிக்கக்கூடிய தலைமைத்துவத்தைக் கொண்டவர்களை தவிசாளர்களாக நிறுத்தவேண்டிய தேவை ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் கட்சிகளுக்கு இருந்தது.

இந்நிலையில் பட்டணமும் சூழலும் பிரதேசசபையின் ஆட்சிப் பொறுப்பானது இளைப்பாறிய மருத்துவ அதிகாரியும் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளராகவும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தவிசாளராகவும் இருந்த திரு. ஞானகுணாளனுக்கு வழங்கப்பட்டது. எவ்வாறு வழங்கப்பட்டது என்றால் அவர் எந்தவொரு வட்டாரத்திலும் நேரடியாகத் தேர்வு செய்யப்படாதநிலையில் செல்வநாயகபுரம் வட்டாரத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்வாகிய உறுப்பினரைப் பதவிநீக்கி அவ்வெற்றிடத்திற்கு இவரை நியமனஞ் செய்தே தவிசாளர் பதவியும் வழங்கப்பட்டது. தவிசாளர் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் 7 உறுப்பினர்கள், ஐக்கியதேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தபால்பெட்டிச் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழுவின் 2 உறுப்பினர்கள், ஈபிடிபி ஒருவர் மற்றும் எஸ்டிபி (வரதர் அணி) கட்சியின் ஒருவர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒருவர் என 15 உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழரசுக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. எதிர்த்துப் போட்டியிட்ட பொதுஜன பெரமுனகட்சியின் ரி.ரத்னாயக்க தனது கட்சியின் 5 வாக்குகளையும் சுதந்திரக்கட்சியின் (கை) 2 வாக்ககளையும் சேர்த்து 7 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

  1. ஆட்சியைப் பிடிப்பதற்காக இதர கட்சிகளுடன் தமிழரசுக் கட்சிசெய்துகொண்ட உடன்பாடு

தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடனும் சுயேட்சைக்குழுவுடனும் ஓர் உடன்பாட்டுக்கு வந்திருந்தது. அதன்படி உபதவிசாளர் பதவியானது முதலிரண்டு வருடங்களுக்கு சுயேட்சைக் குழுவிற்கும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே அவ்வுடன்பாடு.

அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி 3 உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும் அக்கட்சியில் தமிழர்கள் எவரும் இல்லாததால் முதல் 2 வருட உப தவிசாளர் பதவியினை சுயேட்சைக்குழுவிற்கு வழங்கி ஆட்சியமைக்கப்பட்டது. இவ்வாறு உபதவிசாளர் பதவி வழங்கப்பட்டமையானது தமிழர்களைத் தவிர ஒருவரும் ஆட்சிக்கு வரவில்லை என்ற மாயையை திருகோணமலைத் தமிழர்களிடையே ஏற்படுத்தும் முயற்சியாகவே அப்போது கணிக்கப்பட்டது.

  1. ஆட்சிக் காலத்தின்போது பட்டணமும் சூழலும் எதிர்கொண்ட பிரச்சனைகள்

  1. தேர்ந்தெடுக்கப்பட்ட தவிசாளர் ஒரு அரசியல்வாதியாகச் செயற்படாமல் அரச அதிகாரியாகச் செயற்படும் மனநிலையையே கொண்டிருந்தார். அதனால் ஸ்ரீலங்காவில் அதிக வருமானம் உழைக்கும் பிரதேசசபையான பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் மக்கள் பணிகள் சில அரசாங்கத் திணைக்களங்கள் எடுக்கும் மக்கள் வினைத்திறனற்ற பணிகளைப்போல நடைமுறையானது.
  2. வருடாந்தச் செயற்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக வினைத்திறனுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவிசாளரால் முடியாதுபோனது. அது ஆதரவளித்த தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் கடும் விசனங்களுக்குஉள்ளானது.
  3. அதேவேளை மத்தியில் மொட்டு ஆட்சி பரிணமிக்க அக்கட்சியின் பட்டணமும் சூழலும் பிரதேசசசபையின் உறுப்பினர் ரி.ரத்னாயக்க வலுவுள்ளவராக மாறினார். அவ்வலுவை தவிசாளரை ஆட்டிவைக்கப் பயன்படுத்தியதுடன் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் ஆதரவையும் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது. ஏனைய உறுப்பினர்கள் ரி.ரத்னாயக்க ஊடாகத் தமது கிராமத்தின் சில தேவைகளைப் பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் நிறைவேற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
  4. இரண்டு வருடமுடிவில் தனது உபதவிசாளர் பதவியை சுயேட்சைக்குழு உறுப்பினர் இழக்க விரும்பாமல் மேலும் ஒரு வருடத்திற்கு தன்னிச்சையாக நீட்டிக்கொண்டார். ஆதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் அரசியல் வலு தமிழரசுக் கட்சிக்கில்லாது இருந்தது.
  5. மூன்றாவது வருடம் உபதவிசாளர் பதவியை விட்டு சுயேட்சைக்குழு விலகியபோது ஐக்கிய தேசியக் கட்சியானது இரண்டாக உடைந்திருந்தது. அதன்படி பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இருந்த 3 உறுப்பினர்களில் ஒருவர் யானைச் சின்னத்திற்குரியவராகவும் (ரணில்) மற்றைய இருவரும் தொலைபேசிச் சின்னத்திற்கு (சஜித்) உரியவராகவும் மாறினர்.
  6. உடன்பாட்டின்படி ஐக்கிய தேசியக் கட்சியின் எந்த அணிக்கு உபதவிசாளர் பதவியை வழங்குவது என்பதில் தமிழரசுக் கட்சி ரணில் அணியைத் தேர்வு செய்தமை அக்கட்சி விட்ட தவறாக மாறி சஜித் அணியின் இருவரையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கத்தவரையும் தமிழரசுக் கட்சிக்கு எதிராகமாற்றியது.

  1. புதிய தவிசாளர் தெரிவில் அங்கத்தவர்களின் இணைவு

புதிய தவிசாளர் தெரிவில் ரி.ரத்னாயக்கவை பொதுசன பெரமுன 5, சுதந்திரக்கட்சி 2, ஈபிடிபி 1, எஸ்டிபிடி 1, தொலைபேசி 2 மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆகிய 12 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க தமிழரசுக்கட்சியின் 5, சுயேட்சை 2, ஐக்கியதேசிய (யானை) கட்சியின் 1 உறுப்பினர்கள் என 10 பேர் தமிழரசுக் கட்சியினால் முன்மொழியப்பட்டவர்க்கு வாக்கைச் செலுத்தினர்.

  1. எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் ஆபத்து

அடுத்த ஒரு வருடத்திற்குள் குச்சவெளி பிரதேசசபைக்குட்பட்ட தமிழர்களின் உறுதிகள் அற்ற பத்திரங்கள் உள்ளகாணிகள் மற்றும் அரச காணிகளில் சிங்கள பெருந்தேசியவாதத்தின் நடவடிக்கைகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படும் பெரும் ஆபத்தை இவ் ஆட்சிமாற்றம் நிகழ்த்தியுள்ளது. அத்துடன் கன்னியா வெந்நீறூற்று சம்பந்தமாக தமிழர்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளையும் இப்பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கக்கூடிய நிலை உள்ளது. இவ்வாறு நடைபெறும் என உணர்ந்தேனும் ஏனைய கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சிக்கே வாக்களித்திருக்கவேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.

  1. தமிழரசுக் கட்சியின் பலவீனமான செயற்பாடுகள்

பட்டணமும் சூழலும் பிரதேசசபை பாதீடானது வாக்களிப்பிற்கு முன்வைக்கப்பட்டுத் தோல்வியடைந்தது. பாதீடு தோற்கடிக்கப்பட்டநிலையில் உடனடியாக தாம் சாணக்கியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழரசுக் கட்சியின் தலைமை நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் தவிசாளர் தேர்வுசெய்யப்பட்ட முதலாவது அமர்வில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தபோதும் இச்சபை தமது ஆளுகையைவிட்டு இழக்கப்படப்போகின்றது எனத் தெரிந்திருந்தும் அவர்கள் நடவடிக்கை எதுவுமின்றியிருந்தமை அவர்களது சாணக்கிய? தோல்வியாகவே பார்க்கப்படவேண்டும்.

இத்தோல்வியானது தமிழரசுக் கட்சியின் மாவட்டத் தலைமைத்துவமானது வலுவிழந்து போயுள்ளது என்பதை வெளிக்காட்டுவதுடன் திருகோணமலை மாவட்டத்தில் திரு. சம்பந்தரின் ஆதிக்கம் கடும் பாதிப்பக்கு உள்ளாகியிருப்பதையும் இந்த இழப்பு இனங்காட்டியுள்ளது.

Our Facebook Page

Archives